தமிழக பாஜகவிற்கு அதிமுக ஜெயக்குமார் கடும் எச்சரிக்கை!

0
245
#image_title
தமிழக பாஜகவிற்கு அதிமுக ஜெயக்குமார் கடும் எச்சரிக்கை!
பாரதிய ஜனதா கட்சியோடு தேசிய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக அங்கம் வகித்து வருகிறது. அதே சமயத்தில் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக அங்கம் வகித்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டு, தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அனைவரின் சொத்து பட்டியலையும் விரைவில் வெளியிட போவதாகவும், தவறிழைத்தவர்கள் யாரும் தங்களிடம் இருந்து தப்ப முடியாது என கூறியிருந்தார்.
இந்நிலையில் அண்ணாமலையின் இந்த பேச்சு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த இரண்டு நாட்களாக பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். பதிலுக்கு பாஜக தமிழக விளையாட்டு பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டியும் கடுமையாக விமர்சித்து வந்தார்.
இதனிடையே இன்று அதிமுக சார்பில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்த ஜெயகுமார், கர்நாடகாவில் அதிமுக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் இடையே எந்தவித பாதிப்பும் கிடையாது. ஏற்கனவே கர்நாடகாவில் நாங்கள் வேட்பாளரை நிறுத்துவது என்று முடிவு செய்து தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சட்டமன்ற தொகுதியில் தமிழர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள பகுதி கண்டிப்பாக அந்த இடத்தில் வெற்றி பெறுவோம்.
தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி உள்ளது.  அதில் பிஜேபி உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி இருக்கும் என எங்களது பொது செயலாளர் கூறியுள்ளார். அதனை அமித்ஷாவும் உறுதிப்படுத்தி உள்ளார். தமிழ்நாடு வேறு கர்நாடகா வேறு, சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கும். ஒரு சித்தாந்தம் இருக்கும். சித்தாந்தம் ரீதியிலும் சரி கொள்கை ரீதியிலும் சரி பிஜேபியில் இருந்து அதிமுக வேறுபடுகிறது.  ஆனால் கூட்டணியில் உள்ளது.
கூட்டணியை பொருத்தவரை சித்தாந்தத்திற்கும் கொள்கைக்கும் சம்பந்தம் கிடையாது. காங்கிரஸ் கூட்டணியில் கம்யூனிஸ்டுகள் சேர மாட்டோம் என்று கூறினார்கள், ஆனால் தற்போது கூட்டணியில் உள்ளார்கள். அதேபோல கூடா நட்பு கேடாய் முடியும் என கலைஞர் கூறினார். காங்கிரஸ் உடன் கூட்டணி இல்லை என்று கூறினார். தற்போது கூட்டணியில் தான் உள்ளார்கள், அது வேறு இது வேறு.
நோன்பு திறப்பு நிகழ்ச்சி என்பது தொன்று தொட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதா காலத்தில் இருந்து இது நடைமுறையில் உள்ளது. இஸ்லாமியர்களை கொச்சைப்படுத்தும் விதத்தில் நடந்து கொள்ளக் கூடாது. பிஜேபியை பொறுத்தவரை அடக்கி வாசிப்பது நல்லது. அது அவர்களுக்கு வருகின்ற தேர்தலுக்கு நல்ல விஷயமாக இருக்கும்.
அடக்கி வாசிக்க வில்லை என்றால் வருகின்ற தேர்தலில் அது குறித்து அவர்களுக்கு புரியும், இதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கின்றேன். மீனவ மக்களின் கோரிக்கையை ஏற்று இந்த அரசு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர வேண்டும் என்று தெரிவித்தார். அம்மா உணவகங்களை பொருத்தவரை லாப நோக்கத்தோடு செயல்படாமல் சேவை மனப்பான்மையோடு அரசு செயல்பட வேண்டும். இதில் லாப நஷ்ட கணக்கை பார்க்க கூடாது என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஜெயக்குமார் பாஜகவிற்கு எச்சரிக்கை விடுக்குமாறு  கூறியிருப்பது அதிமுக பாஜக தமிழக கூட்டணியில் மிகப் பெரிய விரிசலை ஏற்படுத்தி வருவதாகவும், டெல்லி மேலிட தலைவர்கள் சமாதானமும், சமரசமும் என்று கூறினாலும் கூட, இங்கு நடைபெறுகின்ற வார்த்தை போரினை பார்த்தால் விரிசல் இன்னும் விரிவடையும் போல தான் தெரிவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.