கோடநாடு வழக்கில் சிக்கபோகும் சசிகலா! சிபிசிஐடி மும்முரம்!

0
196
#image_title
கோடநாடு வழக்கில் சிக்கபோகும் சசிகலா! சிபிசிஐடி மும்முரம்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள கோத்தகிரி அருகே கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா மற்றும் எஸ்டேட் உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான சேலத்தை சேர்ந்த கனகராஜ் என்ற கார் ஓட்டுநர் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 28-ம்  தேதி சேலம் ஆத்தூர் அருகே விபத்தில் உயிரிழந்தார். மற்றொரு குற்றவாளியான சயான் தனது குடும்பத்தினருடன் காரில் சென்ற போது விபத்தில் சிக்கி அணைவரும் உயிரிழந்தனர்.
இதனை தொடர்ந்து அங்கு தொடர்ந்து பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடைபெற்றன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கடந்த 2021-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற பின் இந்த வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியது.
இதனிடையே ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படையினர் இந்த வழக்கை மீண்டும் முதலில் இருந்து விசாரிக்க தொடங்கினர். சம்பவம் நடந்த கொடநாடு எஸ்டேட்டிலும் ஆய்வு மேற்கொண்டு அங்குள்ளவர்களிடம் விசாரித்தனர். மேலும் இது தொடர்பாக கவுண்டம்பாளையம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி, கொடநாடு எஸ்டேட் மேலாளர் நட்ராஜ், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சயான், வாளையார் மனோஜ் என 300-க்கும் மேற்பட்டோரிடம் தனித்தனியாக சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டனர்.
இந்தநிலையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சில மாதங்களுக்கு முன்பு திடீரென சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி ஏடி எஸ்பி முருகவேல் தலைமையிலான சிறப்பு பிரிவினர் கொடநாடு வழக்கை தற்போது தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவிடம் இரண்டு நாட்கள் விசாரணை நடைபெற்றது. இதனையடுத்து மீண்டும் அவரிடம் விசாரிக்க சிபிசிஐடி போலிசார் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக அவருக்கு அடுத்த மாதம் தொடக்கத்தில் சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் கொடநாடு பங்களாவில் என்னென்ன பொருட்கள் இருந்தது என்பது சசிகலாவுக்கு மட்டுமே தெரியும். அதனால் அங்கு மாயமான பொருட்கள் என்ன. கொள்ளை சம்பவம் குறித்து ஏதாவது தெரியுமா என்பது குறித்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கனகராஜ், முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியிடம் டிரைவாக வேலை பார்த்து வந்துள்ளார். அந்த வகையில் ஆறுக்குட்டியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான கனகராஜ் தற்போது உயிரோடு இல்லை என்பதால், வழக்கின் விசாரணை தாமதபடுவதாக சிபிசிஐடி தரப்பில் கூறப்படுகிறது. மேலும் கனகராஜ் இறப்பதற்கு முன் சேலம் எடப்பாடியில் உள்ள ஜோதிடர் ஒருவரை சந்தித்து பேசியதாகவும், இது குறித்து அவருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது, அவரது பாதுகாவல் அதிகாரியாக இருந்த டிஎஸ்பி கனகராஜ் என்பவரிடம் கடந்த 20-ம் தேதி சிபிசிஐடி போலிசார் விசாரணை நடத்தியது குறிப்பிடதக்கது. மேலும் நடந்து முடிந்த சட்டமன்ற கூட்ட தொடரில் முதல்வர் ஸ்டாலினும் கோடநாடு வழக்கில் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருவதால் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.