பிரதமர் மோடி கட்-அவுட் மீது மோதிய இளைஞர்களை கைது செய்த கோவா போலீஸ் – கடும் விமர்சனத்திற்குள்ளான சம்பவம்!!

0
143
#image_title

பிரதமர் மோடி கட்-அவுட் மீது மோதிய இளைஞர்களை கைது செய்த கோவா போலீஸ் – கடும் விமர்சனத்திற்குள்ளான சம்பவம்!!

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் தங்களது பிரச்சாரத்தினை துவங்கி தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்கள். தேர்தல் நடத்துவதற்கான பணிகளும் ஒருபுறம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் பாஜக கட்சியினர் மற்ற கட்சியினரை விட முழு மூச்சாக பிரதமர் மோடியை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார்கள். இதன் காரணமாக பிரதமர் மோடியின் பேனர்கள், கட்-அவுட்கள் என ஆங்காங்கே வைத்து அமர்க்களப்படுத்தி கொண்டுள்ளனர்.

மேலும், ரயில் நிலையம் போன்று மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் செல்ஃபீ பாயிண்டுகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த செல்ஃபீ பாயிண்டுகளை நியாயவிலை கடைகளிலும் வைக்க வேண்டும் என்று முடிவு செய்த மத்திய அரசு, அதற்கான உத்தரவை தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அளித்ததாக தெரிகிறது. ஆனால் அந்த உத்தரவினை மாநில அரசுகள் ஏற்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

பரபரப்பினை ஏற்படுத்திய சம்பவம்

இதற்கிடையே கோவாவில் மார்கோவா என்னும் பகுதியில் கரேபந்த் என்னும் இடத்தில் பிரதமர் மோடியின் கட்-அவுட் மீது கால் இடறி விழுந்த இளைஞர்களை கோவா போலீஸ் கைது செய்துள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘பிரதமர் மோடியின் கட்-அவுட் மீது விழுந்த சுனில் தொட்டமணி, கணேஷ்ரவி நாரதன்வி, மஞ்சுநாத் உள்ளிட்ட 3 இளைஞர்களை கைது செய்துள்ளோம். அவர்கள் மூவர் மீதும் குற்றவியல் நடைமுறை சட்டமான சிஆர்பிசி பிரிவின் 151ம் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளனர். தொடர்ந்து, ‘பிரதமரின் கட்-அவுட்டிற்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை’ என்று தெரிவித்த போலீசார், ‘எனினும் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ள நிலையில், பொதுமக்கள் நடமாடும் பகுதிகளில் கட்-அவுட்டுகளை வைக்காமல் அதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டும் வைக்க வேண்டும் என்னும் கோரிக்கை தற்போது பொதுமக்கள் தரப்பில் எழுந்துள்ளது.