பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனங்களை ஓட்டினால் வழக்குப்பதிவு!

0
151
#image_title

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அபாயகரமாகவும், அதிவேகமாகவும் இருசக்கர வாகனங்களை ஓட்டிய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 25 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.

வாகனங்களை அதிக வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டுவது விபத்துகளுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். அதிவேகமாக வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்தும் வகையில், சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மேலும் சென்னை பெருநகரில் பைக் ரேஸ் என்ற பெயரில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாகவும், அபாயகரமாகவும வீலிங் என்ற பெயரில் ஆபத்தான முறையிலும் வாகனங்களை ஓட்டி சாகசத்தில் ஈடுபடாமல் தடுக்க காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

அந்தவகையில் போக்குவரத்து காவல் குழுவினர் அண்ணாசாலை,காமராஜர் சாலை மற்றும் ஆர்.கே.சாலை போன்ற முக்கியமான சாலைகள் உட்பட 43 இடங்களிலும், சட்டம் & ஒழுங்கு மற்றும் ஆயுதப்படைக் காவலர்கள் அடங்கிய காவல் குழுவினர் ஒருங்கிணைந்து சென்னை பெருநகரம் முழுவதும் 106 இடங்களில் வாகன சோதனை சாவடிகள் அமைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் இருசக்கர வாகனத்தை அபாயகரமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டிய குற்றத்திற்காக மோட்டார் வாகன சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்து மொத்தம் 25 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் மேற்படி இருசக்கர வாகனங்கள் மீது நிலுவையிலுள்ள வழக்குகளின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாகவும், அபாயகரமாகவும் ஆபத்தான முறையில் வாகனங்களை ஓட்டி சாகசத்தில் ஈடுபட வேண்டாம் எனவும், மீறி ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டும் நபர்கள் மீது சட்டபூர்வமாக வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

author avatar
Savitha