சீனாவின் ஊஹான் மாகாணத்தில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 130000க்கும் மேற்பட்டவர்கள் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 2 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது.
இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிர விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நோய் பரவாமல் தடுக்க முகத்தில் மாஸ்க் அணிய வேண்டும் அடிக்கடி சாணிடைஸர்கள் கொண்டு கழுவ வேண்டும் என்று அறிவுறுத்துவருகிறது.
இந்த நிலையில் ஹரியானா மாநிலம் குர்கானில் ஒரு தனியார் நிறுவனம் போலி சாணிடைஸர்களை தயாரித்தது தெரிய வந்துள்ளது. அதில் சாணிடைஸர்கள் நிறத்தில் உள்ள ஒரு திரவத்தை வழக்கமான பாட்டில்களில் அடைத்து வந்துள்ளனர்.
அதிரடியாக சோதனை செய்த சுகாதாரத்துறை அந்த நிறுவனத்தை சீல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த தகவல் பொது மக்களை நீதிக்கு உள்ளாக்கியது என்று அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பல சர்ச்சைகளுக்கு நடுவே மத்திய பாஜக அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்தது. இதை காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சியினர் நாடு முழுவதும் கடுமையாக எதிர்த்து வந்தனர்.
தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பு போராட்டங்களை பல்வேறு அமைப்புகள் செய்து வந்தன. திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் தங்கள் எதிர்ப்பைத் நூதனமான முறையில் வெளிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு முஸ்லிம் அமைப்புத் தலைவர்களுக்கு அழைப்பு ஒன்றை விடுத்துள்ளது. அதில் சிஏஏ குறித்த குழப்பங்களை களையவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக தமிழக தலைமை செயலாளர் சண்முகம் கூறியுள்ளார்.
இஸ்லாமிய அமைப்புகளை தங்கள் கூட்டணியில் வைத்துக் கொண்ட திமுக சிஏஏ-க்கு எதிராக தங்கள் போராட்டங்களை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. இதனை புரிந்து கொண்ட மாநில அரசு சண்டைக்காரர்களான இஸ்லாமிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதால் இனி திமுக இதில் அரசியல் செய்ய முடியாது என்று அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நள்ளிரவில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து; அப்பளம் போல் நொறுங்கிய கார்! தப்பி ஓடிய ஓட்டுனர்
நாமக்கல் பகுதியில் இருந்து திருச்சி நோக்கி வந்த லாரியுடன் கார் ஒன்று நேருக்கு நேர் மோதிய சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
நேற்று நள்ளிரவு நாமக்கல்லில் செங்கல் லோடு ஏற்றிக் கொண்டு திருச்சியை நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. திருச்சி சாலையில் சின்னவேப்பநத்தம் அருகே சென்றபோது, திருச்சியில் இருந்து நாமக்கல் பகுதிக்கு நள்ளிரவில் டாடா சுமோ கார் ஒன்று லாரியுடன் பயங்கர சத்தத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் காரில் பயணித்த ஓட்டுனர் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர்.
விபத்து பற்றி அறிந்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் விபத்தில் பலியாகி வாகனத்தில் சிக்கியிருந்த 6 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து நிரூபர்களிடம் போலீசார் கூறியதாவது; காரில் பயணம் செய்த இரண்டு பேர் நாமக்கல் அருகில் இருக்கும் வேட்டாம்பாடி பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், மற்ற நால்வரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் என்றும் கூறப்பட்டது. இவர்கள் திருச்சியில் உள்ள காட்டுப்புத்தூரில் டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த விபத்தில் சம்பந்தமான லாரி ஓட்டுனர் தப்பி ஓடியுள்ளார். விபத்து அதிவேகத்தினால் நடந்ததா அல்லது மதுபோதையில் வாகனம் இயக்கப்பட்டதா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கொரோனா வைரஸால் 2-வது இந்தியர் பலி! பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82 ஆக உயர்வு..! பள்ளிகளுக்கு விடுமுறை!!
கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி வரும் சூழலில், இந்தியாவில் அதனால் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவர் இறந்துள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த 68 வயது மூதாட்டி ஒருவர் ஆர்.எம்.எல் என்ற மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது மகன் மூலம் கொரோனா வைரஸ் மூதாட்டிக்கு பரவியிருந்த நிலையில் திடீரென நேற்று இரவு உயிரிழந்தார். இது இந்தியாவில் இரண்டாவது உயிரிழப்பாகும்.
இந்த வைரஸ் பாதிப்பின் காரணமாக தமிழகத்தில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு தமிழக அரசு விடுமுறை அளித்துள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் கேரளா போன்ற பகுதிகளில் கரோனா பாதிப்பு அறிகுறி அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் அந்தந்த மாநிலங்களில் இதுகுறித்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
கர்நாடகா மாநிலத்தில் தியேட்டர்கள், வணிக வளாகங்கள், இரவு விடுதிகள், திருமணங்கள், பிறந்த நாள் கொண்டாட்டங்கள் மற்றும் மக்கள் அதிகமாக எந்த நிகழ்ச்சிகளும் நடத்த வேண்டாம் என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுபோன்று மும்பை பகுதிகளிலும் உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், தியேட்டர்கள் மற்றும் பல்வேறு இடங்கள் கரோனா பாதிப்பினால் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது.
உத்திரபிரதேசம், சத்தீஸ்கர், கோவா, கர்நாடகா, டெல்லி, கேரளா உத்தரகாண்ட், பீகார், மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்களில் பள்ளிக் கூடங்கள் வருகின்ற 31 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. முகமூடி, கையை சுத்தப்படுத்தும் திரவ பொருட்களை அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் மத்திய அரசு கரோனா பாதிப்பின் காரணமாக இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகிலுள்ள அரசு போக்குவரத்து கழகத்திற்கு எதிரில் உள்ள மத்திய அரசின் தானிய கிடங்கில் இன்று மாலை சுமார் 4 மணியளவில் தீப்பற்றியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறையினரும் காவல் துறையினரும் விரைந்தனர். 2 தீயணைப்பு வண்டிகளில் வந்த வீரர்கள் தீவிர போராட்டத்திற்கு பின்பு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
தகுந்த நேரத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் கட்டுக்குள் கொண்டு வந்ததுடன் பெரிய அளவிலான சேதம் தவிர்க்கப்பட்டது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சேத மதிப்பீடு எவ்வளவு என்று கணக்கிட்டு வருகின்றனர்.
தீயணைப்பு துறையின் விரைந்த நடவடிக்கையை உள்ளூர் மக்கள் பாராட்டி வருகின்றனர்.
மின் கணக்கீட்டாளர் பணிக்கு பொறியியல் பட்டதாரிகளையும் விண்ணப்பிக்க அனுமதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது;
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின்கட்டண கணக்கீட்டாளர் பணிக்கு 1300 பேரை தேர்ந்தெடுக்க ஆள் தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில் கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் பட்டதாரிகள் மட்டுமே இப்பணிக்கு தகுதியானவர்கள் என்றும், பிற பட்டதாரிகள் கணக்கீட்டாளர் பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.
மின் கணக்கீட்டாளர்கள், இளநிலை உதவியாளர்கள், உதவி பொறியாளர்கள் உள்ளிட்ட பணிகளுக்கு கடந்த ஜனவரி மாதம் 8-ஆம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டது. மின் கணக்கீட்டாளர்கள் பணிக்கான தகுதி கலை, அறிவியல் அல்லது வணிகவியல் பாடத்தில் பட்டம் பெற்றிருப்பது தான் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இதனால் பிற பாடங்களில் குறிப்பாக பொறியியல், வேளாண் அறிவியல், கால்நடை அறிவியல் உள்ளிட்ட தொழில்படிப்புகளை படித்தவர்களால் இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் அவர்களின் வேலை பெறும் உரிமை பறிக்கப்பட்டுள்ளது.
மின் கட்டண கணக்கீட்டாளர் பணி தொழில்நுட்பம் சாராத பணி; அதனால் சாதாரண பட்டப்படிப்பே அந்த பணிக்கு போதுமானது என்பது மிகவும் நியாயமான வாதம் தான். ஆனால், தமிழ்நாட்டில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பொறியியல் பட்டம் பெற்றவர்களுக்கு போதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படாத நிலையில், அவர்களையும் மின் கட்டண கணக்கீட்டாளர் பணிக்கான போட்டித் தேர்வுகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. நிகழ்கால எதார்த்தங்களின் அடிப்படையில் பார்த்தால் பொறியியல் பட்டதாரிகளின் கோரிக்கை நியாயமானதாகும்.
மின்சார வாரியத்தில் பொறியியல் படிப்பைக் கல்வித் தகுதியாகக் கொண்ட உதவிப் பொறியாளர்கள் பணிக்கும் ஆள்தேர்வு அறிவிக்கப்பட்டிருப்பதால், அப்பணிக்கு பொறியியல் பட்டதாரிகள் போட்டியிடலாம் என்ற வாதம் முன்வைக்கப்படக் கூடும். ஆனால், மின்னியல், எந்திரவியல், சிவில் ஆகிய பிரிவுகளுக்கு மட்டுமே உதவிப் பொறியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். அப்பணிகளுக்கு குறிப்பிட்ட பாடப்பிரிவு மற்றும் அவற்றைச் சார்ந்த பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் மட்டும் தான் விண்ணப்பிக்க முடியும். பிற பிரிவுகளில் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் உதவி பொறியாளர் பணிக்கு விண்ணப்பிக்க இயலாது.
அதற்கெல்லாம் மேலாக, இன்றைய சூழலில் அரசு வேலைவாய்ப்பு என்பது அரிதாகி விட்டது. அரசுத் துறைகளில் மிகக் குறைந்த ஊதியம் தரும் பணிகள் என்றால் கூட, அப்பணிகளைக் கைப்பற்ற கடுமையான போட்டி நிலவுகிறது. அண்மையில் கூட, சென்னை மாநகராட்சியின் வாகன நிறுத்தங்களை கையாளும் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டன. இந்த பணிக்கு கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி தான் என்ற போதிலும், மொத்தமாக விண்ணப்பித்த 1400 பேரில் 70%க்கும் மேற்பட்டவர்கள் பட்டதாரிகள் ஆவர்; 50 விழுக்காட்டுக்கும் கூடுதலானவர்கள் பொறியியல் பட்டதாரிகள் ஆவர்; அவர்களிலும் பலர் முதுநிலை பொறியியல் பட்டதாரிகள் ஆவர். அதேபோல், கோவை மாநகராட்சி துப்புரவு பணியாளர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பான்மையினர் பட்ட மேற்படிப்பு, பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வி கற்றவர்கள் ஆவர். இது தான் இன்றைய கள எதார்த்தம் ஆகும்.
படித்த இளைஞர்கள் அனைவருக்கும் அவரவர் தகுதிக்கேற்ற வேலை வழங்கப்பட வேண்டும் என்பது தான் நியதி. இது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கையும் ஆகும். ஆனால், வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்து ஆடும் நிலையில் இருக்கும் வேலைவாய்ப்புகளை பகிர்ந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. கணக்கீட்டாளர் பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு இம்மாதம் 23-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பொறியியல் மற்றும் பிற பட்டங்களை பெற்றவர்களும் மின்சார கணக்கீட்டாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று மின்சார வாரியம் அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
திமுக பொருளாளரும் எதிர்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகன் அவர்கள் இன்றைக்கு தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்களில் மிகுந்த அனுபவம் உடையவராக அறியப்படுகிறார். எப்போதும் அவருடைய பேச்சில் நக்கல் நையாண்டிக்கு குறைவில்லாமல் இருக்கும்.
அந்த வகையிலே நேற்றைய தினம் சட்டப்பேரவையில் அவருடைய பேச்சு மிகுந்த சிரிப்பலையை ஏற்படுத்தியது. நேற்றைய தினம் வனத்துறை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது துறைமுருகன் அவர்கள் எழுந்து தமிழகத்தில் வன விலங்குகளின் அச்சுருத்தல் மிகவும் அதிகமாக உள்ளது.
சமீப காலங்களில் காட்டை ஒட்டியும், மலையோரங்களிலும் வாழும் மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை. எப்போது எந்த விலங்கு வந்து தாக்குமோ என்ற அச்சத்திலே வாழ வேண்டிய சூழல் உள்ளது இதற்க்காக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது மிகவும் வேதனைக்குரிய செயல் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய எதிர்கட்சி துணைத்தலைவர் அவர்கள் நான் கூட காட்பாடியில் என்னுடைய தோட்டத்தில் மிகவும் ஆசையாக எலுமிச்சை செடியை வளர்த்து வந்தேன் அதைக்கூட யானை மிதித்து நாசம் செய்து விட்டது. முருங்கை மரத்தை உடைத்து போட்டு விட்டது. இதே நிலை நீடித்தால் நாங்கள் எப்படி மரங்களை வளர்ப்பது என்று கேள்வி எழுப்பிவிட்டு அமர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனுவாசன் அவர்கள் மான்புமிகு எதிர்கட்சி துணைத் தலைவரைப் போலவே அவருடைய தோட்டமும் மிகுந்த வளமாக காணப்படுவதால் யானைகளுக்கு மிகவும் பிடித்துவிட்டது போல அதனால் தான் மீண்டும் மீண்டும் அவருடைய தோட்டத்தையே யானைகள் தாக்குகின்றன என்றவுடன் அவையில் மிகுந்த சிரிப்பலை ஏற்பட்டது.
நேற்றைக்கு முன்தினம் கொரோனோ வைரஸ் குறித்து திரு.துரைமுருகன் அவர்கள் பேசிய பேச்சும் பேரவையில் அனைவராலும் கவனிக்கத்தக்கதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தாலுக்கா அலுவலகம் அருகே ஆர்.எம்.எஸ் கணினி மையம் இருந்து வந்தது. அந்த கடையின் சுவற்றில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் தயார் செய்து தரப்படும் என்று விளம்பரம் செய்து ஒட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்ததால் அங்கு சோதனை செய்ய உத்தரவிடப்பட்டது. இதனடிப்படையில் காட்டுமன்னார்கோயில் தாசில்தார் தமிழ்ச்செல்வன் தலைமையில் வட்ட வழங்கல் அதிகாரி சாருலதா மற்றும் அதிகாரிகள் சோதனையிட்டனர்.
நேரடியாக சென்று சோதனை செய்யப்பட்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. அந்த கடையில் ஆறு பெண்கள் பணியில் அமர்த்தப்பட்டு வாடிக்கையாளர்களின் தகவலை பெற்று போலியாக ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் தயாரிப்பது தெரியவந்துது.
அங்கு அசலை போன்று பார் கோடுகளுடன் முப்பதுக்கும் மேற்பட்ட போலி ஸ்மார்ட் கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த வட்ட வழங்கல் அதிகாரி சாருலதா காவல்துறைக்கு தகவல் அளித்தார்.
காவல்துறையினர் வந்தபின்பு கடையின் உரிமையாளர் முகமத் சம்ஹீதிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் அவர் அங்கு போலி ஸ்மார்ட் கார்டுகள் தயார் செய்யவில்லை கலர் ஜெராக்ஸ் மட்டுமே எடுத்து தரப்படுகிறது என்று முன்னுக்கு பின் முரணாக கூறியுள்ளார்.
அந்தக் கடையை முழுமையாக சோதனை செய்த அதிகாரிகள் போலி ரேஷன் கார்டுகள் தயாராவதை உறுதி செய்தனர். இதனையடுத்து கடையில் இருந்த பிரிண்டர் ஜெராக்ஸ் மிஷின் லேப்டாப் உள்ளிட்ட உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.
அந்த உரிமையாளர் கடந்த 5 வருடங்காலக அங்கு கடை நடத்தி வந்ததுள்ளார். இவருக்கு காட்டுமன்னார்கோயில் பகுதியில் மேலும் இரண்டு கடைகள் இதேபோன்று இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஓராண்டாக தமிழக அரசு ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் அச்சிடுவதை நிறுத்தியுள்ளது. இவ்வாறு கணினி மையத்தில் போலியாக அச்சிடுவது சட்டத்துக்கு புறம்பானது.
இதற்கிடையில் கணினி மைய உரிமையாளருக்கு ஆதரவாக ஜமாத்தார்கள் வந்து வாக்குவாதம் செய்ததால். மேலும் அவர்களுக்கு ஆதரவாக அதிகாரத்தில் உள்ள ஒருவருக்கு போன் போட்டு வட்ட வழங்கல் அதிகாரி சாருலதா நடவடிக்கை எடுப்பதை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதனால் செய்வதறியாது தவித்த வட்ட வழங்கல் அதிகாரி சாருலதா உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறிச் சென்றார்.
அப்பாடா..! முதல்வர் பதவிக்கு ரஜினி வரல! பெருமூச்சுடன் வரவேற்ற சீமான்; ரஜினி சொன்ன புதிய அரசியல் நிலைப்பாடு?
நடிகர் ரஜினிகாந்த் பல ஆண்டுகளாக தமிழக அரசியலில் குதிப்பேன் என்று கூறிவந்த நிலையில், தற்போது அவரின் அரசியல் ஆட்டம் சூடுபிடித்துள்ளது. கட்சியின் தலைமை வேறு, ஆட்சி அதிகாரம் செய்வது வேறு என்று புதிய அரசியல் வழியை ரஜினி பேசியுள்ளார். மேலும் தான் முதல்வர் பதவிக்காக எப்போதும் ஆசைப்பட்டதில்லை என்றும் கூறியுள்ளார். இதனால் பத்திரிகை, செய்தி, ஊடகம், அரசியல் என்று தமிழகமே ரஜினியின் அரசியல் நிலைப்பாட்டை பேசுவது போல் ஒரு சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில், நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ரஜினியின் அரசியல் பேச்சினை வரவேற்பதாக கூறியுள்ளார். ஏனெனில், தமிழகத்தின் அரசியலில் தமிழர்களை தவிர்த்து அயலார் முதல்வர் பதவியை வகிக்க கூடாது என்று சீமான் கடந்த பத்து வருடங்களாக கூறிவருகிறார். முன்னதாக ரஜினி தமிழக வெற்றிட அரசியல் குறித்து பேசியபோது அதற்கு நாதக பலத்த எதிர்ப்பு தெரிவித்திருந்தது. முதல்வர் பதவியை ரஜினி டார்கெட் செய்யவில்லை என்ற காரணத்தால் அதை வரவேற்றது மட்டுமல்லாமல் நாங்கள் 10 ஆண்டுகளாக உள்ளத்தூய்மையோடு தொடர்ந்து போராடி வருகிறோம். நாங்கள் உறுதியாக வெல்வோம் என்று சீமான் கூறியுள்ளார்.
இதனையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து நேற்று செய்தியாளர்களிடம் 3 சிறப்பம்சத்துடன் கூறினார். செய்தியாளர்களிடம் பேசியதாவது;
தமிழகத்தில் இருக்கும் அதிமுக மற்றும் திமுக போன்ற பெரும் கட்சிகளை எதிர்ப்பது சுலபமல்ல மேலும் அந்த இரு கட்சிகளும் தமிழக அரசியலில் பலமாக உள்ள கட்சியாக உள்ளதாக கூறியவர், தனது கட்சியின் மூன்று சிறப்பம்சங்களை குறித்து தெரிவித்தார்.
தேவையான அளவு கட்சியின் பதவிகள்
இளைஞர்களுக்கு மட்டும் 65% பதவி ஒதுக்கப்படும்.
கட்சிக்காக ஒரு தலைமை செயல்படும், ஆட்சிக்காக ஒரு தலைமை செயல்படும் என்று தனது அரசியல் நிலைப்பாட்டை கூறினார்.
சாலையில் திடீரென தீப்பிடித்த தனியார் பேருந்து! 26 உயிர்களை காப்பாற்றிய சாமர்த்தியமான ஓட்டுனர்..!!
சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில் ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பயணிகள் உயிர் தப்பினர்.
ஹைதராபாத் சங்கரெட்டி மாவட்டம் அருகே உள்ள இராமச்சந்திரபுரம் என்னுமிடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை சாலையில் வேகமாக ஆரஞ்ச் டிராவல்ஸ் என்னும் தனியார் பேருந்து ஒன்று 26 பயணிகளை மும்பையில் இருந்து ஏற்றிக் கொண்டு ஹைதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்தது.
வேகமாக சென்று கொண்டிருந்த பேருந்தின் பின் பகுதியில் இருந்து திடீரென கரும் புகை வெளியானது. அதிகாலை என்பதால் புகை வெளியாவதை யாரும் கவனிக்கவில்லை. சிறிது நேரம் கழித்து புகை அதிகமாகி தீ பற்றி எரிய ஆரம்பித்தது. முன்பு கவனிக்கத் தவறிய ஓட்டுனர், பேருந்தின் பின்புறம் தீப்பிடித்து எரிவதை கவனித்து உடனடியாக பேருந்தை ஓரம்கட்டினார்.
சாலையில் ஓரமாக நிறுத்தியதுடன் வேகமாக பயணிகளை இறங்கவும் கூறியதால், பேருந்தில் இருந்த அனைத்து பயணிகளும் பத்திரமாக கீழே இறங்கி பாதுகாப்பாக நின்றனர். மேலும் தீப்பிடித்த பேருந்த கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இச்சம்பவம் தொடர்பாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டதால், சம்பவ இடத்திற்கு விரைந்து கோரமாக எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பயணிகளின் உயிரிழப்பு தடுக்கப்பட்டது. இவ்விபத்து தொடர்பாக இராமச்சந்திரபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.