டைரி மில்க்கில் ஊர்ந்த புழுக்கள்! சாப்பிட தகுதியற்றது என்று அறிவித்த மாநில அரசு!

0
137
#image_title

டைரி மில்க்கில் ஊர்ந்த புழுக்கள்! சாப்பிட தகுதியற்றது என்று அறிவித்த மாநில அரசு!

வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் உலகத்தில் வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை பழக்கம் முற்றிலும் மாறிவிட்டது. உணவே மருந்து என்ற நிலை மாறி மருந்தே உணவு என்ற நிலைக்கு வந்துவிட்டோம். காரணம் உணவு முறையில் ஏற்பட்ட மாபெரும் மாற்றம் தான். இரசாயம் இல்லாத காய்கறி, பழங்களை பார்ப்பது மிக மிக அரிதாகி விட்டது.

கடந்த சில வாரங்களுக்கு முன் குழந்தைகள் விரும்பி உண்ணும் இனிப்பு பண்டமான பஞ்சு மிட்டாயில் கலக்கப்படும் ரோடமின் பி என்ற நிறமியால் கல்லீரல் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புள்ளதாக ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பஞ்சு மிட்டாய் விரும்பிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த ரோடமின் பி நிறமி ஊதுபத்தி, தீப்பெட்டியில் வண்ணம் பூச பயன்படுத்தும் ஒருவித ஆபத்தான இரசாயன பொருள் ஆகும். இந்த நிறமியை பஞ்சு மிட்டாய்களுக்கு பயன்படுத்தி விற்பனை செய்வது உறுதியானதால் தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பதற்கு அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில் குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவரின் விரும்ப சாக்லேட்டான டைரி மில்க்கில் புழுக்கள் ஊர்ந்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் இயங்கி வரும் பிரபல சூப்பர் மார்க்கெட் ஒன்றில் ராபின் சாக்கியஸ் என்பவர் வாங்கிய டைரி மில்க்கில் வெள்ளை புழுக்கள் ஆங்காங்கே ஊர்ந்து சென்றிருக்கிறது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.

இந்த வீடியோ வைரலான நிலையில் தெலுங்கானா மாநில உணவு ஆய்வகம் டைரி மில்க்கை சோதனை செய்தது. சோதனையில் டைரி மில்க் உண்பதற்கு தகுதியற்றது என்று உணவு ஆய்வகம் அறிக்கையாக வெளியிட்டு இருக்கின்றது. குழந்தைகள் விரும்பி உண்ணும் பண்டங்கள் அவர்களின் உயிருக்கே ஆபத்தான விஷமாக மாறி வருவதால் பெற்றோர்கள் அதிர்ச்சி கலந்த கலக்கத்தில் இருக்கின்றனர்.