ஜப்பானில் புயலால் மாயமான சரக்கு கப்பல்

0
75
‘தி கல்ப் லைவ்ஸ்டாக்-1’ என்ற சரக்கு கப்பல், 43 சிப்பந்திகளுடனும், சுமார் 6 ஆயிரம் கால்நடைகளுடனும், நியூசிலாந்து நாட்டில் நேப்பியர் துறைமுகத்தில் இருந்து சீனாவில் உள்ள ஜிங்டாங் துறைமுகம் நோக்கி கடந்த 14-ந்தேதி புறப்பட்டது. நேற்று முன்தினம் அதிகாலையில் மேசாக் புயலுக்கு மத்தியில் கிழக்கு சீன கடலில் சென்று கொண்டிருந்தது. ஜப்பானில் ககோஷிமா மாகாணத்தில் உள்ள அமாமி-ஓஷிமா தீவுக்கு மேற்கே 185 கி.மீ. தொலைவில் வந்தபோது புயலில் சிக்கி மாயமானது. முன்னதாக இந்த கப்பலில் இருந்து ஜப்பான் கடலோர காவல் படைக்கு துயர அழைப்பு சென்றுள்ளது.
இந்த நிலையில், ஜப்பான் கடற்படைக்கு சொந்தமான ‘பி-3சி’ என்ற கண்காணிப்பு விமானம், உயிர் காப்பு உடை அணிந்து, ஒருவர் கடலில் குதித்து அலைந்து கொண்டிருந்ததை கண்டது. அவரை அந்த விமானம் பத்திரமாக மீட்டது. அவர், மாயமான சரக்கு கப்பலில் வந்த பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த சிப்பந்தி என தெரிய வந்தது. அவர் நல்ல உடல்நலத்துடன் மீட்கப்பட்டாலும், தான் வந்த கப்பல் கவிழ்ந்து மூழ்கி விட்டதாக கூறி உள்ளார். இந்த தகவலை ஜப்பான் கடலோர காவல் படையின் பிராந்திய தலைமை அலுவலக செய்தி தொடர்பாளர் யுய்சிரோ ஹிகாஷி தெரிவித்தார்.
author avatar
Parthipan K