கோரஸ் பாடகியாக அறிமுகமாகி பிரபல பாடகியாக மாறிய எல்.ஆர்.ஈஸ்வரி!!

0
2294
#image_title

கோரஸ் பாடகியாக அறிமுகமாகி பிரபல பாடகியாக மாறிய எல்.ஆர்.ஈஸ்வரி!!

அம்மன் பக்தி பாடல்கள் கேட்ட ஒவ்வொருவருக்கும் எல்.ஆர்.ஈஸ்வரி குரலை பற்றி நன்றாகவே தெரிந்திருக்கும். இவர் பாடிய வாராயோ தோழி வாராயோ பாடல் ஒலிக்காத திருமண வீடே இல்லை என்ற அளவுக்கு அவரது குரலும் அந்த பாடலும் பிரபலமடைந்திருக்கும். சினிமா பாடல்கள் மற்றும் பக்தி பாடல்கள் என கலக்கிய இவர் ஆரம்ப காலத்தில் கோரஸ் பாடகியாக தான் திரை வாழ்க்கையை ஆரம்பித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

எல். ஆர். ஈஸ்வரி:
எல். ஆர். ஈஸ்வரி (பிறப்பு: திசம்பர் 7, 1939) வயது-73-

தமிழ் திரையுலகில் மறக்கமுடியாத பெருமைக்குரிய பின்னணிப் பாடகியாவார். 1958 ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் பாடி வரும் இவர் ஆயிரக்கணக்கான பாடல்களை பல்வேறு மொழிகளில் பாடியுள்ளார்.

வாழ்க்கைச் சுருக்கம்:

இராமநாதபுரம் பரமக்குடிக்கு அருகேயுள்ள இளையான்குடி ஊரிலிருந்து பிழைப்பை தேடி சென்னைக்கு வந்த தேவராஜ், ரெஜினா மேரி நிர்மலா தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார் எல்.ஆர்.ஈஸ்வரி. இவரது தாத்தா பாடகர் என்பதால் இவரும் சிறு வயதிலேயே பாட்டு மற்றும் நடனம் கற்றுக் கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் படிக்கும் போதே பள்ளிகளில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் இவர் பாடியுள்ளார்.

எல்.ஆர்.ஈஸ்வரியின் இயற்பெயர் “லூர்து மேரி ராஜேஸ்வரி”. இவர் சென்னை எழும்பூரில் உள்ள மாநிலப் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். இவரின் இளம் வயதிலேயே ( 6 வயது ) தந்தை (36) இறந்து விட்டார். அமல்ராஜ் என்ற தம்பியும், எல். ஆர். அஞ்சலி என்ற தங்கையும் இவருக்கு உள்ளனர். இந்நிலையில் இளம் வயதிலேயே இவரும் அவர் தயாரும் சேர்ந்து குடும்பத்தை கவனிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டனர்.இவரது தாயார் எம். ஆர். நிர்மலா ஜெமினி ஸ்டூடியோவில் குழுப் பாடகியாக இருந்தவர்.

இந்நிலையில் 1954 ஆம் ஆண்டு
மனோகரா படத்திற்காக எஸ். வி. வெங்கட்ராமன் இசையமைப்பில் “இன்ப நாளிலே இதயம் பாடுதே” என்ற பாடலை ஜிக்கி குழுவினர் பாடினர். அப்பாடலில் இவரது தாய் நிர்மலாவுடன் இணைந்து ஈஸ்வரியும் குழுவினருடன் சேர்ந்து கோரஸ் பாடினார். அன்று முதல் இவரும் குழுப் பாடகியானார்.

அதனையடுத்து கிடைக்கும் வாய்ப்புகளில் இருவரும் கோரஸ் பாடல் பாடியதால் ஓரளவுக்கு வருமானம் கிடைத்தது. இதனால் குடும்ப வறுமையும் ஓரளவுக்கு நீங்கியது. இந்நிலையில் தான் “வடிவுக்கு வளைகாப்பு” என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலை பாடுவதற்காக தாயாருடன் சென்றுள்ளார். அப்போது அந்த பாடலில் ஹம்மிங் கொடுக்க வேண்டிய பாடகி அன்று வராததால் அந்த வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது. அந்த வகையில் எல்.ஆர்.ஈஸ்வரியை அந்த பாடலில் ஹம்மிங் கொடுக்க வைத்தனர். இதுவே முதல் முறையாக எல்.ஆர்.ஈஸ்வரி ஹம்மிங் பாடிய பாடலாகும்.

கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட அவரை அந்த படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான ஏபி நாகராஜன் பாராட்டியுள்ளார்.மேலும் இவரது குரலை பாராட்டியதோடு அல்லாமல் அதிக வாய்ப்புகள் தருகிறேன் என்றுமம் உறுதியளித்துள்ளார். மேலும் இசையமைப்பாளர் கேவி மகாதேவனிடமும் இவரை அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும் இவருக்கு எதிர்காலத்தில் பெரிய பாடகியாக வருவாய் என்று வாழ்த்தும் தெரிவித்தார்.

இதனையடுத்து 1958 ஆம் ஆண்டு “நல்ல இடத்துச் சம்பந்தம்” திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலுக்காக தனியாக பாடும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. இந்த படத்தில் கே. வி. மகாதேவனின் இசையமைப்பில் “இவரே தான் அவரே அவரே தான் இவரே” என்ற பாடலை தனியாக இவர் பாடினார். இதுவே இவரது முதல் பாடலாகும். இப்படத்தில் எல்.ஆர்.ஈஸ்வரி மட்டுமே நான்கு பாடல்களைப் பாடியுள்ளார்.

இதனையடுத்து 1959 இல் வெளிவந்த “நாலு வேலி நிலம்” படத்துக்காக திருச்சி லோகநாதனுடன் இணைந்து “ஊரார் உறங்கையிலே உற்றாரும் தூங்கையிலே” என்ற பாடலையும் பாடினார். இந்த பாடலுக்கும் கே.வி.மகாதேவனே இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் 1961 ஆம் ஆண்டில் வெளிவந்த பாசமலர் திரைப்படத்தில் இவர் பாடிய “வாராயோ என் தோழி வாராயோ” என்ற பாடல் தான் இவருக்கு மிகவும் புகழைத் தேடித்தந்தது. இது இன்றும் ஒவ்வொருவர் வீட்டிலும் நடக்கும் திருமண விழாக்களில் ஒலிக்கும் பாடலாகும்.

இத்துடன் “எலந்தப் பழம் எலந்தப்பழம், முத்துக்குளிக்க வாரியளா , அம்மனோ சாமியோ, வந்தால் என்னோடு இங்கே வா, நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன், வருஷத்தைப் பாரு அறுபத்தி ஆறு, சிங்கப்பூரு மச்சான் சிரிக்கச் சிரிக்க வச்சான், இவ்வளவு தான் உலகம் இவ்வளவு தான்” போன்ற பாடல்கள் இவருக்குப் பெரும் புகழைத் தேடித்தந்த மற்ற பாடல்கள்.

பக்திப் பாடல்கள்:
பிற்காலத்தில் இவர் சினிமாவில் துள்ளிசைப் பாடல்களையே நிறையப் பாடினார். இந்நிலையில் எண்பதுகளின் பிற்பகுதியில் ஈஸ்வரிக்கு திரைப்பட பாடல்கள் பாடும் வாய்ப்புக் குறைந்தது. எனினும் இளையராஜாவைத் தவிர பெரும்பாலான இசையமைப்பாளர்களின் இசையமைப்பில் 1990-கள் வரை இவர் தொடர்ந்து பாடி வந்தார். அதன் பின் சில இசையமைப்பாளர்களின் கைங்கரியத்தால் படிப்படியாக திரைப்படங்களில் பாடும் வாய்ப்பு இவருக்கு குறைந்தது.திரைப்படங்களில் பாடும் வாய்ப்பு குறைந்தாலும் பக்திப் பாடல்களை திரைப்படங்களிலும், வெளியில் ஆல்பங்களுக்காகவும் அதிகம் பாடி வருகிறார்.இப்போதும் ஏ.ஆர்.ரகுமான் போன்ற பிரபல இசையமைப்பாளர்களின் இசையில் இவர் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் ஏராளமான தெலுங்கு, கன்னடம், மலையாள திரைப்படங்களிலும் இவர் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Savitha