மணமகளே இல்லாமல் நடந்த திருமணம் : ஆச்சரியப்படுத்திய புது யுக தம்பதிகள்!

0
87

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி கோரத்தாண்டவம் ஆடிவருவதால் கடந்த மாதம் பிரதமர் மோடி மார்ச் 24ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்த இன்னும் கால அவகாசம் தேவைப்பட்டதால் அந்த ஊரடங்கை மே 3ஆம் தேதி வரை நீடித்து உத்தரவிட்டார் மோடி.

இந்த அதிரடி அறிவிப்பு வெளியானதால் ஏப்ரல் 14ம் தேதிக்குப் பிறகு பல தரப்பினர் ஏற்பாடு செய்து வைத்த நிகழ்ச்சிகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் வேறு வழியின்றி தங்கள் குடும்ப நிகழ்ச்சிகளை ஊரடங்கு முடிந்த பிறகு நடத்தலாம் என்று ஒத்தி வைக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் தார்காடில் மணமகளே இல்லாமல் வித்தியாசமான திருமணம் ஒன்று நடந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. இஸ்லாமிய முறையில் நடந்த இந்த திருமணம் முழுக்க முழுக்க ஆன்லைனிலேயே நடந்தது தான் இந்த ஆச்சர்யத்திற்கு காரணம்.

இந்த நிகழ்ச்சியில் மணமகன் தார்காட்டில் உள்ள அவரது வீட்டில் தனது பெற்றோருடன் தயார் நிலையில் இருக்கிறார். அதே நேரத்தில் மணமகள் தஜாமா தலையில் முக்காடு போட்டபடி கோபாலில் உள்ள தங்கள் வீட்டில் பெற்றோருடன் இருக்கிறார்.

மணமக்கள் இருவரும் தங்கள் தாய் தந்தையருடன் வீடியோ கால் மூலம் இணைகிறார்கள், இவர்களுடன் ஜமாத்தினர் மற்றும் உறவினர்கள் வீடியோ கால் செய்து இணைகிறார்கள். ஜாமாத்தினர் வழிமுறைகளை சொல்ல சொல்ல அதை அவ்வாறே செய்து முடித்த மணமக்களுக்கு ஆன்லைனில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்து முடிந்தது.

ஊரடங்கு கடந்த ஏப்ரல் 14ஆம் தேதியோடு நடந்து முடிந்திருந்தால் இந்த திருமணம் இயல்பாய் நடந்து முடிந்திருக்கும் என்று உறவினர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த ஊரடங்கு நடவடிக்கைகள் முடிந்த பிறகு மணப்பெண்ணை வீட்டிற்கு அழைத்து வர உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

author avatar
Parthipan K