அதானி நிறுவன முறைகேடுகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு- உச்ச நீதிமன்றம் அதிரடி 

0
345
#image_title

அதானி நிறுவன முறைகேடுகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு- உச்ச நீதிமன்றம் அதிரடி 

அதானி நிறுவனம் முறைகேடு தொடர்பான வழக்கில் சீலிட்ட கவரில் மத்திய அரசு தந்த பரிந்துரையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது, மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைப்போம் என்றும் உத்தரவிட்டுள்ளது. அதானி குழுமம் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டென்பர்க் ஆய்வு நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை ஜனவரி 24ம் தேதி வெளியிட்டது. நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்திலும் இது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் அதானி விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது மத்திய அரசு மற்றும் செபி அமைப்பு தரப்பில் துஷார் மேத்தா ஆஜராகினார். 

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஏனெனில் விதிகளை மீறி 75 சதவீத பங்குகளை அதானி நிறுவனமே வைத்துள்ளது. அதை வெளிநாடுகளில் உள்ள ஆப்ஷோர் ஷெல் நிறுவனங்களில் முதலீடு செய்து, சந்தையில் பங்குகளின் மதிப்பை அதிகரிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளனர். எனவே அதானி நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதா? சந்தை அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளதா? என்பதை விரிவாக விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் முன்னிலையில் வலியுறுத்தினார். இதுகுறித்து தலைமை நீதிபதி சந்திரசூட் கூறுகையில், இந்த விவகாரத்தில் மத்திய அரசின் சீலிடப்பட்ட கவரின் பரிந்துரையை ஏற்க முடியாது.  மத்திய அரசு மட்டுமின்றி எந்த தரப்பிடம் இருந்தும் பரிந்துரை பெயர்களை பெறப்போவதில்லை. உச்சநீதிமன்றம் தான் குழு உறுப்பினர்கள் உட்பட அனைத்தையும் இறுதி செய்யும் என்று தெரிவித்தார்.

அதானி நிறுவனம் முறைகேடு விவகாரத்தில் கண்டிப்பாக உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும். மேலும் இந்த விவகாரத்தை விசாரணை மேற்கொள்ள தற்போது பதவியில் இருக்கும் நீதிபதியை நியமிக்க இயலாது என்பதால், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் உச்ச நீதிமன்றம் அமைக்கும் நிபுணர்கள் குழுவுக்கு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகளும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும்  உத்தரவிட்டார். மேலும் இது குறித்த விரிவான விசாரணை கோரிய வழக்குகள் மீதான தீர்ப்பை தலைமை நீதிபதி ஒத்திவைத்தார்.

 

author avatar
Parthipan K