அன்புமணிக்கு அமைச்சர் பதவி! பாமகவை வளைத்து போட பாஜக போட்ட திட்டம்!!

0
214
#image_title

அன்புமணிக்கு அமைச்சர் பதவி! பாமகவை வளைத்து போட பாஜக போட்ட திட்டம்!!

ஒரு சில மாதங்களில் மக்களவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் அரசியல் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. தேசிய அளவில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்களது கூட்டணியை வலுப்படுத்தவும் மேலும் கூட்டணிக்குள் புதிய கட்சிகளை இணைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தமிழகத்தில் ஆளும் திமுக தலைமையில் ஏற்கனவே உள்ள கூட்டணியே இந்த மக்களவை தேர்தலிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பகிர்வு குறித்த ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் எதிர்கட்சியான அதிமுக பாஜகவுடன் கூட்டணி இல்லை என ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் இரு கட்சிகளும் தனித் தனியே போட்டியிட அறிவித்துள்ளன. அந்த வகையில் இரு தரப்பிலும் தங்கள் கூட்டணியை வலுப்படுத்த மற்ற கட்சிகளை இணைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பாமக, தேமுதிக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை தங்கள் கூட்டணியில் இணைக்க பாஜக மற்றும் அதிமுக தீவிரமாக செயல்பட்டு வந்தன. அந்த வகையில் தமிழ் மாநில காங்கிரஸ் பாஜகவுடன் கூட்டணி வைப்பதாக அறிவித்துள்ளது.அடுத்ததாக பாமக மற்றும் தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இதில் தேமுதிகவுக்கு 14 மக்களவை தொகுதி மற்றும் ஒரு ராஜ்ய சபா தொகுதி வேண்டுமென அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா கேட்டார். இதுகுறித்து அதிமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாகவும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியெல்லாம் இல்லை எனவும், 2 அல்லது 3 மக்களவைத் தொகுதிகள் வேண்டுமானால் தருகிறோம் என்றும் பதில் அளித்ததாகவும் செய்திகள் வெளியாகின. இதையடுத்து தேமுதிக பாஜகவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிக தொகுதிகள் கிடைக்கும் பட்சத்தில் அக்கட்சி பாஜக கூட்டணியில் இணையவே வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

இந்நிலையில் பாமக யாருடன் கூட்டணி என்பது குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது பாஜக – பாமக கூட்டணியானது கிட்டதட்ட உறுதியானதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அதிமுக மற்றும் பாமக கூட்டணி தொடர்பாக சேலத்தில் ரகசிய பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் அதிமுகவுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் இப்படி ஒரு தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், அன்புமணியை நேரடியாக தொடர்பு கொண்டு பேசியதாகவும், இந்த முறை கூட்டணியில் இணைந்தால் பாமகவுக்கு மத்திய அமைச்சர் பதவி தருவதாக கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த அழைப்பை அன்புமணி ராமதாஸ் ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் மருத்துவர் ராமதாஸுக்கு பாஜகவுடன் கூட்டணி வைக்க விருப்பமில்லை என்றும், அதிமுக கூட்டணியில் இணையலாம் என்று கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. பாஜகவில் இணைவதா அல்லது அதிமுகவில் இணைவதா என்பது குறித்து இரு தலைவர்கள் மத்தியிலும் வேறு வேறு கருத்துக்கள் நிலவி வருவதால் தமிழக அரசியலில் பரபரப்பு கூடியுள்ளது.

அதிமுக கூட்டணியில் பாமக இணைந்தால் 7 மக்களவை தொகுதிகளும் 1 மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் கொடுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் ஆனால் பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 3 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகள் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி மற்றும் ஒரு அமைச்சர் பதவி கொடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாகவும் மீதமுள்ள தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பாஜக கூட்டணியில் தற்போது வரை புதிய நீதிக்கட்சி, ஐஜேகே மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இருப்பது உறுதியாகியுள்ளது. பாமக மற்றும் தேமுதிக குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் பாஜக மற்றும் கூட்டணியில் வேறு எந்தெந்த கட்சிகள் இணையவுள்ளன என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.