இரண்டு கொரோனா நோயாளிகளுக்கு ஒரு பெட்! தலைநகரின் அவல நிலை…!

0
152

இரண்டு கொரோனா நோயாளிகளுக்கு ஒரு பெட்! தலைநகரின் அவல நிலை…!

இந்தியவில் கொரோனா பாதிப்பு காட்டுத்தீ போன்று பரவி வருகிறது. நேற்று காலை நிலவரப்படி நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக 2 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நேற்று மாலை நிலவரப்படி, மகாராஷ்டிராவில் 61,695 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தலைநகர் டெல்லியில் 16,699 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன.

பல தனியார் மருத்துவமனைகளை முழுமையாக கொரோனா சிகிச்சை நடுவமாக டெல்லி அரசு அறிவித்து, சிகிச்சை அளித்து வருகிறது. அப்படி இருந்தும், தொற்று பாதிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அந்த மருத்துவமனைகளிலும் படுக்கை இல்லாத சூழல் நிலவுகிறது.

இதனால், ஒரே படுக்கையில் தொற்று பாதித்த இரண்டு பேரை படுக்க வைத்து சிகிச்சை அளிக்கும் அவல நிலைக்கு டெல்லி தள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் 1,500 படுக்கைகள் கொண்ட மிகப்பெரிய கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் ஒன்றான, லோக் நாயக் ஜெய் நாராயன் மருத்துவமனையில் படுக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்டன.

இதனால், தொற்று பாதித்தவர்களை ஒரே படுக்கையில் இரண்டு பேர் என படுக்க வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர், ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுபவர்களும் அடங்குவர்.

அவசர ஊர்தி கிடைக்காததால் அதிகமானோர் அந்த மருத்துவமனைக்கு பேருந்துகளிலும், ஆட்டோக்களிலும் சென்று கொண்டிருக்கிறார்கள். பாதிப்பு எப்படியோ, அதே போல உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளதால், பிணவறையும் நிரம்பியுள்ளது. தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை வாங்க ஏராளமானோர் பிணவறை முன்பு காத்துக்கிடக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலைக்கு மிகவும் முக்கிய காரணம் பொதுமக்கள் கட்டுப்பாடுகளை பின்பற்றவில்லை என்பதுதான் என மருத்துவர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். டெல்லியில் தற்போது, இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்கள் ஊரடங்கு என அடுத்தடுத்த கட்டுப்பாடுகளை டெல்லி மாநில அரசு விதித்து வருகிறது.