தென் மாவட்டங்கள் அதிமுகவின் கோட்டை என்பதில் ஐயமில்லை! நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகிறாரா எடப்பாடி பழனிச்சாமி?

0
123

அதிமுகவின் தேர்தல் வெற்றியை நிர்ணயம் செய்யும் தென் மாவட்டங்களில் நிர்ணயிக்கப்பட்ட ஓட்டுகள் பன்னீர்செல்வத்தின் நீக்கத்திற்கு பிறகு கேள்விக்குறியாகியுள்ளது என்று சொல்லப்படுகிறது.

ஆகவே அந்த வாக்குகளை தக்க வைக்கும் முயற்சியாக தான் கடந்த செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி அரசியல் மையமான மதுரையில் மிகப் பிரமாண்டமான பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள். அதிமுக என்ற கட்சியை எம்ஜிஆர் ஆரம்பித்த நாள் முதலில் தென் மாவட்ட மக்கள் தொடர்ந்து அவருக்கு ஆதரவு வழங்கியிருந்தனர்.

இதன் காரணமாகவே தான் தென் மாவட்டங்கள் அதிமுகவின் கோட்டை என்று சொல்லப்படுகிறது. ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கும்போதும் அவரை தென் மாவட்டங்கள் ஏமாற்றவில்லை. மதுரை, ராமநாதபுரம், தேனி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் இருக்கின்ற முக்குலத்தோர் அதிமுகவிற்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வந்தனர்.

ஆகவே தான் அந்த சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கு ஜெயலலிதா முக்கியத்துவம் வழங்கினார். பன்னீர்செல்வத்தை தனக்கு பதிலாக முதல்வராக நியமனம் செய்தார். முக்குலத்தோரை தவிர்த்து யாதவர், நாடார், தேவேந்திர குல வேளாளர் போன்ற சமூகத்தினரும் அதிமுகவிற்கு அரசியல் சூழல் மாற்றத்திற்கு ஏற்றவாறு அவ்வப்போது ஆதரவை வழங்கி வந்தார்கள்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் சசிகலாவின் குடும்ப ஆதிக்கத்தை எதிர்த்து முதல்வரான பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்க, கவுண்டர் சமுதாயத்தைச் சார்ந்த எடப்பாடி பழனிச்சாமியை சசிகலா, தினகரன் உள்ளிட்டோர் முதல்வராக நியமனம் செய்தனர்.

அதன்பிறகு தன்னுடைய அரசியல் சாணக்கிய புத்தியால் சசிகலா, தினகரன் உள்ளிட்டோரை கட்சியிலிருந்து நீக்கிவிட்டு பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிச்சாமி தன்னுடன் இணைத்துக் கொண்டார். மேலும் முதல் முறையாக அதிமுகவில் 2 தலைமை ஏற்பட்டது.

ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக இருவரும் தங்களுக்கு இடையிலான மனக்கசப்பையும், அதிருப்தியையும் வெளி காட்டிக் கொள்ளாமல் சமாளித்து வந்தனர். ஆனால் அந்த அதிருப்தி சட்டசபை தேர்தலிலும், உள்ளாட்சி தேர்தலிலும் எதிரொலித்தது. ஆட்சி அதிகாரம் கை மாறியது. உள்ளாட்சித் தேர்தலில் குறைந்த அளவே இடங்களைப் பெற முடிந்தது.

அதிமுக வலுவாக இருக்க ஒற்றை தலைமை தான் தேவை என்று எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் ஆரம்பிக்க அதன்பிறகு பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு நிர்வாகிகளின் ஆதரவுடன் கட்சியை எடப்பாடி பழனிச்சாமி முழுமையாக கைப்பற்றினார். ஆனாலும் நாங்கள் தான் உண்மையான அதிமுக என்று பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் கூறிக் கொண்டுள்ளனர்.

இதற்கு நடுவில் எதிர்வரும் லோக்சபா தேர்தலிலும் அடுத்து வரும் சட்டசபை தேர்தலிலும் கட்சிக்கு வெற்றியை பெற்று தர வேண்டிய நிர்ப்பந்தம் தற்போதைய அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உண்டாகியுள்ளது. ஒற்றை தலைமை இருப்பதால்தான் இந்த வெற்றி சாத்தியமானது என்று மாறு தட்டிக் கொள்ளும் விதத்தில் இப்போதே அதற்கான முயற்சிகளை எடப்பாடி பழனிச்சாமி மேற்கொண்டுள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தமிழக அளவில் மாநகராட்சி பகுதிகளில் 11.94 சாதவீதம், நகராட்சி பகுதிகளில் 16.60 சதவீதம், பேரூராட்சிகளில் 15.82 சதவீதம் வாக்குகளை அதிமுக பெற்றது. 2011 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 38.4%, 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 44.3% , 2016 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 40.8% , 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 33.29% வாக்குகளை பெற்றது.

2016 ஆம் ஆண்டு முதல் அதிமுக வாக்குகள் குறிப்பாக தென் மாவட்டங்களில் சரிய தொடங்கினர்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதிமுக வாக்குகளை தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பிரித்தது. வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு அறிவித்தது, பாஜகவுடன் கூட்டணி, உள்ளிட்டவை தென் மாவட்டங்களில் அதிமுகவின் வாக்குகளை சரிய வைத்தது.

அதிமுகவின் தென் மாவட்டத்தின் பிரதிநிதியாக காணப்பட்டவர் பன்னீர்செல்வம், அவருடைய பிம்பத்தை உடைக்கும் முயற்சியாகவும், அதிமுக வாக்கு வங்கியை தக்க வைக்கவும் எடப்பாடி பழனிச்சாமி முயற்சி செய்துள்ளார். தேவர் ஜெயந்தி என்று பசும்பொன் கிராமத்திற்கு சென்று முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்த காத்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

இனிவரும் காலங்களில் அடிக்கடி தென் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனக்கான ஆதரவைத் திரட்ட அவர திட்டமிட்டுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

கட்சி நிர்வாகிகள் இது தொடர்பாக தெரிவித்ததாவது, தற்போதைய சூழ்நிலையை வைத்து அதிமுகவின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க இயலாது.

லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கின்றன. அதற்கு முன்பாக எவ்வளவோ மாற்றங்கள் நிகழலாம். எங்களை பொறுத்தவரையில் தென்மாவட்டங்கள் எப்போதும் அதிமுகவின் கோட்டைதான்.

அதனை பாதுகாக்கும் விதத்தில் தேர்தல் சமயத்தில் கூட்டணி அமைத்து 2014 ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையில் 39 தொகுதிகளையும் கைப்பற்றியது அதிமுக.

அதேபோல எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் கைப்பற்றுவோம் திமுக ஆட்சி மீது மக்கள் வெறுப்பில் இருக்கிறார்கள் அது எங்களுக்கு சாதகமாக அமையும். அதிமுக இழந்த வாக்குகளை பழனிச்சாமி நிச்சயமாக அறுவடை செய்து காட்டுவார். அதற்கான வேலைகளை அவர் தலைமையில் தற்போதைய செய்ய தொடங்கி விட்டோம் என்று தெரிவித்தார்கள்.