Tuesday, November 19, 2024
Home Blog Page 5065

கனமழை எதிரொலி: பள்ளி, கல்லூரி விடுமுறை மற்றும் தேர்வுகள் ரத்து குறித்த விபரங்கள்

0

கனமழை எதிரொலி: பள்ளி, கல்லூரி விடுமுறை மற்றும் தேர்வுகள் ரத்து குறித்த விபரங்கள்

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த 2 நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. இதனை அடுத்து நேற்று மாலையும் இன்று அதிகாலையும் பள்ளி கல்லூரிகள் குறித்த அறிவிப்பை ஒருசில மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்

அதன்படி சென்னை, தூத்துக்குடி, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

அதேபோல் கடலூர், செங்கல்பட்டு, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் இன்று நடைபெறுவதாக இருந்த சென்னை அண்ணா பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், மற்றும் சென்னை பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் இந்த தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள் அறிவித்துள்ளனர்

மேலும் இன்று நடைபெறுவதாக இருந்த மின்வாரிய துறையின் கேங்மேன் நேர்முகத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என மின்வாரியத் துறை அறிவித்துள்ளது.

திமுக ஐடி விங்கை அலறவிட்ட பாமகவினர்! அதிர்ச்சியில் திமுக தலைமை

0

திமுக ஐடி விங்கை அலறவிட்ட பாமகவினர்! அதிர்ச்சியில் திமுக தலைமை

தமிழக அரசியலில் தகவல் தொழில்நுட்பங்களை முறையாக பயன்படுத்தும் வகையில் ஆரம்ப காலங்களில் அதற்கென தனி அமைப்பை உருவாக்கி செயல்பட வைத்தது பாமக தான். ஆனால் பின் வந்த காலங்களில் திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்த சீமான், ஊடகங்களை கைக்குள் வைத்துள்ள திமுக மற்றும் மத்தியில் அதிகாரத்தில் இருக்கும் பாஜக என பெரும்பாலான கட்சிகள் தங்களுக்கென்று தகவல் தொழில்நுட்ப பிரிவை நிர்வகிக்க ஆரம்பித்தன.

தற்போது இதில் முன்னணியில் இருப்பது திமுக தான் என்றாலும் இவ்வளவு வல்லுனர்களை வைத்துள்ள திமுக ஐடி விங்கையே பாமகவினர் அலறவிட்டுள்ளனர். இது திமுக தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. குறிப்பாக முரசொலி அலுவலக நில விவகாரத்தில் பாமக தரப்பு திமுகவிற்கு கடும் தலைவலியை கொடுத்துள்ளதை தமிழக மக்கள் அனைவரும் அறிவர்.

அதாவது எதிர்க்கட்சியான திமுகவையும் அதன் தலைவர் ஸ்டாலினையும் ஆளுங்கட்சியும் அதனுடன் கூட்டணியில் இருக்கும் பாஜக,பாமக உள்ளிட்ட கட்சிகளும் தொடர்ச்சியான புகார்களால் தாக்குவதும், கடும் விமர்சனங்களால் தினமும் காயப்படுத்துவதும் தொடர் கதையாக நிகழ்ந்து வருகின்றன. அந்த வகையில் தான் தற்போது முரசொலி பஞ்சமி, மிசா கைது உள்ளிட்ட பல சர்ச்சைகள் திமுகவிற்கு எதிராக எழுந்துள்ளது.

கடந்த காலங்களில் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி எந்த ஊடகத்தின் மூலம் எதிர்க்கட்சிகளுக்குக் குடைச்சல் கொடுத்தாரோ அந்த ஊடகமான முரசொலி மூலமாகவே எதிர்க்கட்சிகள் இப்போது திமுகவுக்கு குடைச்சல் கொடுத்து வருகின்றன. வழக்கமாக எதிர்க்கட்சி தான் தன்னுடைய விமர்சனங்களால் ஆளுங்கட்சியை தூங்க விடாமல் செய்ய வேண்டும், அதற்கு ஆளுங்கட்சி எதிர்க்கட்சிக்கு பதிலளிக்க வேண்டும். ஆனால் அதற்கு நேர்மாறாக தற்போது ஆளுங்கட்சிக்கும் அதன் தோழமைக் கட்சிகளுக்கும் எதிர்க்கட்சியான திமுக பதிலளிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

முரசொலி, மிசா உள்ளிட்ட விவகாரங்களில் திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள், மூத்த முன்னோடிகள் என பலர் சமாளிக்க நினைத்தாலும் எதிரில் உள்ள பாமக தரப்பு தொடர் விமர்சனங்களை எழுப்பி வருகிறது. இதனால் திமுக தலைவரான ஸ்டாலினே மேடைக்கு மேடை இதைப் பற்றி பேச வேண்டிய நிலைமைக்கு ஆளாக்கிவிட்டது பாமக. சமூக ஊடகமான ட்விட்டரில் உருவான இந்த திமுக மீதான தாக்குதல் இன்று விரிவாகி அனைத்து ஊடகங்களிலும் பரவி விட்டது.

இந்த நிலையில் திமுக ஐடி விங் நிர்வாகிகள் இந்தப் பிரச்சினைகளை சரியாக கையாளவில்லை என்றும், இது போன்ற விமர்சனங்கள் எழும் போதே அவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் குறிப்பாக பஞ்சமி நில விவகாரத்தில் ஸ்டாலினை சிக்க வைத்ததே இந்த ஐடி விங் தான் என்ற குற்றசாட்டும் எழுந்துள்ளது.

தமிழகத்தில் இருக்கும் கட்சிகளிலேயே ஐடிவிங் என்ற அமைப்பிற்கு அதிகமாக செலவு செய்வது திமுக தான். ஆனால் இவ்வளவு இருந்தும் திமுக ஐடி விங் அண்ணா பதவியேற்ற நாள், கலைஞர் தலைமையேற்ற நாள் என்று வரலாற்று கதைகளை பேசுகிறதே தவிர, தற்கால அரசியலில் அதிமுக அரசை நிலைகுலையச் செய்யும் அளவுக்கு முக்கியப் பிரச்சினைகளை கையிலெடுத்து எரிய வைக்கத் தவறிவிட்டது என்று அந்த அமைப்பின் மீது திமுக தலைவர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஐடி விங்கில் இருக்கும் இசை, நெல்லை ஜோக்கின், நாங்குநேரி எட்வின், மேலும் புதுக்கோட்டை அப்துல்லா உள்ளிட்ட சில விரல் விட்டு எண்ணக் கூடிய நபர்கள் கொஞ்சம் விதிவிலக்காக தனித்துவமாக செயல்படுகிறார்கள் என்றாலும், ஒட்டு மொத்த திமுகவின் ஐடி விங் செயல்பாடு என்பது திமுக தலைவர் ஸ்டாலினை திருப்திப்படுத்தவில்லை என்றே கூறப்படுகிறது.

எதிர்க்கட்சியாக இருக்கும் திமுக ஆளுங்கட்சியை எதிர்த்து விமர்சனங்களால் தாக்குதல் நடத்தாமல், ஆளுங்கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் விமர்சனங்களுக்கு கூட பதிலளிக்க முடியாமல் பதுங்கும் நிலையை திமுகவிற்கு உருவாக்கி விட்டார்கள் என்று ஐடி விங் தலைவர் பிடிஆர். தியாகராஜன் மீது பல நிர்வாகிகள் தலைமைக்கு புகார் கூறியுள்ளனர். மேலும் தகுந்த ஆர்வமுள்ள இளைஞர்களைக் கொண்டு கட்சியின் ஐடிவிங்கை பலப்படுத்துமாறும் திமுக தலைமைக்கு கோரிக்கைகள் சென்றுள்ளன என்றும் கூறப்படுகிறது.

இதற்கெல்லாம் பின்னணியில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பதிவிட்ட அந்த ஒரே ஒரு ட்விட்டர் பதிவு தான் காரணம் என்று திமுக தரப்பு புலம்பி வருவதாக கூறப்படுகிறது. இவ்வளவு நிர்வாகிகளை வைத்துள்ள திமுக ஐடி விங்கையே பாமகவினர் அலறவிட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

வந்தவாசி அருகே 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த வேத வைத்தீஸ்வரன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா

0

வந்தவாசி அருகே 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த வேத வைத்தீஸ்வரன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா

வந்தவாசி அருகே 12ம் நூற்றாண்டை சேர்ந்த வேத வைத்தீஸ்வரன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் மற்றும் திருக்கல்யாணம் சீர்வரிசை ஊர்வலம் நடைபெற்றது இதில் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

வந்தவாசி அடுத்துள்ள மும்முனி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி திருக்கோவிலில் இன்று காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

வேத ஆச்சாரியர்கள் வேதங்களை ஓத மகா கலசத்தின் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை காண வந்தவாசி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

அதைத் தொடர்ந்து மாலை 3 மணியளவில் மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் நிகழ்ச்சி நடைபெற்றது. வந்தவாசி ஜலகண்டேஸ்வரர் ஆலயத்திலிருந்து — வெள்ளை குதிரை பூட்டிய ரதத்தில் எல்லாம் வல்ல சிவபெருமான் மணக் கோலத்தில் எழுந்தருள , சிவபூதகண வாத்தியங்கள் முழங்க நையாண்டி மேளம் ஒலிக்க. தேவாரம், திருவாசகம் ஓதுவார்கள் ஓத, சாதுக்களும், சிவாச்சாரியார்களும் மற்றும் ஆயிரக்கணக்கான சிவன் அடிகளாரும் புடைசூழ. பல ஆயிரக்கணக்கான பெண்கள் சீர் வரிசையை ஏந்தி வந்து மும்முனி வேத வைத்தீஸ்வரர் ஆலயத்தை அடைந்தனர். பின்பு இரவு 7 மணியளவில் திருக்கல்யாணமும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

அதன் பின்னர் இரவு 9 மணி அளவில் வேத வைத்தீஸ்வரர் உடன் வேதவல்லி தாயாருடன் திருவீதி உலா நடந்தது.

நாளை எந்த எந்த பள்ளிகளுக்கு விடுமுறை!

0

தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது இதனால் தமிழக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

தொடர் மழையின் காரணமாக தமிழக அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. சென்னையை பொறுத்தவரை நீர் ஆதாரமான செம்பரம்பாக்கம், சோழவரம், பூண்டி ஆகிய ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

இதனிடையே வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக மேலும் 2 நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில் திருவண்ணாமலை, திருவள்ளூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, வேலூர், ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் கனமழை நீடிப்பதால் புதுவையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பொன் மாணிக்கவேல் பதவிக்காலம் முடிந்தது!

0

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேலின் பதவிக் காலம் நவம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைவதால் சிலை கடத்தல் தடுப்பு வழக்குகள் தொடர்பான விசாரணை ஆவணங்கள் தகவல்கள் ஆகியவற்றை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு பிரிவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்மானிக்கவேலை நியமிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி முதல் ஒரு ஆண்டுக்கு அவர் சிறப்பு அதிகாரியாக பணியாற்றும் வகையில் தமிழக அரசு ஆணை பிறப்பித்தது இந்த நிலையில் சிறப்பு அதிகாரி பதவி காலம் நவம்பர் 30-ஆம் தேதியுடன் முடிவடைவதால் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இதுவரை சேகரித்துள்ள விசாரணை ஆவணங்கள் தகவல்கள் ஆகியவற்றை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி தமிழக டிஜிபி கடிதம் எழுதினார்.

அதை பரிசீலித்த டிஜிபி தடுப்பு சிறப்பு பிரிவு அதிகாரி பொன்மாணிக்கவேல் அந்தப் பணியிலிருந்து விடுவித்து உரிய உத்தரவு பிறப்பிக்க அரசிடம் கூறினார் அதன் அடிப்படையில் தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி அரசாணையை வெளியிட்டார்.

இதில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் பதவி காலம் நவம்பர் 30 ஆம் தேதியில் முடிவடைவதால் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு நடத்திய விசாரணை தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்தையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபியிடம் நவம்பர் 30-ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அட்லீ – சிவா எல்லாம் என்ன பண்ணுவாங்க? டகால்டி டீசரில் கலாய்க்கும் சந்தானம்

0

அட்லீ – சிவா எல்லாம் என்ன பண்ணுவாங்க? டகால்டி டீசரில் கலாய்க்கும் சந்தானம்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக ஒரு கலக்கு கலக்கிய நடிகர் சந்தானம் தற்போது தன்னுடைய புதிய அவதாரமான ஹீரோவாக ஆக்‌ஷன், ரொமான்ஸ் மற்றும் காமெடியிலும் வழக்கம் போல கலக்கி வருகிறார்.

இந்நிலையில் சந்தானம் – யோகி பாபு இணைந்து நடித்துள்ள அவரின் அடுத்த படமான ‘டகால்டி’படத்தின் டீசரை இன்று மாலை படக்குழு வெளியிட்டுள்ளது.

பிரபல இயக்குநர் சங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த விஜய் ஆனந்த் நடிகர் சந்தானம் நடிக்கும் இந்த டகால்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் காமெடி நடிகர் யோகி பாபுவும் சந்தானத்துடன் இணைந்து நகைச்சுவைக் கூட்டணி அமைத்துள்ளனர்.

காமெடி, காதல், ஆக்‌ஷன் என கலந்து உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் மேற்கு வங்க நடிகை ரித்திகா சென் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் ராதாரவியும் நடித்துள்ளார்.

நடிகர் சந்தானத்தின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ஹேண்ட்மேட் பிலிம்ஸ் மற்றும் எஸ்.பி.சௌத்ரியின் 18 ரீல்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறது. இன்று மாலை இந்தப் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதில் நடிகர் யோகி பாபுவைப் பார்த்து நீ இவ்ளோ பெரிய நடிகரா வருவனு நினைச்சே பாக்கலடா என்று கலாய்க்கும் சந்தானம், அஜித் – விஜய்யை வைத்து படம் இயக்குவேன் என்று சொல்லும் நடிகை ரித்திகா சென்னிடம் அப்புறம் அட்லீ – சிவா எல்லாம் என்ன பண்ணுவாங்க எனவும் வழக்கம் போல கலாய்த்து பேசியுள்ளார்.

நடிகர் சந்தானம் மற்றும் யோகி பாபு ஆகியோர் இணைந்து காமெடியில் கலக்க இருக்கும் இந்தப் படம் இந்த டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Santhanam | Ritika Sen | Yogi Babu | Vijay Anand

கடந்த நிதி ஆண்டில் இந்திய தபால் துறை வருவாய் என்ன தெரியுமா?

0

கடந்த நிதி ஆண்டில் இந்திய தபால் துறை வருவாய் என்ன தெரியுமா?

உலகிலேயே மிகப்பெரிய தபால் துறையை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. 1854 ஆம் ஆண்டு இந்திய அஞ்சல் துறை தொடங்கப்பட்டது. இந்தியாவில் தற்போது ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 531 நிலையங்கள் உள்ளது.

இதில் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 882 கிராமப்புற அஞ்சலகமாகவும் 15549 நகர்ப்புற அஞ்சலகமாகவும் உள்ளன. இதில் மொத்தம் 111 தலைமை தபால் நிலையங்கள் அடங்கும். 21.14 கிலோ மீட்டருக்கு ஒரு தபால் நிலையம் என்ற அளவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மட்டும் சுமார் 10 ஆயிரம் தபால் நிலையங்கள் இருக்கின்றன. தினமும் சுமார் இரண்டு லட்சம்பேர் கடிதங்களை பட்டுவாடா செய்கின்றனர்.

இணையத்தள வளர்ச்சி பொதுத்துறை தனியார் வங்கி சேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் தபால் துறை கடந்த ஆண்டுகளில் மிகப்பெரிய இழப்புகளை சந்தித்தது. வருவாயை அதிகரிக்க பல்வேறு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

எனவே திட்டங்கள் பொது மக்களுக்கு எளிதாக புரியும் வகையில் தெரிவிக்கப்பட்டது,விரைவு தபால்கள் பலப்படுத்தப்பட்டது தனி நபர்கள், தனியார் நிறுவனங்கள் விரைவு தபால் மூலம் அனுப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.


மேலும் செல்வமகள் சேமிப்பு திட்டம், தேசிய சேமிப்பு பத்திரம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை தபால் துறை அறிவிப்பு கொடுத்தது. இதன் காரணமாக 2008 -19 ஆம் நிதியாண்டில் இதில் இந்திய தபால் துறை 13,000 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

இதில் தபால் தலை மட்டும் 78 கோடியே 25 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. தபால்கள் மூலம் 3 ஆயிரத்து 869 கோடியும் சேமிப்பு மற்றும் சான்றிதழ் பணிகள் மூலம் 8600 கோடியும் பிறவகை சேவைகளின் மூலமாக 686 கோடி என மொத்தம் 13 ஆயிரத்து 452 கோடியே 56 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

இதுகுறித்து தபால் துறையினர் கூறியதாவது லட்சக்கணக்கான பேர் சேமிப்பு கணக்கின் தொகுதி உறுப்பினராக உள்ளனர். காப்பீடு திட்டம், ஆதார் சேவை, பாஸ்போர்ட் சேவை பல்வேறு சேவைகளை வழங்கி வரும் பல புதிய சேவைகள் மூலமாக கடந்த காலங்களை விட வருவாய் அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.

சரவணா ஸ்டோர் அருள் நடிக்கும் ரூ.100 கோடி பட்ஜெட் படம்: முழு விபரங்கள்

0

சரவணா ஸ்டோர் அருள் நடிக்கும் ரூ.100 கோடி பட்ஜெட் படம்: முழு விபரங்கள்

சென்னை சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் அவர்கள் விரைவில் ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும், அந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் இயக்க இருப்பதாகவும் அவ்வப்போது செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன

ரூபாய் 100 கோடி பட்ஜெட்டில் தயாராக இருக்கும் இந்த படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாரா, தமன்னா, காஜல் அகர்வால், திரிஷா உள்ளிட்ட முன்னணி நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்பட்டது

இந்த நிலையில் இன்று சென்னையில் அருள் ஹீரோவாக நடிக்கும் படத்தின் ஆரம்ப விழா நடைபெற்றது. இதில் பிரபல இயக்குநர் எஸ்பி முத்துராமன், நடிகர் பிரபு, பிரபல தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன், நடிகர் விவேக், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

இந்த படத்தை இயக்குனர் ஜேடி ஜெர்ரி அவர்கள் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே அமிதாப்பச்சன் தயாரிப்பில் அஜித்-விக்ரம் நடித்த ’உல்லாசம்’ என்ற படத்தையும், ‘விசில்’ படத்தையும் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், வேல்ராஜ் ஒளிப்பதிவில், அந்தோணி ரூபன் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க இருப்பதாகவும் மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தில் பிரபல நடிகை ஒருவர் நாயகியாக நடிப்பது உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும் இது குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

தொழிலதிபர் அருள் தற்போது திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில் அவரது முதல் படம் சூப்பர்ஹிட் வெற்றி அடையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

ஐயா, நீங்கள் கட்சியா நடத்துகிறீர்கள்; ஓர் பல்கலைகழகத்தையல்லவா நடத்துகிறீர்கள்: திமுக சட்டபேரவை உறுப்பினர் மருத்துவர் ராமதாசுக்கு பாராட்டு கடிதம்

0

ஐயா, நீங்கள் கட்சியா நடத்துகிறீர்கள்; ஓர் பல்கலைகழகத்தையல்லவா நடத்துகிறீர்கள்: திமுக சட்டபேரவை உறுப்பினர் மருத்துவர் ராமதாசுக்கு பாராட்டு கடிதம்

சமீபகாலமாக பாமக மற்றும் திமுக தலைமையிடையே வார்த்தை போர் நடந்து வரும் சூழலில் அக்கட்சியை சேர்ந்த முன்னாள் சட்டபேரவை உறுப்பினர் ஒருவர் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸையும், அன்புமணி ராமதாஸ் அவர்களையும் பாராட்டி கடிதம் எழுதியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இது குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவருடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ள அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது.

ஐயா, இன்று தங்களது டுவிட்டர் பக்கத்தில் தமிழக டி.ஜி.பி. திரிபாதிக்கு பாராட்டு தெரிவித்துள்ளீர்கள். தமிழ்நாடு காவல்துறையின் ஆவணங்கள்,ஆணைகள், கடிதத் தொடர்புகள், கையெழுத்து உள்ளிட்ட அனைத்தும் தமிழில் தான் இருக்க வேண்டும் என்று ஒரு வட இந்திய அதிகாரி உத்தரவிட்டுருப்பதை தாங்கள் பாராட்டியுள்ளீர்கள்.

மற்றவர்கள் இதனைப் பார்த்திருப்பார்களா என்பதே சந்தேகம் தான். ஆனால்தாங்கள் “காவல் துறையில் இனி தமிழ் தழைக்கட்டும் கனிவு பெருகட்டும்” என பாராட்டியிருப்பது இரசிக்கத்தக்கதாக இருந்தது.

ஐயா, நீங்கள் கட்சியா நடத்துகிறீர்கள்; ஓர் பல்கலைகழகத்தையல்லவா நடத்துகிறீர்கள். தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தியாவில் மக்கள் பிரச்சனை எதுவென்றாலும் “Immediate Reaction” செய்வது தாங்களும், மரியாதைக்குரிய டாக்டர் அன்புமணியும் தான், என்றும் அந்த திமுக சட்டபேரவை உறுப்பினர் பாராட்டியுள்ளார்.

பாராட்டிற்குரிய மருத்துவர் ராமதாஸ் அவர்களின் ட்விட்டர் பதிவு:

பாமக மற்றும் திமுக இடையே காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வரும் சூழ்நிலையில் திமுகவை சேர்ந்த முன்னாள் சட்டபேரவை உறுப்பினர் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸை பாராட்டி கடிதம் எழுதியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

கோவையில் அதிர்ச்சி! நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்ற மாணவி பாலியல் பலாத்காரம்

0

கோவையில் அதிர்ச்சி! நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்ற மாணவி பாலியல் பலாத்காரம்

சக நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குச் சென்ற பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை சேர்ந்த பதினொறாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர், சக மாணவர் ராகுல் என்பவருடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட சீரநாயக்கன் பாளையத்தில் உள்ள ஒரு பூங்காவிற்கு சென்றுள்ளார். அங்கு, ராகுலின் நண்பரான மணிகண்டன் என்பவர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த மாணவி புகார் அளித்ததன் பேரில் விசாரணை நடத்திய போலீசார் பள்ளி மாணவர் ராகுலை கைது செய்து சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.

மேலும் குற்றவாளி மணிகண்டனுக்கு உடந்தையாகஇருந்த பிரகாஷ்கார்த்திகேயன் மற்றும் நாராயணமூர்த்தி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள குற்றவாளி மணிகண்டனையும், அவரது மற்றொரு நண்பரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

கடந்த மூன்று நாட்களில் பெண்ககளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து வெளியாகிவருவது பெண்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.இதற்கு முற்று புள்ளி வைக்க கடுமையான சட்டத்தினை ஆளும் அரசுகள் கொண்டுவரவேண்டும் என பொது மக்கள் விரும்புகின்றனர்.