மட்டன் பிரியாணிக்கு ஆசைப்பட்டு.. பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு காவல்துறையினர் சலுகை.!!

0
91

மட்டன் பிரியாணிக்காக பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை வழியில் உறவினர்களோடு சந்திக்க அனுமதித்தற்காக 7 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பொள்ளாச்சியில் இளம் பெண்களை நிர்வாணமாக்கி அதனை வீடியோ எடுத்து கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பான வழக்கு தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் திருநாவுக்கரசு, வசந்தகுமார், மணிவண்ணன், சதீஷ், சபரிராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அருளானந்தம் உட்பட 4 பேர் கோவை மாவட்ட கோபிசெட்டிபாளையம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கை 6 மாதத்திற்குள் முடித்து வைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணை ரகசியமாக நடக்க வேண்டும் என்பதால் நீதிமன்றத்தில் பூட்டிய அறைக்குள் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, கடந்த புதன்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில், சேலத்திலிருந்து திருநாவுக்கரசு, வசந்தகுமார், மணிவண்ணன், சதீஷ், சபரிராஜன் ஆகிய ஐந்து பேரையும் ஆயுதப்படை சிறப்பு ஆய்வாளர் எஸ்.ஐ சுப்பிரமணியம், காவலர்கள் பிரபு, வேல் குமார், ராஜ்குமார், நடராஜன், கார்த்திக் உள்பட 7 போலீசார் வேனில் அழைத்து சென்றுள்ளனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு சேலம் திரும்பும்போது கோவை மாவட்டம் பீளமேடு அருகே நடுரோட்டில் வாகனத்தை நிறுத்தி குற்றவாளிகளை அவரது உறவினர்களுடன் பேச வைத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை வீடியோ எடுத்த சிலர் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதுதொடர்பாக சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல் கோடா விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

அவர்கள் விதிமுறைகளை மீறி கைதிகளை உறவினர்களிடம் பேச வைத்தது உறுதியானதையடுத்து சிறப்பு எஸ்.ஐ.சுப்பிரமணியம் உட்பட 7 காவலர்களும் புதன்கிழமை இரவு பணிநீக்கம் செய்யப்பட்டனர். இது குறித்து நடந்தது என்ன என்பது குறித்து ஏழு காவல்துறையினரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணையில் மட்டன் பிரியாணிக்கு ஆசைப்பட்டு வண்டியை நிறுத்தி கைதிகளை உறவினர்களுடன் பேச வைத்தது தெரியவந்தது. கோவை நீதிமன்றத்தில் வைத்து அவர்களுக்கு உணவு கொடுக்க வேண்டும் என கைதிகளின் உறவினர்கள் போலீசாரிடம் கேட்டுள்ளனர். நீண்ட நாட்களாக மட்டன் பிரியாணி சாப்பிட வில்லை நீங்களும் பசியாக இருப்பீவர்கள் அனைவருக்கும் வீட்டிலிருந்து தயாரித்த மட்டன் பிரியாணி கொண்டு வந்துள்ளோம் என போலீசாரிடம் உறவினர்கள் கேட்டுள்ளனர்.

நீதிமன்றத்தில் வைத்து எந்த ஒரு பொருளையும் வாங்க கூடாது என போலீஸார் கூறியுள்ளனர். அதன்பிறகு, பீளமேடு வரை வாகனத்தை பின்தொடர்ந்து உறவினர்கள் வந்துள்ளார்கள். அங்கு போலீஸாரின் வாகனத்தை நிறுத்தி மட்டன் பிரியாணி கொடுத்துள்ளனர். பின்னர் குற்றவாளிகளுடன் உறவினர்கள் பேசியுள்ள இந்த சந்திப்பு 7 நிமிடம் மட்டுமே நடந்துள்ளதாக கூறப்படுகிறது. பின்னர், பிரியாணி பொட்டலங்கள் வாங்கிக்கொண்டு அனைவரும் வேனில் வைத்து சாப்பிட்டு விட்டு சேலம் திரும்பியது தெரியவந்தது. இதுகுறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.