Sunday, November 17, 2024
Home Blog Page 5086

நாளை நீதிமன்றம் செல்லவுள்ளோம்: நடிகர் சங்க நிர்வாகிகள் பேட்டி

0

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் சங்கத்திற்கு தனி அதிகாரி ஒருவரை நியமனம் செய்து தயாரிப்பாளர் சங்கத்தை முடக்கிய தமிழக அரசு, தற்போது நடிகர் சங்கத்துக்கும் தனி அதிகாரி ஒருவரை நியமனம் செய்துள்ளது. தனி அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ள கீதா என்ற பெண் அதிகாரியின் கட்டுப்பாட்டில் தான் இனி நடிகர் சங்கம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரியை நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் தங்கள் ஆதங்கத்தை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது நடிகர் சங்க தலைவர் நாசர் அவர்கள் கூறிய போது ’தனி அதிகாரிக்கு நாங்கள் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை, மேலும் அவர்களுக்கு தேவையான ஒத்துழைப்பையும் அனைத்தையும் செய்து கொடுப்போம். இந்த பிரச்சினை தொடர்பாக நாங்கள் முதலமைச்சரையும் செய்தித் துறை அமைச்சரையும் சந்திக்க திட்டமிட்டு உள்ளோம். நாங்கள் சட்டரீதியாகவும் ஜனநாயகத்துடன் தேர்தலை எதிர்கொண்டோம். இனிமேலும் சட்ட ரீதியாகத்தான் செயல்படுவோம் என்று கூறினார்

இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பூச்சிமுருகன் பதில் கூறிய போது ’சிறப்பு அதிகாரி நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவுள்ளோம். நான்கு பேர் கொடுத்த புகாரின் அடிப்படையில் 3000 பேர் உறுப்பினராக கொண்ட சங்கத்திற்கு ஒரு தனி அதிகாரியை நியமித்து உள்ளது சரியான நடவடிக்கை அல்ல. ராதாரவி காலத்தில் சங்கத்தில் பல குளறுபடிகள் இருந்தபோது இந்த நடவடிக்கையை ஏன் அப்போதைய அரசு செய்யவில்லை’என்று கேள்வி எழுப்பினார்

மேலும் நடிகர் சங்கம் கடந்த சில மாதங்களாக இயங்கவில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்த நடிகர் சங்கத்தின் பொருளாளர் கார்த்தி, கடந்த ஆகஸ்ட் மாதம் வரை அனைவருக்கும் பென்ஷன் சென்று கொண்டிருந்தது என்றும், எனவே சங்கம் செயல்படவில்லை என்று கூறுவது தவறு என்றும் கூறினார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்பார்’ அட்டகாசமான மோஷன் போஸ்டர்

0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ’தர்பார்’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது தெரிந்ததே. தமிழில் கமலஹாசன், மலையாளத்தில் மோகன்லால், தெலுங்கில் மகேஷ்பாபு மற்றும் இந்தியில் சல்மான்கான் ஆகியோர் இன்று மாலை 5.30 மணிக்கு ஒரே நேரத்தில் ’தர்பார்’ படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்

இந்த நிலையில் கமல்ஹாசன் வெளியிடப்பட்ட தமிழ் மோஷன் போஸ்டர் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. ஆதித்யா அருணாச்சலம் என்ற கேரக்டரில் ரஜினிகாந்த் நடித்து உள்ளார் என்பது இந்த மோஷன் போஸ்டர் மூலம் உறுதியாகியுள்ளது. மேலும் போலீஸ் உடையில் அட்டகாசமாக எதிரிகளை கத்தியால் தாக்கும் காட்சியும் மோஷன் போஸ்டரில் உள்ளது.

அனிருத்தின் அட்டகாசமான பின்னணி இசையின் இடையில் ’தலைவா’ என்ற வார்த்தையும் உள்ளது ரஜினி ரசிகர்களுக்கு சரியான விருந்து. இந்த மோஷன் போஸ்டர் வெளியான ஒரு சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கான லைக்ஸ்களை இந்த மோஷன் போஸ்டரின் வீடியோ பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

கமல்ஹாசன் பிறந்த நாளில் கமலஹாசனின் டுவிட்டர் பக்கத்தில் ரஜினி படத்தின் மோஷன் போஸ்டர் ஒன்று வெளியாகி இருப்பது இருதரப்பு ரசிகர்களுக்கும் ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

பட்டப்பெயர், பட்டாசு வேண்டாம்: தொண்டர்களுக்கு உதயநிதியின் கண்டிப்பு அறிக்கை

0

பட்டப்பெயர், பட்டாசு வேண்டாம்: தொண்டர்களுக்கு உதயநிதியின் கண்டிப்பு அறிக்கை

திமுக இளைஞரணி செயலாலர் உதயநிதி ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், ‘இனி, நான் சம்பந்தப்படாத, கலந்துகொள்ளாத நிகழ்ச்சிகள் பற்றிய நாளிதழ் அறிவிப்புகள், சுவரொட்டிகள், அழைப்பிதழ்களில் என் புகைப்படத்தை கழகத்தினர் பயன்படுத்தக்கூடாது. மேலும் பட்டப்பெயர்கள் சூட்டுவதையும், நிகழ்ச்சிகளுக்கு வரும்போது பட்டாசு வெடிப்பதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள முழு அறிக்கையின் விபரம் வருமாறு:

மதவெறி கூட்டத்துக்குத்‌ தமிழ்‌ மண்ணில்‌ அறவே இடமில்லை என்பது நாம்‌ அறிந்ததே. இது, அந்த கூட்டத்துக்கும்‌ தெரியும்‌. ஆனால்‌ நம்‌ பெருமித அடையாளங்கள்‌ பற்றி உண்மைக்கு மாறான தகவல்களைத்‌ திரித்து பிரச்சாரம்‌ செய்வதன்மூலம்‌ இங்கு தங்களுக்குச்‌ செல்வாக்கு இருப்பதுபோன்ற ஒரு மாயத்‌தோற்றத்தை ஏற்படுத்தும்‌ வேலைகளில்‌ இறங்கியுள்ளனர்‌. இதற்கு மாநிலத்தில்‌ ஆளும்‌ கையாளாகாத அடிமை அரசும்‌ துணை போவதுதான்‌ வேதனை

இந்த சூழலில்‌ பொய்‌ பிரச்சாரம்‌ செய்யும்‌ மதவெவறி கும்பலுக்கு நாமும்‌ தீனி போட்டுவிடக்கூடாது என்பதே என்‌ வேண்டுகோள்‌. சில தொலைக்காட்சிகளில்‌, திமுக சம்பந்தப்பட்ட சுவராட்டிகளில்‌ மூத்த தலைவர்களின்‌ புகைப்பபங்களைவிட உதயநிதியின்‌ புகைப்படமே பிரதான இடம்பிடிக்கிறது. இதற்கு யார்‌ காரணம்‌’ என்று பரபரப்பாக விவாதிக்கிறார்கள்‌

இதுபோன்ற செய்திகள்‌, இந்த ஆட்சிகளின்‌ அவலத்தை திசை திருப்ப நடக்கும்‌ வேலையேத்தவிர, இதில்‌ ஆக்கப்பூர்வமான அறிவுபுகட்டும்‌ பணி துளியும்‌ இல்லை என்பது உங்களுக்கே தெரியும்‌. இருந்தாலும்‌ நாமும்‌ கட்டுப்பாட்டுடன்‌ நடந்துகொள்வது அவசியம்‌. இது, உங்களுக்கு நான்‌ ஏற்கெனவே சொன்னதுதான்‌. இருந்தாலும்‌ உறுதியாகவும்‌ இறுதியாகவும்‌ மீண்டும்‌ நினைவுபடுத்துகிறேன்‌

இனி. நான்‌ சம்பந்தப்படாத, நான்‌ கலந்துகொள்ளாத நிகழ்ச்சி பற்றிய நாளிதழ்‌ அறிவிப்புகளிலோ, சுவரராட்டிகளிலோ, அழைப்பிதழ்களிலோ என்‌ புகைப்படத்தைக்‌ கழகத்தினர்‌ யாரும்‌ பயன்படுத்தக்கூடாது எனக்‌ கேட்டுக்கொள்கிறேன்‌. பெரியார்‌, அண்ணா, கலைஞர்‌, பேராசிரியர்‌, கழகத்‌தலைவர்‌ போன்ற நம்‌ முன்னோடிகளின்‌ புகைப்படங்கள்தான்‌ இடம்பெற வேண்டும்‌

இதேபோல்‌, “முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌” என்பவர்‌ ஒரே ஒருவர்தான்‌. அப்படிஒயாரு பன்முகத்தன்மை கொண்ட ஆளுமைக்கு நிகராக வேறொருவரை நம்மால்‌ காட்டிட முடியுமா? உண்மை இப்படியிருக்கையில்‌ என்‌ பெயருக்கு முன்னால்‌, “மூன்றாம்‌ கலைஞர்‌, திராவிட கலைஞர்‌, திராவிட தளபதி, இளம்‌ தலைவர்‌” போன்ற பட்டப்பெயர்கள்‌ இடுவதை எந்தவகையில்‌ சேர்ப்பது என்றே தெரியவில்லை. இப்படி பட்டப்‌பெயரிட்டு விளிப்பதால்‌, “நாளையிலிருந்து நான்‌ என்ன கலைஞராகிவிடப்போகிறேனா? கலைஞருக்கு நிகர்‌ கலைஞர்‌ மட்டுமே, நம்‌ தலைவருக்கு நிகர்‌ தலைவர்‌ மட்டுமே

இனி, இதுபோன்ற தர்மசங்கடங்களுக்கு என்னை ஆளாக்கமாட்டீர்கள்‌ என நம்புகிறேன்‌. நான்‌, “உங்களில்‌ ஒருவனாக, உங்களின்‌ மனதுக்கு நெருக்கமான உதயநிதியாகவே எப்போதும்‌ இருக்கவிரும்புகிறேன்‌. அதனால்‌ தயவுசெய்து பட்டப்பெயர்களை தவிர்க்குமாறும்‌ கேட்டுக்கொள்கிறேன்‌. இதேபோல, நான்‌ நிகழ்ச்சிகளுக்கு வரும்போது பட்டாசு வெடிப்பதையும்‌ நிறுத்தவேண்டும்‌. என்‌ வருகையை மக்களுக்கு உணர்த்தும்‌ வகையில்‌ செலவு செய்தே ஆகவேண்டும்‌ என நீங்கள்‌ நினைத்தால்‌, பட்டாசு வாங்க ஆகும்‌ பணத்தை என்‌ முன்னிலையில்‌ ஏழை எளிய மக்களின்‌ அத்தியாவசிய‌ தேவைகளுக்குக்‌ கொடுத்துதவுங்கள்‌. அதுவே நம்‌ மனதுக்கு நிறைவான கொண்டாட்டமாக அமையும்‌

மேலும்‌ கழகக்‌கொடி கட்டுவதைக்கூட காவல்துறையின்‌ அனுமதி பெற்று மக்களுக்கு இடையூறு இல்லாதவகையில்‌ அமைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்‌. ஃப்ளெக்ஸ்‌ பேனர்களை அறவே தவிர்க்கவும்‌” என்ற நம்‌ கழகத்‌தலைவரின்‌ அறிவுறுத்தலை கடைக்கோடி தொண்டர்கள்வரை கட்டளையாக ஏற்றுக்‌ கடைப்பிடிப்பதை நினைத்து பருமையடையும்‌ நான்‌, மேற்கண்ட என்‌ வேண்டுகோள்களையும்‌ ஏற்றுக்‌கொண்டு நிறைவேற்றுவீர்கள்‌ என நம்புகிறேன்‌

“ஏற்கெனவே பேனர்‌ வேணாம்னு சொல்லிட்டீங்க. இப்ப, பட்டாசு கூடாதுங்குறீங்க. பட்டப்பேரையும்‌ தவிர்க்க சொல்றீங்க, கூடுதலா போட்டோவே வேண்டாம்ங்கிறீங்க. நீங்க வர்றதை அப்புறம்‌ நாங்க எப்படித்தான்‌ கொண்டாடூறது?” என்று உரிமையுடன்‌ கேள்வி எழுப்பும்‌ உங்களின்‌ மனக்குரலை என்னால்‌ கேட்க முடிகிறது. உங்களை பற்றி நானும்‌ என்னைப்பற்றி நீங்களும்‌ புரிந்துகொள்ள, பகிர்ந்துகொள்ள இந்த பட்டாசு, பட்டம்‌, புகைப்படம்‌ போன்றவை தேவையா என்ன?

பொய்யர்களின்‌ இரைச்சல்‌ அதிகரித்துள்ள இந்த விஷச்சூழலில்‌ சமூகநீதியை, இனத்தை, பண்பாட்டை, மொழியைக்‌ காக்கவேண்டிய இடத்திலுள்ள நாம்‌, இதுபோன்ற தேவையற்ற விளம்பரங்களைத்‌ தவிர்த்து ஆக்கப்பூர்வமாகக்‌ கடமையாற்றுவோம்‌

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

அமைச்சர் மாபா பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டம்: முக ஸ்டாலின் முக்கிய அறிக்கை

0

முக ஸ்டாலினின் மிசா சிறை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த அமைச்சர் பாண்டியராஜனுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திமுகவினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த போராட்டங்களை தவிர்க்குமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தியாகம் செய்து அரசியலுக்கு வந்து, மக்கள் தரும் பதவிப் பொறுப்புகளை அடைந்தவர்களுக்குத்தான், தியாகத்தைப் புரிந்து கொள்ளும் அறிவும் பக்குவமும், கொச்சைப்படுத்தாத சிந்தனையும் வரும். திரும்பி வராதது காலம்; திருத்தி எழுதப்பட முடியாதது வரலாறு. எவ்வளவு படித்திருந்தாலும், சிலருக்கு இந்த அடிப்படை புரியாது. சுமார் 44 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தியாக வரலாற்று நிகழ்வுகளை, அவருடைய அரசியல் லாப நோக்கில், வக்கிர எண்ணத்துடன், திருத்தி எழுத எத்தனிக்கிறார், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

அரசியலமைப்புச் சட்டத்தின்பால் பதவிப்பிரமாணம் எடுத்துவிட்டு, நாலாந்தரப் பேச்சாளரின் நடையைத் தழுவி, பாண்டியராஜன் பேசி இருப்பது, உண்மையில் எனக்கு வருத்தம் தரவில்லை. இதுபோன்ற எத்தனையோ ஏசல்களையும் இழிமொழிகளையும் அவமானங்களையும் சுமந்துதான், திராவிட முன்னேற்றக் கழகம் என்ற தன்மான – அறிவியக்கம் எழுந்து, தலை நிமிர்ந்து நிற்கிறது. எனவே, அமைச்சர் பாண்டியராஜனுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் நடத்தி வரும் எதிர்ப்புப் போராட்டங்களை, அன்புகூர்ந்து தவிர்க்குமாறு கழகத் தோழர்களைக் கேட்டுக் கொள்கிறேன்

அவர் பயன்படுத்தும் சொல், அவர் யார் என்பதையும், அவரது தரத்தையும் இந்த நாட்டு மக்களுக்குத் தோலுரித்துக் காட்டிவிட்டது; அவ்வளவு தான். பயனில் சொல் பாராட்டுவாரை பதர்தான் என்றார் அய்யன் திருவள்ளுவர். இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்ற வள்ளுவரின் அறிவுரைக்கு ஏற்ப நாம் நடந்து கொள்வோம். மறப்போம், மன்னிப்போம்! இது தான் பேரறிஞர் அண்ணா அவர்களும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் நமக்குக் கற்றுத் தந்த அரசியல் பாடங்கள். பாண்டியராஜன் என்ன படித்தார், எதைக் கற்றார், என்ன புரிந்து கொண்டார் என்பதை, அவர் பயன்படுத்தும் சொற்களே காட்டிக் கொடுத்துவிட்டது

இவ்வாறு முக ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

பெண் தாசில்தாரை கொலை செய்த விவசாயி மர்ம மரணம்!

0

தெலுங்கானா மாநிலம் அப்துல்லாபூர்மெட் என்ற பகுதியைச் சேர்ந்த தாசில்தார் விஜயா ரெட்டி என்பவர் தனது அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது அவரை பார்க்க வந்த சுரேஷ் என்ற விவசாயி திடீரென அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தீ வைத்தார்.

இந்த சம்பவத்தில் விவசாயி சுரேஷுக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இந்த நிலையில் தீயால் எரிந்து கொண்டிருந்த தாசில்தாரை காப்பாற்ற முயன்ற டிரைவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. இதனையடுத்து மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சம்பவம் நடந்த சில நிமிடங்களில் தாசில்தார் விஜயா ரெட்டி மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது

அதனை 90% தீக்காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த தாசில்தாரின் டிரைவர் நேற்று மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று தாசில்தார் மீது பெட்ரோல் ஊற்றிய விவசாயி சுரேஷும் மரணமடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்

விவசாயி சுரேஷுக்கு 60% அளவில் தீக்காயம் இருந்ததாகவும், அவர் குணமாக அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படு வந்த நிலையில் திடீரென அவரும் இன்று மரணமாகி இருப்பது பெரும் மர்மமாக இருப்பதாக அந்த பகுதியில் உள்ள ஒரு தெரிவித்து வருகின்றனர்

நிலம் பட்டா மாற்றம் விவகாரத்தில் ஒரு சிறிய கருத்து வேறுபாடு காரணமாக தற்போது மூன்று உயிர்கள் பலியாகி இருப்பது தெலுங்கானா மாநிலத்தை உலுக்கி உள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

முரசொலி விவகாரத்தில் செலக்டிவ் அம்னீஷியாவா ஸ்டாலினுக்கு? விடாமல் துரத்தும் பாமக தலைவர் ஜி.கே.மணி

0

முரசொலி விவகாரத்தில் செலக்டிவ் அம்னீஷியாவா ஸ்டாலினுக்கு? விடாமல் துரத்தும் பாமக தலைவர் ஜி.கே.மணி

அசுரன் படத்தை பார்த்துவிட்டு பாராட்டியதோடு விட்டு இருந்தால் இவ்வளவு பெரிய நெருக்கடியை சந்தித்து இருக்க மாட்டார் மு.க.ஸ்டாலின், படத்தை பாடம் என்று சொல்லி இனிமேல் எந்த படத்தை பார்க்காமல் செய்துவிட்டார் பாமக நிறுவனர் இராமதாஸ்,.

அவர் பற்ற வைத்த நெருப்பு இன்று காட்டுத்தீ போல் பரவி தமிழக அரசியலையே புரட்டி எடுத்து வருகிறது, பாமகவும் பாஜகவும் இணைந்து இரட்டை குழல் துப்பாக்கி போல் முரசொலி விவகாரத்தில் வெடித்து வருகிறது,. இதற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறி வருகின்றனர் திமுகவினர்.,

முரசொலி விவகாரத்தில் உரிய ஆவணத்தை தகுந்த நேரத்தில் வெளியிடுவேன் என்று நேற்று ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கைக்கு பதிலாக
பாமக தலைவர் ஜி.க.மணி வெளியிட்டுள்ள அறிக்கை இதோ!

முரசொலி நிலம் குறித்த அனைத்து ஆவணங்களையும் உரிய அதிகாரம் படைத்த ஆணையத்திடம் ஒப்படைக்கப் போவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறியிருக்கிறார். எப்போது, எந்த ஆணையத்திடம் அந்த ஆவணங்களை ஒப்படைக்கப் போகிறார் என்பதை அறிவிக்காவிட்டாலும் கூட, பெயரளவிலாவது முரசொலி நிலம் தொடர்பான ஆவணங்களை வெளியிட முன்வந்திருப்பதை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்கிறது.

முரசொலி நிலம் பற்றி விளக்கமளிப்பதற்காக நேற்று வெளியிட்ட அறிக்கையில், திமுகவின் அறைகூவலுக்கு பாட்டாளி மக்கள் கட்சியிடமிருந்து பதில் வரவில்லை என்று கூறியிருக்கிறார். மு.க.ஸ்டாலினின் அறியாமையை நினைத்து பரிதாபம் தான் வருகிறது. முரசொலி நிலம் குறித்து மு.க.ஸ்டாலின் விடுத்த அறிக்கை தொடர்பாக முதலில் அக்டோபர் 20-ஆம் தேதியும், பின்னர் 27-ஆம் தேதியும் நான் விரிவாக பதிலறிக்கை வெளியிட்டேன். அவற்றையெல்லாம் மு.க.ஸ்டாலின் அவர்கள் படிக்கவில்லையா… அல்லது அவருக்கு செலக்டிவ் அம்னீஷியாவா? என்பது தெரியவில்லை. ஒரு விஷயத்தில் பதுங்குவதற்காகவே படிக்கவில்லை என்று கூறுவதும் கூட ஒரு வகை கலை தான். அந்தக் கலையில் தேர்ந்தவர்கள் திமுக தலைமை பீடத்தினர் என்பதை அனைவரும் அறிவர்.

முரசொலி நில சர்ச்சை எழுந்த நாள் முதல் இன்று வரை பாட்டாளி மக்கள் கட்சியும், அதன் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களும் எழுப்பும் வினாக்கள் மிகவும் எளிமையானவை. முரசொலி நிலம் பஞ்சமி நிலம் அல்ல… அது தனியார் பட்டா நிலம் என்றால், அதற்குரிய ஆவணங்களான நிலப்பதிவு பத்திரங்கள், 1924-ஆம் ஆண்டின் யு.டி.ஆர் ஆவணங்கள் எங்கே? அவை மு.க. ஸ்டாலினிடம் உள்ளனவா, இல்லையா? அரசு ஆதிதிராவிட மாணவர்கள் நல விடுதி அமைந்திருந்த இடம் முரசொலிக்கு கைமாறியது எப்படி? என்பன தான் அந்த வினாக்கள். அந்த வினாக்களுக்கு மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்னும் பதிலளிக்கவில்லை.

இரண்டாவதாக, பொதுவாழ்விலும், நீதிமன்றத்திலும் குற்றம் சுமத்தியவர் தான் அதை நிரூபித்திட வேண்டும் என்ற புதிய உண்மையை மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். மகிழ்ச்சி. அப்படியானால், முரசொலி நிலம் குறித்து மருத்துவர் அய்யா அவர்கள் கடந்த 17.10.2019 அன்று டுவிட்டரில் பதிவிட்ட 24 மணி நேரத்தில், 1960-களில் வாங்கப்பட்ட அஞ்சுகம் பதிப்பகத்திற்கு சொந்தமான நிலத்திற்கு 20 ஆண்டுகள் கழித்து பெறப்பட்ட பட்டாவை அவசரம், அவசரமாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டது ஏன்? முரசொலி பட்டா நிலம் என்று நம்ப வைக்கவா?

முரசொலி நிலம் குறித்த பட்டாவை வெளியிட்ட மு.க.ஸ்டாலின் மூலப் பத்திரத்தை வெளியிடாதது ஏன்? என்று மருத்துவர் அய்யா வினா எழுப்பி இன்றுடன் 20 நாட்கள் ஆகி விட்ட நிலையில் அந்த பத்திரங்களை ஸ்டாலின் இன்று வரை வெளியிடவில்லை என்றால், அதன் பொருள் என்ன? என்பது அனைவருக்கும் தெரியும். 24 மணி நேரத்தில் பட்டா வெளியான நிலையில், 20 நாட்களாகியும் மூலப்பத்திரம் வெளிவரவில்லை என்பதிலிருந்தே இந்த விஷயத்தில் உண்மை என்ன? என்பது உலகத்திற்கு தெரிந்து விட்டது.

இப்போதும் கூட எந்த ஆணையத்திடம், எப்போது ஆவணங்களை தாக்கல் செய்யப் போகிறார் என்பதை ஸ்டாலின் கூறவில்லை. எனினும், முரசொலி நிலம் தொடர்பான ஆவணங்களை அவர் தாக்கல் செய்யப் போகும் நாள் எந்த நாளோ, அந்த நாளுக்காக தமிழ்நாடு காத்திருக்கிறது. அந்த ஆவணங்கள் மற்றும் அது குறித்த விசாரணையின் முடிவில் முரசொலி நிலம் குறித்த புதிய உண்மைகள் கூட வெளிவரலாம் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கழிவு நீரை திறந்து விட்டு தமிழ்நாட்டு காவிரியை திட்டமிட்டு அசுத்தப்படுத்தும் கர்நாடக அரசின் செயலை கண்டிக்கும் மருத்துவர் ராமதாஸ்

0

கழிவு நீரை திறந்து விட்டு தமிழ்நாட்டு காவிரியை திட்டமிட்டு அசுத்தப்படுத்தும் கர்நாடக அரசின் செயலை கண்டிக்கும் மருத்துவர் ராமதாஸ்

தமிழகத்தில் பாயும் காவிரியை அசுத்த படுத்தும் வகையில் திட்டமிட்டே கழிவு நீரை திறந்து விடும் கர்நாடக அரசின் செயலை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கண்டித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் “நிறம் மாறி நாறும் மேட்டூர் அணை நீர்:
தூய்மைப்படுத்த நடவடிக்கைத் தேவை!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

மேட்டூர் அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீர் முதலில் பச்சை நிறமாகவும், பின்னர் நீல நிறமாகவும் மாறி கடுமையாக நாற்றமடிக்கத் தொடங்கியுள்ளது. காவிரியில் கர்நாடகம் கழிவுநீரை திறந்து விட்டு அசுத்தப்படுத்துவது தான் இதற்கு காரணம் ஆகும். தமிழ்நாட்டு காவிரியை திட்டமிட்டு அசுத்தப்படுத்தும் கர்நாடக அரசின் செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

தென்னிந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றான மேட்டூர் அணையில் 153.46 சதுர கி.மீ பரப்பளவில் தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. மேட்டூர் அணை இன்றைய நிலையில் முழுமையாக நிரம்பியுள்ளது. கடந்த 10 வாரங்களுக்கு மேலாகவே அணையின் நீர்மட்டம் 100 அடிக்கும் கூடுதலாக இருந்து வரும் நிலையில், செப்டம்பர் மாத இறுதியில் பண்ணைவாடி, கோட்டையூர், காவேரிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நீர்ப்பரப்பு மீது பச்சை நிறத்தில் வேதிப்படலம் ஏற்படத் தொடங்கியது. பின்னர் படிப்படியாக மற்ற பகுதிகளுக்கும் இந்தப் படலம் பரவியது. பச்சை நிற வேதிப்படலம் பரவிய இடங்களில் தாங்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசத் தொடங்கியது. ஆனால், அது சரி செய்யப்படவில்லை.

மேட்டூர் அணை நீர் மீது படர்ந்த வேதிப்படலம் அகற்றப்படாத நிலையில், தொடர் வேதிவினைகளின் விளைவாக கடந்த சில நாட்களாக அது நீல நிறமாக மாறியிருக்கிறது. அதுமட்டுமின்றி துர்நாற்றத்தின் தீவிரமும் அதிகரித்திருக்கிறது. மேட்டூர் அணையின் கரையோரப் பகுதிகளில் அமைந்துள்ள ஊர்களில் வாழும் மக்கள், தங்களின் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் அடைந்து கிடக்கின்றனர். மேட்டூர் அணையின் கரைப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்களின் வகுப்பறைகளில் மாணவர்களும், ஆசிரியர்களும் ஊதுபத்தி கொளுத்தி, நாற்றத்தை சமாளித்தனர். வீடுகளிலும் பொதுமக்கள் செயற்கை நறுமணத்தின் உதவியுடனேயே பொழுதுகளை கழித்து வருகின்றனர். இன்னும் பலர் துர்நாற்றத்தை தாங்க முடியாமல் தங்கள் வீடுகளை பூட்டி விட்டு வெளியூர்களுக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.

கர்நாடகத்திலிருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் கழிவுகள் தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அதில் உண்மை இல்லாமல் இல்லை. பெங்களூரு நகரிலும், அதையொட்டிய பகுதிகளிலும் உள்ள வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து ஒவ்வொரு நாளும் 150 கோடி லிட்டர் கழிவுகள் காவிரியில் கலக்கவிடப்படுகின்றன. இதை கர்நாடக அரசே வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறது. மேட்டூர் அணை நீரில் படிந்துள்ள பசுமைப்படிமம் மற்றும் நீரை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எடுத்துச் சென்று ஆய்வுக்கு உட்படுத்தினார்கள். ஆனாலும், அதன் தொடர்ச்சியாக மேட்டூர் அணை நீரை தூய்மைப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது வேதனையளிக்கிறது.

மற்றொருபுறம் மேட்டூர் அணையின் நீர்த்தேக்கப் பகுதிகளில், போதிய அளவில் தண்ணீர் இல்லாத போது, பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டதால், அதற்காக பயன்படுத்தப்பட்ட யூரியாவின் கழிவுகள் காவிரி நீரில் கலந்ததாகவும், அதனால் தண்ணீரில் கலந்திருந்த பாசிகள் வளர்ந்ததால் தான் பசுமைப் படிமம் ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதாகவும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது உண்மையா….. திசை திருப்பும் செயலா? என்பது தெரியவில்லை. மேட்டூர் அணையிலிருந்து நாற்றம் வீசத் தொடங்கி பல வாரங்களாகியும் அது சரி செய்யப்படாததை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

மேட்டூர் அணையில் தேக்கப்பட்டிருக்கும் நீரில் இத்தகைய பசுமைப் படிமம் ஏற்படுவதோ, அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதோ புதிதான ஒன்றல்ல. கடந்த 2018-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலும் இதேபோன்று பசுமைப் படிமம் ஏற்பட்டு பல வாரங்களாகியும் அது சரி செய்யப்படாததால், நீரில் ஆக்சிஜன் அளவு குறைந்து பல கிலோ மீட்டர் தொலைவுக்கு மீன்கள் செத்து மிதந்தன. அதற்கு முன்பும் இதேபோன்ற நிலை ஏற்பட்ட போது, மேட்டூர் அணையை தூய்மைப்படுத்த வேண்டும்; காவிரி ஆற்றில் கர்நாடகம் கழிவுகளை திறந்து விடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. அதன்பிறகும் அடிக்கடி மேட்டூர் அணை தண்ணீர் பசுமையாக மாறுவதும், அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதும் தடுக்கப்படாதது நல்வாய்ப்புக் கேடானதாகும்.

மேட்டூர் அணை தண்ணீர் உடனடியாக தூய்மைப்படுத்தப்படாவிட்டால் அணை நீரில் உள்ள மீன்கள் மீண்டும் செத்து மிதக்கும் ஆபத்து உள்ளது. அதுமட்டுமின்றி, நோய்கள் பரவும் வாய்ப்புகளும் உள்ளன. எனவே, மேட்டூர் அணை தண்ணீரை தூய்மைப்படுத்தவும், துர்நாற்றத்தைப் போக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, காவிரி நீர் தமிழக எல்லைக்குள் நுழையும் பிலிகுண்டுலு பகுதியில் தண்ணீர் மாதிரியை எடுத்து ஆய்வு செய்து, அதில் எந்த அளவுக்கு கழிவுகள் கலந்துள்ளன என்பதை தமிழக அரசு நிரூபிக்க வேண்டும். இதே ஆய்வை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கும்படி காவிரி மேலாண்மை ஆணையத்தை தமிழக அரசு முறைப்படி கேட்டுக்கொள்ள வேண்டும்.

இவற்றுக்கெல்லாம் மேலாக காவிரியை கர்நாடகம் சாக்கடையாக பயன்படுத்தி கழிவு நீரை வெளியேற்றுவதை நிரந்தரமாகத் தடுக்கவும், இதுவரை காவிரியை அசுத்தப்படுத்தியதற்காக கர்நாடக அரசிடமிருந்து உரிய இழப்பீட்டை பெறவும் அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

கோவை சிறுமி பலாத்கார வழக்கு: குற்றவாளிக்கு தூக்கு உறுதி

0

கோவை சிறுமி பலாத்கார வழக்கு: குற்றவாளிக்கு தூக்கு உறுதி

கடந்த 2010ஆம் ஆண்டு கோவையைச் சேர்ந்த 11 வயது சிறுமி தனது சகோதரன் 8 வயது சிறுவன் ரித்திக் என்பவருடன் சாலையில் நடந்து சென்ற போது திடீரென இருவரும் கடத்தப்பட்டு, பின்னர் பிணமாக மீட்கப்பட்டனர்

இந்த நிலையில் சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்தனர். இதனை அடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வாடகை கார் ஓட்டுநர் மோகன்ராஜ் என்பவரையும் அவரது நண்பர் மனோகரன் என்பவரையும் கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று கொண்டிருந்த போதே மோகன்ராஜ் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இதனை அறிந்த கோவை மக்கள் பட்டாசு வெடித்து தீபாவளி போல் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மனோகரன் மீதான வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் கோவை மாவட்ட நீதிமன்றம் மனோகரனுக்கு தூக்கு தண்டனை அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மனோகரன் மேல்முறையீடு செய்ய, சென்னை ஐகோர்ட்டும் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. மேலும் மனோகரன் தரப்பிலிருந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்கை விசாரணை செய்து சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை உறுதி செய்தனர்

கடைசி வாய்ப்பாக மனோகரன் தரப்பில் இருந்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று அந்த சீராய்வு மனு மீதான தீர்ப்பு வெளிவந்த போது அங்கேயும் தூக்கு தண்டனை உறுதியானது. இதற்கு அடுத்ததாக மனோகரனுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு ஜனாதிபதிக்கு கருணை மனு போடுவதுதான். ஆனால் ஜனாதிபதி கருணை மனுவிலும் மனோகரனுக்கு சலுகை கிடைக்காது என்றும், எனவே மனோகரன் தூக்கிலிடப்படுவது உறுதி என்றும் நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

இன்னும் இரண்டே நாள் தான் கெடு!ஜனாதிபதி ஆட்சி என பாஜக மிரட்டல்!

0

இன்னும் இரண்டே நாள் தான் கெடு!ஜனாதிபதி ஆட்சி என பாஜக மிரட்டல்!

மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்து அதன் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு மூன்று வாரங்கள் ஆகியும் இன்னும் அம்மாநிலத்தில் புதிய ஆட்சி அமையவில்லை. பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு எம்எல்ஏக்களை கைவசம் வைத்திருந்த போதிலும், இரு தரப்பிற்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக புதிய ஆட்சி இன்னும் அமையாமல் உள்ளது. முதல்வர் பதவியை சுழற்சி முறையில் தர வேண்டும் என சிவசேனா பிடிவாதம் பிடிப்பதும், அதற்கு பாஜக மறுத்து வருவதும் புதிய ஆட்சி அமையாததன் காரணமாக உள்ளது.

இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க சிவசேனா போட்ட திட்டம் பலிக்கவில்லை. எதிர்க்கட்சி வரிசையில் தான் எங்களை அமர மக்கள் வாக்களித்துள்ளார்கள் என்றும் சிவசேனா ஆட்சியமைக்க ஆதரவு இல்லை என்றும் சரத் பவார் வெளிப்படையாகக் கூறி விட்டதால் சிவசேனாவுக்கு தற்போது பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது

மேலும் மகாராஷ்டிர மாநிலத்தின் சட்டசபையில் காலம் இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளது. அதற்குள் புதிய ஆட்சி அமைக்கப்படாவிட்டால் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சிவசேனாவின் பிடிவாதத்தால் குடியரசுத் தலைவர் ஆட்சி ஏற்பட்டு மீண்டும் ஒரு தேர்தலை சந்திக்க வேண்டிய நிலை வரும் என அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்

குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டால் கிட்டத்தட்ட பாஜகவின் ஆட்சி போலவே இருக்கும் என்பதால் இன்னும் இரண்டு நாட்களில் ஒரு முடிவை எடுக்க சிவசேனா முன்வர வேண்டும் என்று அரசியல் கட்சி ஆலோசகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிவசேனாவின் முதலமைச்சர் பதவி பேராசையால் அக்கட்சி மட்டுமின்றி அனைத்துக் கட்சிகளுக்கும் அக்கட்சிகளும் மீண்டும் ஒரு தேர்தலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் சூழல் உருவாக வாய்ப்பு உள்ளது

’கைதி’ போன்ற படங்கள் தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியமானது: பிரபல தயாரிப்பாளர்

0

’கைதி’ போன்ற படங்கள் தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியமானது: பிரபல தயாரிப்பாளர்

தமிழ் சினிமாவுக்கு கைதி போன்ற திரைப்படங்கள் அதிக அளவில் வெளிவந்தால் தான் ஆரோக்கியமாக இருக்கும் என்று பிரபல தயாரிப்பாளர் கே ராஜன் அவர்கள் கூறியுள்ளார்

கடந்த தீபாவளியன்று வெளியான ’கைதி’ திரைப்படம் மிக அருமையாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும், பில்டப் காட்சிகள் இல்லாமல், நாயகிகள் குத்து டான்ஸ் இல்லாமல், பாடல்கள் இல்லாமல் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த படம் பொதுமக்களுக்கு மிகவும் விருப்பம் உள்ள படமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்

அதுமட்டுமின்றி இந்தப்படம் முறையாக, அளவான செலவில் தயாரிக்கப்பட்டதாகவும், அதே போல் நியாயமான விலைக்கு விற்கப்பட்டதாகவும் இதனால்தான் இந்தப் படம் மிகப் பெரிய லாபம் பெற்று தயாரிப்பாளர் உள்பட அனைத்து தரப்பினருக்கும் லாபம் பெற்று உள்ளார்கள் என்றும் தயாரிப்பாளர் கே ராஜன் அவர்கள் கூறினார்

முதலில் பிகில் படத்திற்கு அதிக தியேட்டர்களில் கிடைத்த போதிலும் ஐந்தாவது நாளே அந்த படம் பல தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்டு அதற்கு பதிலாக ‘கைதி’ திரைப்படம் திரையிட்டதில் இருந்தே மக்களின் உண்மையான ஆதரவு எந்தப் பக்கம் என்பது உறுதியாகி விட்டது என்றும் தமிழக மக்கள் ரசனைகளில் மிகச் சிறந்தவர்கள் என்றும் கோடி கோடியாய் கொட்டி ஒரு படம் எடுத்தாலும் திருப்தி இல்லை என்றால் அந்த படத்தை விலக்கி விடுவார்கள் என்றும் குறைவான பட்ஜெட்டில் எடுத்தாலும் நல்ல படம் என்றால் ஆதரவு தருவார்கள் என்றும் கே.ராஜன் மேலும் தெரிவித்தார்

ரூ.28 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட ‘கைதி’ திரைப்படம் இப்பொழுது வரை ரூ.42 கோடி வசூலாகி வருவதாகவும் இன்னும் ஒருவார வசூல் மற்றும் சாட்டிலைட் உரிமையில் கிடைக்கும் தொகை ஆகியவற்றை சேர்த்தால் இந்த படம் 100% லாபத்தை கொடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது