இந்திய சர்வதேச தோல் கண்காட்சியை சென்னையில் மத்திய அமைச்சர் தொடங்கி வைக்கிறார்
இந்திய சர்வதேச தோல் கண்காட்சி 2020-ஐ மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை அமைச்சர் சென்னையில் தொடங்கி வைக்கிறார்
35-ஆவது இந்திய சர்வதேச தோல் கண்காட்சி பிப்ரவரி 01-03, 2020 வரை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறவுள்ளது. ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்தக் கண்காட்சியை மத்திய திறன் மேம்பாடு & தொழில் முனைவோர் துறை அமைச்சர் டாக்டர் மகேந்திரநாத் பாண்டே, 31 ஜனவரி 2020 மாலை 5 மணிக்கு தொடங்கி வைக்கவுள்ளார்.
தொடக்க நிகழ்ச்சியில், தமிழக தொழில் துறை அமைச்சர் திரு எம் சி சம்பத், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு கே சி கருப்பணன், தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்புத் துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபில், இந்தியாவுக்கான இத்தாலிய வர்த்தக ஆணையர் அலெஸ்சாண்ட்ரோ லிபரேட்டோரி, தோல் ஏற்றுமதி மையத்தின் தலைவர் பி ஆர் அகில் அகமது, இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர் திரு ராஜேஷ் அகர்வால், தோல் ஏற்றுமதி மையத்தின் தென்மண்டல தலைவர் திரு இஸ்ரார் அகமது, துணைத் தலைவர் திரு சஞ்சய் லீகா, சர்வதேச வர்த்தக அமைப்பின் (ஐநா) இயக்குநர் டாக்டர் ஆஸிஷ் ஷா ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்திய தோல் ஏற்றுமதி தொழிலுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாகவும், இந்தியாவை முதலீடு மற்றும் உற்பத்திக்கு உகந்த இடமாக மாற்றுவதோடு, வடிவமைப்பு மற்றும் புதுமை கண்டுபிடிப்புகளுக்கான மையமாகவும் மாற்றும் நோக்கில் ஆண்டுதோறும் இந்த கண்காட்சி சென்னையில் நடத்தப்படுகிறது.
இந்த கண்காட்சியில், 130 வெளிநாட்டு நிறுவனங்கள் உட்பட இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 450-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தோல் பொருட்கள், இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன.
மத்திய தோல் ஆராய்ச்சி நிலையம், இந்திய காலணி தயாரிப்போர் கூட்டமைப்பு, இந்திய தோல் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் மற்றும் இந்திய காலணி உதிரி பாக உற்பத்தியாளர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் ஆதரவுடன் நடத்தப்படுகிறது.
இதற்கான டிக்கெட்டுகள் கண்காட்சி நடைபெறும் நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை விற்பனை செய்யப்படும். யாருக்கும் இலவச அனுமதியில்லை. மாணவர்களுக்கும் சலுகை கட்டணம் ஏதும் வழங்கப்படாது என்றும் இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.