ராமசாமி படையாச்சியார் நினைவு மண்டப திறப்பு விழா: பாமக புறக்கணிப்பு! காரியத்தை சாதித்து கொண்ட எடப்பாடி பழனிசாமி செய்த துரோகம்
கடலூரில் இன்று நடைபெறவுள்ள ராமசாமி படையாச்சியார் நினைவு மண்டப திறப்பு விழாவில் கூட்டணி கட்சியான பாமக புறக்கணிக்கப்பட்டது அக்கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இன்று விழா நடைபெறவுள்ள நிலையில், இந்த விழாவிற்கான அழைப்பிதழ் கடைசி கட்டத்தில் வேண்டா வெறுப்பாக நேற்று தான் பாமகவிற்கு வழங்கப்பட்டுள்ளது.இதுவே இந்த சர்ச்சைக்கு ஆரம்பமாக இருந்தாலும் மேலும் சில காரணங்களும் பாமகவை அதிமுக புறக்கணிப்பது உறுதி என்பதை தெளிவாக காட்டுகிறது.
மேலும், வன்னியர் சமுதாய தலைவரான ராமசாமி படையாச்சி யார் நினைவு மண்டப திறப்பு விழா அழைப்பிதழில் அந்த சமுதாயத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவரும், அதிமுக கூட்டணி கட்சியான பாமகவின் மாநிலங்களவை உறுப்பினராக உள்ள அன்புமணி ராமதாஸ் பெயர் தவிர்க்கப்பட்டு, அந்த சமுதாயத்திற்கு எதிராக குரல் கொடுத்து வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. திருமாவளவன் பெயர் அச்சிடப்பட்டுள்ளது தான் பாமக தொண்டர்களை சூடேற்றியது.
இதற்கு முன் ராமசாமி படையாச்சியார் படம் திறக்கப்பட்ட போது, பாமகவிற்கு அரசுத் தரப்பில் அளிக்கப்பட்ட முக்கியத்துவம் கூட தற்போது நடைபெறும் நினைவு மண்டப திறப்பு விழாவில் கொடுக்கப்படவில்லை என்பது தான் இங்கே குறிப்பிடத்தக்கது.
வன்னிய சமுதாயத் தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான ராமசாமி படையாச்சியாரின் நினைவு மண்டப திறப்பு விழா இன்று கடலூரில் நடைபெறுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அந்த மண்டபத்தை திறந்து வைக்கவுள்ளார். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கடலூர் மாவட்ட நிர்வாகமும், அமைச்சர் எம்.சி.சம்பத்தும் செய்து வருகிறார்கள்.
இன்று நடைபெறவுள்ள படையாச்சியார் நினைவு மண்டப திறப்பு விழா நிகழ்ச்சி அரசு விழா என்பதால் அதற்கான அழைப்பிதழில் கடலூர் திமுக எம்.பி. ரமேஷ் மற்றும் திமுக எம்.எல்.ஏ.க்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பெயர் போடப்பட்டுள்ளது. மேலும், சிதம்பரம் தொகுதி எம்.பி.யான திருமாவளவன் பெயரும் அழைப்பிதழில் இடம்பெற்றிருப்பது தான் பலருக்கு ஆச்சரியத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமகவின் மாநிலங்களவை உறுப்பினராக உள்ள அன்புமணி ராமதாஸ் பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது இரு கட்சிகளுக்கு இடையேயான உரசலை தெளிவாக உணர்த்துகிறது.
மேலும், ராமசாமி படையாச்சியார் நினைவு மண்டப திறப்பு விழா இன்று நடைபெறவுள்ள நிலையில் விழாவுக்கான அழைப்பிதழ் நேற்று தான் பாமகவிற்கு தரப்பட்டுள்ளது. விழா இன்று நடைபெறவுள்ள நிலையில் அதற்கு ஒரு நாள் முன்பாக நேற்று கடமைக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டதை பாமக தலைமை ரசிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் இன்று நடைபெறவுள்ள விழாவில் கட்சியின் சார்பில் பாமக தலைவர் கோ.க.மணி மட்டும் பங்கேற்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடந்து முடிந்த மக்களவை மற்றும் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் பாமகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அதிமுக மக்களவை தேர்தலில் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெற முடியவில்லை என்றாலும் தமிழக அளவில் அதிமுக ஆட்சிக்கு தேவையான உறுப்பினர்களை அப்போது நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் பெற்ற வெற்றியின் மூலம் பெற்றது. இதற்கு வட தமிழகத்தில் பலமாக உள்ள பாமகவின் வாக்கு வங்கி தான் மிக முக்கியமான காரணம் என்று அதிமுக தரப்பே ஏற்று கொண்டது.
அதன் பிறகு சமீபத்தில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக vs திமுக என்பதை விட பாமக vs திமுக என்ற அளவிற்கு அதிமுகவிற்கு ஆதரவாகவும்,திமுகவிற்கு எதிராகவும் பாமக செயல்பட்டது. இந்நிலையில் போதுமான அளவிற்கு பாமக வாக்கு வங்கியை பயன்படுத்தி கொண்ட எடப்பாடி பழனிசாமி தற்போது பாமகவை கழட்டி விட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.இதை உறுதி செய்யும் வகையில் தான் இந்த புறக்கணிப்பு ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.