Monday, November 18, 2024
Home Blog Page 5080

இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு

0

இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு

இந்தோனேஷியா நாட்டின் மொலுக்காஸ் என்ற கடல்பகுதியில் நேற்றிரவு 9.47 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்த பகுதி மக்கள் பதட்டமடைந்தனர். இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 45 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும், இது ரிக்டர் அளவில் 7.4-ஆகப் பதிவானதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அச்சமடைந்த அந்த பகுதி பொதுமக்கள், வீடுகளை விட்டு வெளியேறி, வீதிகளில் பாதுகாப்பான இடத்தை நோக்கி சென்று வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் இருந்த நோயாளிகளும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்

மேலும் இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு காரணமாக இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவில் நள்ளிரவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இந்த நிலநடுக்கம் 5.0 என்ற ரிக்டர் அளவில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தோனேஷியாவில் கடந்த செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ரிக்டர் அளவுகோலில் 6.5 என்ற அளவுக்கு ஏற்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

பிறந்த நாளன்று துப்பாக்கி சூடு நடத்தி இருவரை கொன்ற பள்ளி மணவன்! காரணம் என்ன?

0

பிறந்த நாளன்று துப்பாக்கி சூடு நடத்தி இருவரை கொன்ற பள்ளி மணவன்! காரணம் என்ன?

அமெரிக்காவில் உள்ள பள்ளியில் மாணவன் ஒருவர் தன்னுடைய16-வது பிறந்த நாளன்று  பள்ளி வளாகத்திலேயே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். அந்த மாணவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்த பள்ளியை சேர்ந்த16 வயது சிறுமியும் 14 வயது சிறுவனும் இறந்துள்ளனர். இவர்களை மட்டுமல்லாமல் மேலும் மூன்று பேரையும் சுட்டுவிட்டு, அந்த மாணவன் தன்னுடைய தலையிலும் சுட்டுக் கொண்டார் என்று கூறப்படுகிறது.

தன்னுடைய பிறந்த நாளன்று ஆடை அணிந்த வந்த அந்த  மாணவன் துப்பாக்கியால் மற்ற சிறுவர்களை நோக்கி சரமாரியாக சுட்டதாக கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் அவர்கள் வகுப்புகளை விட்டு வெளியே வரமுடியாமல் மாட்டி கொண்டதாக கூறப்படுகிறது.

இவ்வாறு பள்ளி அறைகளில் மாணவர்கள் பதுங்கிக் கிடந்த நிலையில் பெற்றோர் பெரும் பதற்றத்துடன் என்ன நடக்கிறது என்று புரியாமல் காத்திருந்தனர். இறுதியில் ஒருவழியாக துப்பாக்கியால் சுட்ட அந்த சிறுவனை காவல் துறையினர் சுற்றி வளைத்தனர்.

இதனையடுத்து அவனை சுட்டுப் பிடித்துள்ள காவல் துறையினர் ஏன் அப்படி துப்பாக்கி சூடு நடத்தினான் என்று அவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சமீக காலமாக அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வரும் நிலையில் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

சிறுவர்களே இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனையடுத்து பள்ளிகளில் மாணவர்களுக்கு இதுபோன்ற நேரங்களில் என்ன செய்வது,எப்படி தங்களை தற்காத்து கொள்வது என்பது பற்றிய பயிற்சிகள் அவர்களுக்கு அளிக்கப்படுகின்றன.

இந்த சம்பவமானது இந்த ஆண்டில் பள்ளி வளாகத்தில் நடந்த  85 வது துப்பாக்கிச் சூடு ஆகும்.

நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: சபரிமலைக்கு செல்ல குவியும் பெண்கள்

0

நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: சபரிமலைக்கு செல்ல குவியும் பெண்கள்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மறுசீராய்வு மனு மீதான தீர்ப்பு நேற்று வெளியானபோது இந்த மனுவை 7 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றுவதாக மட்டும் அறிவிக்கப்பட்டது. மேலும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு தடை இன்றும் அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் 2 மாத காலம் தொடர்ந்து நடைபெறும் மகரஜோதி மண்டல பூஜை, நாளை மறுநாள் தொடங்குகிறது. சபரிமலை சீசன் தற்போது தொடங்கவுள்ளதை அடுத்து சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்ய ஏராளமான பெண்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு பின் பெண்களும் ஆர்வத்துடன் முன்பதிவு செய்து வருகின்றனர்.

நேற்று நள்ளிரவு வரை 46 பெண்கள் முன்பதிவு செய்துள்ளதாகவும், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு என்றும் கூறப்படுகிறது. முன்பதிவு செய்த பெண்களின் முகவரி உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்பட்டு அவர்களுக்கு பாதுகாப்புடன் கூடிய தரிசனத்துக்கு கேரள அரசு ஏற்பாடு செய்து வருகிறது

அதே சமயம் வழக்கம்போல் ஒருசில அமைப்புகள் பெண்களை சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்க முடியாது என்றும் பெண்கள் நுழைய முயற்சித்தால் தடுப்போம் என்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றன. எனவே சபரிமலை ஐயப்பன் விவகாரம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது

ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு!

0

ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு!

கடந்த, 2017–18ம் நிதியாண்டுக்கான, ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் இம்மாதம் 30ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் இதற்கான கால அவகாசம் டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய வரிகள் வாரியம் அறிவித்துள்ளது

ஜி.எஸ்.டி., என்னும் சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறையில், வரி கணக்கு தாக்கல் செய்ய, பல்வேறு படிவங்கள் இருந்தாலும், இந்த ஆண்டு முழுவதுக்கும், ஒரே கணக்கு தாக்கல் செய்ய, ‘படிவம் – 9’ உள்ளது. ஆண்டுக்கு, 2 கோடி ரூபாய்க்கு கீழ், வரவு – செலவு உள்ள அனைத்து வணிகர்களும் இந்த படிவத்தை தாக்கல் செய்யலாம். அதேபோல் இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் வரவு – செலவு உள்ள நிறுவனங்கள், ‘படிவம் – 9ஏ’ மற்றும் ‘9சி’ தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த நிலையில் கடந்த, 2017 – 18ம் நிதி ஆண்டுக்கான, படிவம் – 9 தாக்கல் செய்வதற்கான அவகாசம் நவம்பர் 30ம் தேதி நிறைவடைய இருந்த நிலையில் தற்போது அதற்கான கால அவகாசம் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

இது குறித்து, மத்திய மறைமுக வரிகள் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் குறிபிடப்பட்டுள்ளதாவது: கடந்த, 2017 – 18ம் நிதி ஆண்டுக்கான, ‘ஜி.எஸ்.டி., ஆர்9 மற்றும் 9சி’ படிவம் தாக்கல் செய்வதற்கான அவகாசம், டிச., 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.மேலும், 2018 – 19ம் நிதி ஆண்டுக்கான, 9 மற்றும் 9சி’ படிவம், 2020, மார்ச், 31க்குள் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், இந்த படிவத்தின் பல்வேறு பிரிவுகளை எளிமையாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.. இதற்காக, உள்ளீட்டு வரி சலுகை உட்பட பல்வேறு அம்சங்களை, தனித் தனியாக தாக்கல் செய்யாமல், தற்போது ஒருங்கிணைந்து, ஒரே படிவமாக தாக்கல் செய்யலாம். வரி செலுத்துவோர் எதிர்கொள்ளும் பல்வேறு சிரமங்களை கவனத்தில் வைத்து, படிவம் – 9 எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.

RTI வளையத்துக்குள் வந்தது உச்சநீதிமன்றம்! மர்மமான வழக்குகளை பற்றி தகவல் வெளி கொண்டுவரப்படுமா?

0

RTI வளையத்துக்குள் வந்தது உச்சநீதிமன்றம்! மர்மமான வழக்குகளை பற்றி தகவல் வெளி கொண்டுவரப்படுமா?

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உச்சநீதிமன்ற அலுவலகமும் கொண்டு வரவேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்,. கடந்த 2010ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற அலுவலகமும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது,.

இதனைத்தொடர்ந்து உச்சநீதிமன்ற பதிவாளர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது,. சுமார் 10 ஆண்டுகளாக நடைபெறும் இந்த வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு நேற்று அதிரடியாக தீர்ப்பு வழங்கியது,.

தீர்ப்பில், உச்சநீதிமன்றத்தின் அலுவல் சார்ந்த விஷயங்களில் உள்ள வெளிப்படைத்தன்மையை நாட்டு மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இனி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உச்சநீதிமன்ற அலுவலகமும் உடனடியாக கொண்டுவர வேண்டும் என்று உத்தரவிட்டனர் நீதிபதிகள்,.

இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற அலுவலகத்தில் உள்ள வழக்கு விபரங்களையும் காலகட்டங்களையும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தனிநபர்கள் கேட்டுப் பெறலாம்,. இதன் மூலம் நீதிமன்றமும் தனது வெளிப்படைத் தன்மையை மக்கள் முன் கொண்டு வர ஒத்துழைத்துள்ளது பாராட்டுக்குரியது. தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் இந்த சட்டத்தின் மூலம் நீதிமன்றத்தில் நடைபெறும் பல மர்மமான வழக்குகள் பற்றிய தகவல்களை கொண்டுவருவார்கள் என்று ஆவலாக சட்ட ஆர்வலர்கள் உள்ளனர்.

100 மான்களை கொன்ற வேட்டைக்காரருக்கு திரைப்படம் பார்க்கும் தண்டனை!

0

100 மான்களை கொன்ற வேட்டைக்காரருக்கு திரைப்படம் பார்க்கும் தண்டனை!

அமெரிக்காவில் உள்ள வேட்டைக்காரர் 100க்கும் மேற்பட்ட மான்களை சட்டவிதிமுறைகளை மீறி வேட்டையாடியதற்காக அவர் மாதம் ஒரு முறை ‘பாம்பி’ என்ற திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்ற தண்டனையை அந்நாட்டு நீதிமன்றம் அளித்துள்ளது. ‘பாம்பி’ என்பது காட்டில் வளரும் இளம் மானின் கதையை மையமாக கொண்ட ஒரு அனிமேஷன் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது

அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தைச் சேர்ந்த டேவிட் பெர்ரி மற்றும் அவரது தந்தை, சகோதரர் ஆகிய மூவரும் அந்த பகுதியில் உள்ள மான்களை இரவு நேரங்களில் வேட்டையாடி, அவற்றின் தலைகளை எடுத்துக்கொண்டு உடலை விட்டுச்சென்ற்யுள்ளனர்.

இதையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் டேவிட் மற்றும் அவரது தந்தையும் சகோதரரும் கைது செய்யப்பட்டனர். மூவர் மீதும் கடந்த ஒரு ஆண்டாக வழக்கு நடந்த நிலையில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பில் மான்களை வேட்டையாடிய குற்றத்திற்காக டேவிட்டுக்கு ஒரு ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. அவரது தந்தை மற்றும் சகோதரரின் வேட்டையாடும் உரிமத்தை வாழ்நாள் முழுவதும் ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த நிலையில் சிறையில் ஒரு ஆண்டு தண்டனை அனுபவிக்கும் டேவிட், ஒவ்வொரு மாதமும் வால்ட் டிஸ்னியின் பாம்பி படத்தை பார்க்க வேண்டும் எனவும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

அசாமில் சக்கை போடு போடும் அட்லியின் தெறி!

0

அசாமில் சக்கை போடு போடும் அட்லியின் தெறி!

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த தெறி திரைப்படம், விஜயகாந்த் நடித்த சத்ரியன் என்ற திரைப்படத்தின் தழுவல் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது தெறி படத்தை தழுவி ஒரு படம் தயாரிக்கப்பட்டு அந்த படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது

அசாம் மாநிலத்தில் சமீபத்தில் ’ரத்னாகர்’ என்ற அசாமிய மொழி திரைப்படம் வெளிவந்து வசூலில் சாதனை படைத்து வருகிறது. இந்த படத்தின் கதை அச்சு அசலாக தெறி படத்தின் கதை போல் உள்ளது தனது மகளின் பாதுகாப்புக்காக யாருக்கும் தெரியாமல் தலைமறைவாக வாழ்ந்து வரும் முன்னாள் கேங்ஸ்டர் ஒருவரின் கதைதான் இந்த ரத்னாகர் என்பது குறிப்பிடத்தக்கது

அஸ்ஸாம் மட்டுமின்றி வட கிழக்கு மாநிலங்களிலும் இந்த படம் பெரிய அளவில் வசூல் செய்து வருவதாகவும் இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு பெரிய லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது

இது குறித்து இந்த படத்தின் தயாரிப்பாளர் சித்தார் கோயங்கா பேசும்போது, “படம் இதுவரை ரூ.9 கோடியே 23 லட்சம் வசூலித்துள்ளது. அசாமில் 9 கோடி ரூபாய் என்றால் ஒரு இந்தித் திரைப்படம் இந்தியாவில் 900 கோடி ரூபாய் வியாபாரம் செய்வதற்கு ஈடாகும்

கடந்த செப்டம்பர் மாதம் வெளியான ’கஞ்சன்ஜங்கா’ என்ற திரைப்படம் முதல் ஐந்து நாட்களில் ரூ.7 கோடியை வசூலித்ததே அசாமில் இதுவரை சாதனையாக இருந்தது. ’ரத்னாகர்’ அந்தச் சாதனையை முறியடித்துள்ளது. அடுத்தடுத்து வசூல் சாதனை படைக்கும் படங்களால் அசாமியத் திரைப்பட வியாபாரத்தில் இருப்பவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

வழக்கமாக இந்திப் படங்களுக்காக அசாமியப் படங்கள் வழிவிடும். இம்முறை அசாமிய படங்கள் முக்கியத்துவம் பெற்று இந்திப் படங்களை ஒதுக்கியுள்ளது என்று பெருமையுடன் தயாரிப்பாளர் சித்தார் கோயங்கா கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று ஆட்டத்தில் இன்று பலப்பரீட்சை

0

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று ஆட்டத்தில் இன்று பலப்பரீட்சை

உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று ஆட்டத்தில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன

22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி 2022-ம் ஆண்டு கத்தார் நாட்டில் நடைபெற உள்ளது. இதில் ஆசிய கண்டத்திற்கான தகுதி சுற்றின் 2-வது ரவுண்டில் இடம் பெற்றுள்ள 40 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் தலா ஒரு முறை மோத வேண்டும்.

இதில் இந்திய அணி தனது 4-வது லீக் ஆட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் தஜிகிஸ்தான் நாட்டில் துஷான்பே நகரில் உள்ள செயற்கை மைதானத்தில் நடக்கிறது.

இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் ஓமனிடம் தோல்வி அடைந்தது. 2-வது ஆட்டம் கோல் எதுவுமின்றி ஆசிய சாம்பியனான கத்தாருடன் ட்ராவில் முடிந்தது. 3-வது ஆட்டமும் 1-1 என்ற கோல் கணக்கில் வங்காளதேச அணியுடன் ட்ராவில் முடிந்தது.எனவே இந்தியா அனி ஆப்கானிஸ்தான் அணியுடன் வெற்றி பெற வேண்டும் என்று தீவிர முனைப்பில் உள்ளது.

ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் 0-3 என்ற கோல் கணக்கில் ஓமனிடமும், 0-6 என்ற கோல் கணக்கில் கத்தாரிடமும் தோல்வியை சந்தித்தது. மூன்றாவது லீக் ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் வங்காளதேசத்தை வென்றது.இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் வெற்றியை தொடரவேண்டும் என்ற முனைப்பில் ஆப்கானிஸ்தான் களமிரங்கவுள்ளது.

இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இதுவரை 8 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இந்தியா 6 முறையும், ஆப்கானிஸ்தான் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்துள்ளது.இன்றைய ஆட்டம் நடைபெறும் மைதானம் செயற்கை மைதானம் என்பதால் இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அசுர வளர்ச்சியை கொடுத்த ஐஆர்சிடிசி நிறுவனம்! ஒரே மாதத்தில் 200 சதவீத லாபம்

0

அசுர வளர்ச்சியை கொடுத்த ஐஆர்சிடிசி நிறுவனம்! ஒரே மாதத்தில் 200 சதவீத லாபம்

இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான ஐஆர்சிடிசி நிறுவனம் சமீபத்தில் IPO மூலமாக பங்கு வெளியீட்டை தொடங்கியது. ஐஆர்சிடிசி நிறுவனத்தின் இந்த பொதுவெளியீடு ஆரம்பம் முதலே களைகட்டி வருகிறது. இந்த பங்கு இந்திய பங்கு சந்தையில் பட்டியிலிடப்பட்ட ஒரு மாதத்திலேயே 200 சதவிகித லாபத்தை அதன் முதலீட்டாளர்களுக்கு கொடுத்துள்ளது. இந்த நிறுவனத்தின் விலையானது கடந்த புதன் கிழமையன்று அதனுடைய வராலாற்று விலை உயர்வான 981.35 ரூபாயை தொட்டது. இந்த நிலையிலேயே, IPO மூலம் இந்த நிறுவனத்தின் பங்குகள் வெளியிட்ட சுமார் 31 நாட்களில் 206 சதவிகித லாபத்தை அதன் முதலீட்டாளர்களுக்கு கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இந்த நிறுவனத்தின் பொது பங்கு வெளியீடு தொடங்கி, தற்போது வரை இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. இவ்வாறு தொடர் ஏற்றத்தை கொடுத்து வரும் இதை அசுர வளர்ச்சி என்று தான் கூற வேண்டும்.

சிறு சிறு சில்லறை முதலீட்டாளர்கள் முதல், பெரிய நிறுவனங்கள் வரை கையிருப்பு உள்ளவரை போதுமான அளவில் இந்த பங்கினை வாங்கி போட்டார்கள். இதனால் தான் 2.01 பங்குகளுக்கு 225.09 கோடி விண்ணப்பங்கள் வந்தது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி இந்த நிறுவனத்தின் பங்குகள் பங்கு சந்தையில் பட்டியிலிடப்பட்டது. அதிலும் ஆச்சரியம் என்னவென்றால் IPO வில் இந்த பங்கானது 320 என்ற விலைக்கு விற்கப்பட்ட நிலையில், பங்கு சந்தையில் பட்டியிலிடப்பட்ட தொடக்கத்திலேயே அதன் விலையானது 725 ரூபாய் மேல் வர்த்தகமானது தான்.

இந்த நிலையில் தொடர்ச்சியான ஏற்றம் கண்டு வரும் இந்த நிறுவனம்,இன்று ஒரு மாத காலத்திற்கு பின்பு, தற்போது 22 ரூபாய் வீழ்ச்சி கண்டு 910 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. எனினும் கடந்த புதன் கிழமையன்று இதன் புதிய உச்சமான 981 ரூபாய் வரை சென்று அதிலிருந்து சற்றே சரிந்துள்ளது. இதன் படி இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் ஒரு மாதத்திலேயே 206 சதவிகித லாபத்தை கண்டுள்ளனர்.

இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் இந்திய பங்கு சந்தையில் பட்டியிலிடப்பட்ட நாளன்று 10,736 கோடி ரூபாயாக இருந்த நிலையில், நவம்பர் 13 ஆம் தேதியன்று 14,908 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கடந்த புதன் கிழமையன்று இந்த பங்கின் விலையானது 5.20 சதவிகிதம் அதிகரித்து புதிய உச்சத்தைத் தொட்டது. இந்த நிலையில் சந்தை முடிவில் 932.80 ரூபாயாகவும் முடிவடைந்தது. இதன் படி இதன் சந்தை மூலதனம் தற்போது 15,575 கோடி ரூபாயாக இருந்துள்ளது.

அரசுக்கு முழுவதும் சொந்தமான இந்த நிறுவனம் 100 சதவிகித பங்கினை வைத்திருந்த நிலையில், தற்போதைய நிலையில் 12.6 சதவிகித பங்கினை விற்றுள்ளது. நிலையில் இந்த பொதுப் பங்கு வெளியீட்டுக்கு பின்பு அரசின் பங்கு 87.4 சதவிகிதமாக குறைந்துள்ளது. இந்த நிலையில் அரசின் செயல்பாடுகளினால் இந்த நிறுவனத்தின் இலாபம் மேலும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அரசின் பல சலுகைகள் மற்றும் ஊக்குவிப்பு நடவடிக்கைகள், வரும் காலத்தில் பயணிகளின் டிக்கெட் விலை அதிகரிக்கலாம், மேலும் இது மட்டுமல்லாமல் இந்த நிறுவனத்திற்கு போட்டி நிறுவனம் என்றும் எதுவும் கிடையாது என பல சாதகமான அம்சங்கள் உள்ளது. இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது யாரும் எதிர்பாராத அளவு ஏற்றம் கண்டுள்ளது. இது போன்ற பல காரணிகளால் இந்த நிறுவனத்தின் பங்கு விலை இன்று வரை வலுவான நிலையிலேயே உள்ளது.மேலும் இந்த நிறுவனத்தின் விலையானது தொடர்ந்து உயரும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.