கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது.. முதல்வர்!!

0
74

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது என்று முதலமைச்சர் கூறினார்.

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு பணிகள், வளர்ச்சி பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொண்டார். மேலும், வேலூர் மாவட்டத்தில் ரூ.73.53 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். அதுமட்டுமல்லாமல் ரூ.169.77 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார் முதலமைச்சர்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது. கொரோனா தொற்றை கண்டறிவதற்கு வேலூர் மாவட்டத்தில் 2,609 காய்ச்சல் முகாம்களும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3,350 காய்ச்சல் முகாம்களும் நடத்தப்பட்டுள்ளன. மேலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் சுய உதவிக்குழுக்களுக்கு மூன்று ஆண்டுகளில் ரூபாய் 583.45 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் பிற பகுதிகளைச் சேர்ந்த பெண் தொழிலாளர்களுக்கு விடுதி கட்ட பரிசீலிக்கப்பட்டு வருகிறது. மாவட்டவாரியாக சிறப்பு குறைதீர் தீர்வு காணப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை வேலூர்- 11,667, ராணிப்பேட்டை- 7,524, திருப்பத்தூர்- 4,650. மேலும், வேலூர்- 3,882 பேர், ராணிப்பேட்டை- 3,878 பேர், திருப்பத்தூர்- 3,540 பேர் இரு சக்கர வாகன திட்டத்தில் பயனடைந்துள்ளனர்.

தென்பெண்ணை ஆறு -பாலாறு இணைப்புத் திட்டம் ரூ. 648 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வருகின்றன. நேதாஜி மார்க்கெட் வியாபாரிகளின் வேண்டுகோள் ஏற்கப்பட்டு புதிய மார்க்கெட் கட்டித் தரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கொரோனா தொற்றை தடுக்க குடும்ப அட்டையில் பெயர் உள்ள அனைவருக்கும் இலவசமாக முகக்கவசம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். கொரோனா தொற்றால் அரசுக்கு வருவாய் இழப்பு இருந்தாலும் மக்களுக்கான திட்டங்கள் குறைவின்றி நிறைவேற்றப்பட்டு வருகிறது என்று கூறினார்.

author avatar
Parthipan K