Saturday, November 16, 2024
Home Blog Page 4935

காயத்துடன் தவித்தவருக்கு கடவுள்போல உதவிய காவலர்! மனதை நெகிழவைத்த புதுச்சேரி சம்பவம்..!!

0

காயத்துடன் தவித்தவருக்கு கடவுள்போல உதவிய காவலர்! மனதை நெகிழவைத்த புதுச்சேரி சம்பவம்..!!

புதுச்சேரி அண்ணா நகர் பகுதியில் காரில் வந்த மர்ம நபர்கள் வயதான ஒருவரை காயத்துடன் சாலை ஓரமாக இறக்கி விட்டதாக, புதுச்சேரி உருளையன்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. இந்த தகவலை அடுத்து மோகன் என்ற காவலர் சம்பவ இடத்திற்கு விரைந்தார்.

சம்பவ இடத்தில் ஒரு பெரியவர் உடலில் காயங்களுடன் சோர்ந்து பேசமுடியாத அளவிற்கு உட்கார்ந்திருந்தார். இதனை கண்ட காவலர் மோகன் அவரிடம் விசாரிக்க ஆரம்பித்தார். முதியவரால் பேச முடியாமல் பசியால் தவிப்பதை மோகனால் உணர முடிந்தது. இதனையடுத்து உணவு வாங்கி வந்து அவரே ஊட்டிவிட்டார். பின்னர் முதியவரை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்த்தார். முதியவரிடம் எந்த பதிலும் வெளி வந்ததாக தெரியவில்லை.

இந்நிலையில், முதியவரின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு முதியோர் இல்லத்தில் சேர்த்துள்ளார். யார் ஒருவருக்கு தானே உணவு ஊட்டிய சம்பவம் மனதை நெகிழ வைத்துள்ளது. சமூகத்தின் மேல் பொறுப்புள்ள ஒரு காவலராக செயல்பட்ட மோகன் அவர்களை பலரும் பாராட்டி வருகின்றனர். முதியவர்களை வீட்டைவிட்டு விரட்டுவதும் அவர்களை புறக்கணிப்பதும் சமீப காலமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மகேஷ் பாபு சம்பளம் வாங்கும் விதம்! தமிழ் ஹிரோக்களும் பின்பற்றலாமே?

0

மகேஷ் பாபு சம்பளம் வாங்கும் விதம்! தமிழ் ஹிரோக்களும் பின்பற்றலாமே?

தயாரிப்பாளர்களின் மேல் அதிக சுமை வைக்காமல் நடிகர் மகேஷ் பாபு தன்னுடைய படங்களின் சம்பளத்தை வித்தியாசமான முறையில் பெற்றுக்கொண்டு வருகிறார்.

பெரிய நடிகர்கள் படங்கள் ரிலிஸாகும் அதை அதிக விலைக்கு வாங்கி அதிக டிக்கெட் கட்டணத்தில் விற்று அதிக லாபம் பார்க்கலாம் என விநியோகஸ்தர்கள் கணக்குப் போட்டு கையை சுட்டுக் கொள்வது வாடிக்கையாகி உள்ளது. இதற்கு முக்கியக் காரணமாக சொல்லப்படுவது ரசிகர்களின் வெறியும் படத்தின் பட்ஜெட் அதிகமாக இருப்பதும் தான் என சொல்லப்படுகிறது. இந்த பட்ஜெட் ஏற்றத்துக்குக் காரணம் கட்டுக்கடங்காமல் செல்லும் நடிகர்களின் சம்பளம்தான்.

அதனால் படங்கள் நஷ்டமடையும் போது நடிகர்களின் நஷ்ட ஈடு கேட்டுப் போராட்டம் நடத்தும் அளவுக்கு செல்கிறது. படத்தின் பட்ஜெட்டில் பாதிக்கும் மேல் சம்பளமாக நடிகர்கள் பெறுவதால் தயாரிப்பாளர்கள் மிகப்பெரும் கடன்சுமைக்கும் ஆளாகின்றனர். இதை மாற்றும் விதமாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ்பாபு வித்தியாசமான முறையில் சம்பளம் பெற்றுக்கொள்கிறார்.

மகேஷ் பாபு, ராஷ்மிகா மற்றும் விஜயசாந்தி ஆகியோரின் நடிப்பில் சங்கராந்தி பண்டிகையை தொடர்ந்து சரிலேறு நீக்கவேரு என்ற படம் வெளியாகி வெற்றி பெற்றது. இந்த படத்துக்காக மகேஷ் எந்த வொரு சம்பளத்தையும் வாங்கிக் கொள்ளவில்லை. ஆனால் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ், சாட்டிலைட் ரைட்ஸ், வெளிநாட்டு உரிமை ஆகியவற்றை மூன்றாவது தயாரிப்பாளர் என்ற முறையில் பெற்றுக்கொண்டுள்ளார். இதனால் தயாரிப்பாளருக்கு பணச்சுமை ஏற்படாமல் படத்தை திட்டமிட்ட செலவில் தயாரித்துள்ளார். இதனால் தயாரிப்பாளருக்கும் நல்ல லாபம் கிடைத்துள்ளது. அதே போல மகேஷ் பாபுவுக்கும் நல்ல வருவாய் கிடைத்துள்ளது

தெலுங்கு சினிமாவின் மார்க்கெட் படி மகேஷ் பாபுவின் தற்போதைய சம்பளம் 30 கோடி ரூபாய். சரிலேரு நீக்கவேரு படத்தில் அவர் வாங்கிய உரிமைகளை விற்றதன் மூலம் 80 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது வழக்கமான அவரது சம்பளத்தை விட 250 சதவீதம் அதிகம் ஆகும்.

இந்த முறையால் அதிக வருவாய் வருவதால் இனி வரும் படங்களில் எல்லாம் இதே முறையில் உரிமைகளை வாங்கிக் கொள்ள இருப்பதாக சொல்லப்படுகிறது. இதைப் போன்ற முறையை தமிழ் சூப்பர் ஸ்டார் நடிகர்களும் பின்பற்றினால் அவர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் லாபம் கிடைக்கும் என திரை வல்லுனர்கள் சொல்லியுள்ளனர்.

முதல் டெஸ்ட் யாருக்கு வாய்ப்பு:பண்ட்டா? சஹாவா?

0

முதல் டெஸ்ட் யாருக்கு வாய்ப்பு:பண்ட்டா? சஹாவா?

நியுசிலாந்து ஏ அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட்டுக்கு முதல் டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு அளிக்கப்படலாம் என தெரிகிறது.

தோனியின் ஓய்வுகாலம் நெருங்கிய வேளையில் அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை தேட வேண்டிய கட்டாயத்தில் இருந்த இந்திய அணி ஐபிஎல் கண்டுபிடிப்பான ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பளித்தது. அவரும் முதலில் சிறப்பாக விளையாண்டாலும் அதன் பின் வரிசையாக சொதப்ப ஆரம்பித்தார்.

அதனால் முதலில் டெஸ்ட்டில் இருந்து அவர் தூக்கப்பட்டார். அதன் பிறகு டி 20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வந்த அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தலையில் அடிபட்டதால் தொடரில் இருந்து விலகினார். அதனால் பகுதிநேரக் கீப்பரான ராகுல் அந்த பொறுப்பை ஏற்றார். இரு போட்டிகளிலும் சிறப்பாக பேட் செய்து கீப்பிங்கும் செய்தார். இதனால் அவரேக் கீப்பாராக தொடர்வார் என பேச்சுகள் எழுந்துள்ளன.

இதுபற்றி பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியிடம் கேள்வி எழுப்பியபோது ‘அணித் தேர்வு என்பது கேப்டனும் தேர்வுக்குழு தலைவர்களும் முடிவு செய்ய வேண்டியது. அதனால் பண்ட் விளையாடுவதும் விளையாடாமல் போவதும் விராட் கோலி எடுக்கும் முடிவு’ என சொல்லியுள்ளார்.

இந்நிலையில் சமீபகாலமாக விக்கெட் கீப்பராக இருக்கும் சஹாவின் ஆட்டத்திறனும் சிறப்பாக இல்லை. நேற்று முடிந்த நியுசிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ரிஷப் பண்ட் 65 பந்துகளில் 70 ரன்களை சேர்த்து சிறப்பாக விளையாடினார். இதனால் தொடங்க இருக்கும் நியுசிலாந்து அணிக்கெதிரான பயிற்சி போட்டியில் இருவரில் யார் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்படுவார்கள் என்ற குழப்பம் எழுந்துள்ளது. இந்நிலையில் அணியில் ராகுல் என்னும் தற்காலிக விக்கெட் கீப்பரும் இருப்பதால் குழப்பமான சூழல் உருவாகியுள்ளது. எப்படியாகினும் பண்ட்டுக்கு மேலும் சில வாய்ப்புகள் கொடுக்கப்படும் எனத் தெரிகிறது.

மீண்டும் எழுந்த புர்கா சர்ச்சை – எழுத்தாளருடன் ஏ ஆர் ரஹ்மான் மகள் வாக்குவாதம்!

0

மீண்டும் எழுந்த புர்கா சர்ச்சை – எழுத்தாளருடன் ஏ ஆர் ரஹ்மான் மகள் வாக்குவாதம்!

ஏ ஆர் ரஹ்மானின் மகள் கதீஜா புர்ஹா அணிந்திருப்பது தொடர்பாக கருத்து தெரிவித்த எழுத்தாளர் தஸ்ரிமா நஸ்ரினுக்கு சமூகவலைதளத்தில் பதிலளித்துள்ளார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஏ ஆர் ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் 10 ஆவது ஆண்டுவிழாவில் கலந்துகொண்டார். அவருடன் அவரது மூத்த மகள் கதீஜா ரஹ்மானும் கலந்துகொண்டார். இருவருக்கும் இடையிலான கேள்வி பதில் செஷன் ரசிகர்களைக் கவர்ந்திழுக்க வேறு விதமான ஒரு சர்ச்சையும் கிளம்பியது.

கதீஜா புர்கா ஆடை அணிந்து இருந்ததால் ஏ ஆர் ரஹ்மானை பிற்போக்குவாதியாக சித்தரித்து நிறைய விமர்சனங்கள் எழவே, அதற்குப் பதிலளித்த கதீஜா ரஹ்மான் ‘இது நான் தேர்ந்துகொண்ட பாதை… இதற்கும் எனது தந்தைக்கும் சம்மந்தம் இல்லை. நான் எடுக்கும் முடிவுகளுக்கு என் தந்தை எப்போதும் உறுதுணையாகவும், என்னை ஊக்கப்படுத்தியும் வந்துள்ளார்’ எனக் கூறினார்.

இந்த புர்ஹா விவகாரம் அத்தோடு முடிய இப்போது ஒரு வருடம் கழித்து மீண்டும் புதிய வடிவில் சர்ச்சை உருவாகியுள்ளது. புகழ்பெற்ற எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரின் ‘ எனக்கு ஏ ஆர் ரஹ்மானை மிகவும் பிடிக்கும். ஆனால் அவரது மகளை பார்க்கும் போதுதான் ஒருவிதமான புழுக்கத்துக்கு ஆளாகிறேன்.’ எனத் தெரிவிக்க மீண்டும் சர்ச்சைகள் உருவாகின. இதற்கு சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகியது.

இந்நிலையில் இப்போது மீண்டும் கோபமாக கதீஜா ரஹ்மான் அவருக்குப் பதிலளித்துள்ளார். அதில் ‘ஒருவருடத்திற்குள்  மீண்டும் இந்த விஷ்யம் டாப்பிக்காக ஆகியுள்ளது. தஸ்லிமா நஸ்ரின் அவர்களே, என் உடையால் நீங்கள் புழுக்கம் அடைந்ததற்காக என்னை மன்னித்துவிடுங்கள். வெளியே சென்று நல்ல காற்றை சுவாசியுங்கள். கூகுளில் சற்று பெண்ணியம் என்றால் என்னவென்று தேடிப் பாருங்கள். ஒரு பெண்ணை இழுத்து அவரின் அப்பாவுக்கு பிரச்சினை கொடுப்பது பெண்ணுரிமை இல்லை. அதேப்போல நான் எனது புகைப்படத்தை உங்களுக்கு அனுப்பி கருத்து கேட்கவில்லையே’ தடாலடியாக பதிலளித்துள்ளார்.

காதலை தொடங்கும் முன் சபரிமலை சென்ற இயக்குனர் விக்னேஷ் சிவன்

0

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிய ’தானா சேர்ந்த கூட்டம்’ என்ற திரைப்படம் வெளியாகி மூன்று வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போது அவர் அடுத்த படத்தை இயக்கவுள்ளார்

\காற்றுவாக்கில ரெண்டு காதல்\ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதியும் அவருக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தாவும் நடிக்க உள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை லலித் என்பவர் தயாரித்துள்ளார். இவர் ஏற்கனவே விஜய்யின் மாஸ்டர் படத்தை தயாரித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்க உள்ள நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது சபரிமலை சென்று சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நல்லபடியாக முடிய வேண்டும் என்று அவர் வேண்டிக்கொண்டு சபரிமலையில் சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான் என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் அதே கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் இந்த படத்திற்கு மிகப் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து குணமான முதல் நோயாளி: சீனாவில் பரபரப்பு

0

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் சுமார் 2000 பேர் பலியாகி உள்ள நிலையில் இந்த வைரசை கட்டுப்படுத்த உலகில் உள்ள மருத்துவர்கள் மருந்து கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் இருந்தனர். பல நிறுவனங்களும் தனி நபர்களும் இந்த மருந்தை கண்டுபிடிக்க கோடிக்கணக்கில் நிதி உதவி அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கேமரூனை சேர்ந்த மாணவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டு இருந்த நிலையில் அவரை தனிமைப்படுத்தி சீன மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். அவருக்கு அளிக்கப்பட்ட மருந்துகளின் அடிப்படையில் அவர் கொஞ்சம் கொஞ்சமாக குணமாகி தற்போது முழுமையாக குணமாகி விட்டார் என்றும் இதனை அடுத்து அவருக்கு கொடுக்கப்பட்ட மருந்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் மருந்து தான் என்பதை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

இந்த மருந்தை இன்னும் ஆய்வு செய்து விரைவில் விற்பனைக்கு வரும் என்றும் இந்த மருந்தின் மூலம் கொரோனா வைரஸை முழுமையாக கட்டுப்படுத்தலாம் என்று சீன மருத்துவர்கள் கூறி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

அதிகாலை டெல்லி என்கவுண்டர்: சுட்டுக் கொல்லப்பட்ட இருவர் யார்?

0

டெல்லியில் இன்று அதிகாலை 2 பேர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

டெல்லியில் உள்ள பிரகலாதபூர் என்ற பகுதியில் ராஜா குரேஷி, ரமேஷ் பகதூர் ஆகிய 2 பேர் இன்று அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தரப்பில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது

இந்த இரண்டு பேரும் கடந்த சில வருடங்களாக பல்வேறு வழக்குகளில் சிக்கி உள்ளதாகவும் அவர்கள் மீது பல வழக்குகள் அடிப்படையில் எப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளதாகவும், போலீசாரின் பிடியில் இருந்து தப்பித்து வந்த இவர்கள் இருவரும் இன்று அதிகாலை பிரகலாதபூர் என்ற பகுதியில் மறைந்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாகவும் இதனை அடுத்து அங்கு சென்ற போலீஸ் படை இருவரையும் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

இந்த என்கவுண்டர் குறித்த விரிவான தகவலை போலீசார் இன்னும் சில நிமிடங்களில் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஐதரபாத்தில் பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த 4 பேர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில் தற்போது மீண்டும் ஒரு என்கவுண்டர் செய்யப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

உலகப் புகழ்பெற்ற இந்தப் படத்தை எடுத்த கெவின் கார்ட்டர் தற்கொலை செய்து கொண்டார்! ஏன் தெரியுமா..?

0

உலகப் புகழ்பெற்ற இந்தப் படத்தை எடுத்த
கெவின் கார்ட்டர் தற்கொலை செய்து கொண்டார்! ஏன் தெரியுமா..?

கெவின் கார்ட்டர் புகைப்படங்களை எடுப்பதில் வல்லவர் மற்றும் உலக புகழ்பெற்ற புகைப்படக்காரர். எல்லா சிறந்த புகைப்படக்காரர்களைப் போன்றே இவருக்கும் நல்ல புகைப் படங்களை எடுக்க வேண்டும் என்ற ஆசையும் ஆர்வமும் இருந்தது. இந்த ஆர்வம் அவரை பல்வேறு நாடு, நகரம், காடு, மலை வரை இழுத்துச் சென்றது.

1993 இல் இந்த ஆர்வம் அவரைத் தனது சக புகைப்படப் பத்திரிக்கையாளர்களுடன்
சூடானுக்குக் கொண்டு சென்றது. அப்போது சூடான் வரலாறு காணாத பஞ்சத்தில் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தது. குறிப்பாக சூடானின் தென்பகுதி மக்கள் உண்ண உணவின்றி, குடிக்ப நீரின்றி பசி, தாகத்தில் தவித்துக் கொண்டிருந்தனர். பசி பஞ்சத்தில் தவிக்கும் மக்களின் நிலைகளைக் காமிராவில் பதிவு செய்ய கெவின் தொலைதூர கிராமங்கள் வரை கடந்து சென்றார்.

இறுதியாக அவர் முயற்சி ஒரு இடத்தில் கைகூடியது. ஒரு நாள் தன் காமிராவை தோளில் தொங்க விட்டுக் கொண்டு உள்ளத்தை உலுக்கக் கூடிய படத்துக்கான காட்சியைத் தேடி அலைந்து கொண்டிருந்த போது அப்படிப்பட்ட காட்சி தென்பட்டது.
பசி பஞ்சத்தால் அடிபட்ட நோஞ்சான் நிலையில் உள்ள ஒரு சிறுமி நடக்கக் கூட இயலாத நிலையில், எலும்புக் கூடு போன்ற தன்னுடலை தவழ்ந்து இழுத்துக் கொண்டு மெல்ல மெல்ல ஊர்ந்து செல்வதைக் கண்டார். அந்தச் சிறுமி ஐக்கிய நாடுகளின் சபையின் சார்பாக அமைக்கப்பட்டு இருந்த உணவு வழங்கும் முகாமை நோக்கி தள்ளாடியபடி தவழ்ந்து கொண்டிருந்தது உண்மையிலேயே இதயத்தைப் பிழியக் கூடியதாக இருந்தது.

தோளில் இருந்து காமிராவை இறக்கி கோணம் பார்த்த கெவினுக்கு இன்னொரு வியப்பும் காத்திருந்தது. ஆம், அந்த எலும்பும் தோலுமான சிறுமிக்குப் பின்னாலேயே சிறிது தொலைவில் ஒரு பிணம் திண்ணிக் கழுகும் சிறுமியின் மீது பார்வையை நிலை நிறுத்திக் கொண்டு இருந்தது. எப்போது சிறுமியின் உடலை விட்டு உயிர் பிரியும் மீதியுள்ள அந்தத் தோலையும் அதைச் சுற்றி இருக்கும் சிறிது மாமிசத்தையும் எப்போது சாப்பிடலாம் எனக் காத்திருந்தது பிணம் திண்ணிக் கழுகு.

கெவின் கேமரா லென்சை கண்ணுக்கு ஒத்திக் கொண்டார். சிறுமியையும் கழுகையும் ஒரு பிரேமில் அடக்கிக் கொண்டு க்ளிக் செய்தார். இப்போது அவரது புகைப்படக்கருவியில் மிக அரிதினும் அரிதான படம் பதிவாகி விட்டது. இதை விற்றால் நல்ல விலை கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் காமிராவைத் தோளில் மாட்டிக் கொண்டு தனது வண்டியை ஸ்டார்ட் செய்து அங்கிருந்து பறந்து விட்டார். இந்த அரிதான படத்தை “நியூயார்க் டைம்ஸ்” பத்திரிக்கைக்கு விற்று விட்டார்.

இந்தப் புகைப்படம் 1993 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 26 ஆம் நாள் காலை நாளிதழில் முதல் பக்கத்தில் வெளியானது. இந்தப் படத்தைப் பார்த்ததும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் பத்திரிக்கை அலுவலகத்திற்கு தொலைப்பேசி மூலம் தொடர்புக் கொண்டு, அனைவரும் ஒரே கேள்வியைத்தான் கேட்டனர். புகைப்படத்தில் உள்ள சிறுமி என்ன ஆனாள்? அவள் உயிருடன் பிழைத்தாளா அல்லது இறந்து விட்டாளா? இந்தக் கேள்விக்கான பதில் பத்திரிக்கையின் தொலைப் பேசி ஆப்ரேட்டரிடமோ படத்தை எடுத்த கெவின் கார்ட்டரிடமோ இல்லை.

1994 ஆம் ஆண்டு மே 23 அன்று பெரும் கை தட்டல்களுக்கு இடையே கெவின் கார்ட்டர் கொலம்பியப் பல்கலைக்கழகத்தின் பிரமாண்டமான அரங்கத்தில் இந்த அரிதான புகைப்படத்திற்கான “புலிட்சர்” விருதைப் பெற்றுக்கொண்டார் இந்த விருது புகைப்படத் துறையில் நோபல் விருதுக்கு இணையானது.

விருது பெற்ற சில நாட்களுக்குப்பின் கெவின் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார். கெவினுக்கும் அங்கு இருந்த பிணம் திண்ணிக் கழுகுக்கும் என்ன வேற்றுமை? இரண்டும் ஒரே விதமாகத்தான் செயல்பட்டுள்ளனர். குறைந்தபட்சம் புகைப்பட நிபுணர் கெவின் அந்த சிறுமிக்கு ஒரு வாய் தண்ணீர் தந்து உயிரைக் காப்பாற்றி இருக்கலாம், அல்லது தனது வலுவான கைகளினால் அந்தச் சிறுமியைத் தூக்கிச் சென்று உணவளிக்கும் அமைப்பு அலுவலகத்தின் வாயிலிலாவது சேர்த்து இருக்கலாம், கல்லெடுத்து வீசி அந்தக் கழுகையாவது விரட்டி இருக்கலாம்.

ஆனால், இவற்றில் எதையும் செய்யாமல் வெறும் ஒரு படத்தை எடுத்தார்; அதை அதிக விலை தந்த பத்திரிக்கைக்கு விற்று விட்டார் என்று ஒருவர் அவர் மீது குற்றம் சாட்டியதுதான் காரணம்.இரண்டு மாதங்களுக்குப் பின் கடற்கரைக்கு
அருகில் அவரது கார் நின்று கொண்டிருந்தது. அதில் அவர் பிணமாகக் கிடந்தார், பின்னர் கெவின் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. அவரது பிணத்திற்கு அருகில் காவல்துறைக்கு ஒரு கடிதம் கிடைத்தது. அதில் சில வரிகளே இருந்தன.

முதல் வரி I am Really, Really Sorry…

நாம் எவராக இருந்தாலும்
சரி, நம்மிடம் மனிதம் இல்லையேல்
நாமும் மிருகத்திற்கே ஒப்பாவோம்.

நெஞ்சு வலியால் துடித்த காவலர்! உயிர்காக்க உதவிய சமூக வலைதளம்; காவலர் மனைவி கண்ணீர் விட்டு நன்றி!!

0

நெஞ்சு வலியால் துடித்த காவலர்! உயிர்காக்க உதவிய சமூக வலைதளம்; காவலர் மனைவி கண்ணீர் விட்டு நன்றி!!

கடலூர் மாவட்டம் முதுநகர் பகுதி காவல் நிலையத்தில் முதுநிலை காவலராக மனோகரன் பணிபுரிந்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி இரவு பணியில் காவலர் மனோகர் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு வலியில் துடித்த மனோகரை சக காவலர்கள் கடலூர் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் பாண்டிச்சேரி கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர். இந்த தகவல் மனோகரன் குடும்பத்திற்கு அவசர தகவலாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், காவலர் மனோகரன் பாண்டிச்சேரி மருத்துவமனையில் அவசர சிகிச்சையில் சேர்க்கப்பட்டார். உடலை பரிசோதித்த பின்பு ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், அவசர சிகிச்சைக்கு 1.5 லட்சம் செலவாகும் என்று கூறினர். காவலரின் மனைவியால் உடனடியாக ஒன்றரை லட்சத்தை திரட்ட முடியாமல் தவித்தார்.

இந்த அவசர தகவல் கடலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி அவர்களிடமும், கடலூர் முதுநகர் ஆய்வாளர் பால்சுதர், உதவி ஆய்வாளர் ஆகாசமூர்த்தி, கடலூர் புதுநகர் காவலர்களுக்கும் மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து காவலர்களின் முகநூல் குழுக்களிலும் வங்கி எண் தகவலுடன் பண உதவி கேட்டு அவசர தகவலாக பகிரப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் இருந்த காவலர்களின் மூலம் இணையத்தின் மூலமாகவும், நேரடியாகவும் 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் திரட்டப்பட்டது.

திரட்டப்பட்ட தொகையை துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி அவர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று மனோகரனின் மனைவியிடம் ஒப்படைத்தார். கணவனின் மருத்துவ செலவிற்காக உதவி செய்த காவலர்களுக்கு மனோகரனின் மனைவி கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். சிகிச்சை முடிந்து காவலர் மனோகரன் நல்ல நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. அவசர நேரத்தில் உதவி புரிய சமூக வலைதளங்களில் பதிய உத்தரவிட்ட டிஎஸ்பி சாந்தி அவர்களுக்கும், பிற காவலர்களுக்கும் இணையத்தில் பாராட்டுகள் குவிந்த வருகிறது. அவசர காலங்களில் எப்படி உதவ வேண்டும் என்பதற்கு காவல்துறையினரின் செயல்பாடு உதாரணமாக அமைந்துள்ளது.

உத்தர பிரதேசம்: வாரணாசியில் தீனதயாள் உபாத்யாயா சிலையை மோடி திறந்து வைக்கிறார்..!!

0

உத்தர பிரதேசம்: வாரணாசியில் தீனதயாள் உபாத்யாயா சிலையை மோடி திறந்து வைக்கிறார்..!!

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் பாரதீய ஜனதா கட்சியின் முன்னோடியான தீனதயாள் உபாத்யாயாவின் 63 அடி உயர சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.

தீனதயாள் உபாத்யாயா : இந்தி தத்துவ அறிஞர், பொருளாதார வல்லுனர், சமூகவியலாளர், வரலாற்று ஆசிரியர், இதழாளர், அரசியல் அறிவியலாளர் போன்ற பன்முகத்தன்மையில் சிறந்து விளங்கியவர். பாரதீய ஜனதா சங்க கட்சியின் முன்னோடியாக திகழ்ந்தவர்.

இவரது பெயரில் உள்ள நிறுவனங்கள் :

* தீனதயாள் உபாத்யாயா மருத்துவமனை புது தில்லி
* தீனதயாள் உபாத்யாயா கோரக்பூர் பல்கலைக்கழகம்
* பண்டிட் தீனதயாள் உபாத்யாயா கல்விக்கூடம், கான்பூரில் உள்ளது.
* தீனதயாள் உபாத்யாயா கல்லூரி
* பண்டிட் தீனதயாள் உபாத்யாயா சனாதன தர்ம பள்ளி, கான்பூர்
* தீனதயாள் உபாத்யாயா பெட்ரோலிய பல்கலைக்கழகம், குஜராத்தில் உள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில்  வருகின்ற 16 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அங்கு அமைக்கப்பட்டுள்ள தீனதயாள் உபாத்யாயா நினைவு மண்டபத்தை இந்திய நாட்டிற்காக அர்பணிப்பு செய்கிறார். பின்னர் அங்கு நிறுவப்பட்டுள்ள 63 அடி உயர சிலையை திறந்து வைத்து பல்வேறு உதவிகளை வழங்குவதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

மேலும் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக கூறப்பட்டுள்ளது. வாரணாசி தொகுதி பிரதமர் மோடியின் ராசியான தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.