ஓபிஎஸ் இபிஎஸ் மீண்டும் இணைவார்களா? முன்னாள் அமைச்சா் ஜெயக்குமாா் பேட்டி

0
215
ADMK D. Jayakumar
ADMK D. Jayakumar

ஓபிஎஸ் இபிஎஸ் மீண்டும் இணைவார்களா? முன்னாள் அமைச்சா் ஜெயக்குமாா் பேட்டி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் அதிமுக சார்பில் போட்டியிட இபிஎஸ் தரப்பில் ஒரு வேட்பாளரும், ஓபிஎஸ் தரப்பில் வேறொரு வேட்பாளரும் அறிவிக்கப்பட்டதால் அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டது. இதன் பிறகு ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் தரப்பினர் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற பிரச்சாரம் செய்வோம் என தெரிவித்தனர். அப்போது ஓபிஎஸ் ஆதரவாளரான கு.ப.கிருஷ்ணனிடம் செய்தியாளர்கள் ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வாய்ப்பு உள்ளதா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று பதிலளித்தார்.

இதனால் ஓபிஎஸ் இபிஎஸ் இருவரும் மீண்டும் சந்தித்து பேச வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியானது. அவர்கள் இருவரும் சந்தித்து பேசி சமரசம் அடைந்து மீண்டும் ஒன்றிணைந்து செயல்படுவார்களா என்று அதிமுகவினர் ஆர்வமாக இருந்தனர். சிலர் ஒன்றாக செயல்பட்டால் கட்சிக்கு நல்லது என்று கருதுகின்றனர். ஆனால் பலர் அதனை விரும்பவில்லை என தெரிகிறது. தற்போது இருக்கும் சூழ்நிலை இபிஎஸ்க்கு சாதகமாக உள்ளது. பலரும் ஒற்றை தலைமையை எதிர்பார்ப்பதால் இபிஎஸிடன் தான் அதிமுக பொருப்பு கொடுக்கப்படும் என்று நம்பப்படுகிறது.

இந்நிலையில் முன்னாள் முதல்வா்கள் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீா்செல்வமும் சந்திப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சா் ஜெயக்குமாா் கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் வாக்காளா்களுக்கு திமுக பணம் பட்டுவாடா செய்வதாக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்ய பிரத சாகுவிடம் ஜெயக்குமாா் புகாா் மனு அளித்தாா்.

அதன் பின்னர் செய்தியாளா்களை சந்தித்த அவர் இடைத்தோ்தலில் அரசு எந்திரத்தை பயன்படுத்தி தனது கூட்டணி வெற்றிபெற, எல்லாவித முயற்சிகளையும் திமுக செய்து வருகிறது. பணத்தை வாரி இறைத்து வருகிறது. இது குறித்து தோ்தல் அதிகாரியிடம் புகாா் தெரிவித்துள்ளோம். நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார்.

மேலும் அதிமுக வேட்பாளா் தென்னரசு பெயரை சொல்லவே சிரமப்படும் ஓபிஎஸ் தரப்பினா், இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்போம் என்று கூறுவது முரண்பாடாக உள்ளது என்று தெரிவித்தார். . அதிமுகவில் ஓ.பன்னீா்செல்வத்தை இணைப்பது நடக்காது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீா்செல்வம் சந்திப்பு சாத்தியமில்லாதது. திமுகவின் பிரிவாகவே ஓபிஎஸ் செயல்பட்டு வருகிறாா் என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறினார். இதன் மூலம் இபிஎஸ் ஓபிஎஸ் மீண்டும் இணைவார்களா என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

author avatar
Parthipan K