ஆங்கிலேயர்களின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கத்தில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் பல புரட்சிகளையும், அகிம்சை வழியில் பல போராட்டங்களையும், நடத்தி தன்னுடைய ரத்தத்தையும், தன்னுடைய உடலையும் நம்முடைய நாட்டிற்காக அர்பணித்த தேசத் தலைவர்களையும், வீரர்களையும், புரட்சியாளர்களையும், நினைவுபடுத்தும் நாள்தான் இந்த குடியரசு நாள் .
இந்திய விடுதலைக்குப் பின்னர் மக்களாட்சி மட்டுமே நாட்டின் சிறப்பான வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க முடியும் என்று கருதி இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் டாக்டர் அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு 1950 ஆம் வருடம் ஜனவரி மாதம் 26ஆம் தேதி முதல் குடியரசு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
நாட்டை அந்நியர்களின் பிடியிலிருந்து காப்பாற்றி பாரத மண்ணில் ஒவ்வொரு மனிதனும், சுதந்திரக்காற்றை சுவாசிக்க பாடுபட்ட தியாகிகளை நினைவு படுத்தும் விதத்தில் விடுமுறை வழங்கப்பட்டு நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும் மற்றும் கல்லூரிகளிலும், அரசு அலுவலகங்களிலும் தேசிய கீதம் இசைத்து கொடியேற்றி இனிப்புகள் வழங்கி இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
கடந்த 1929ஆம் வருடம் டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் அனைத்து தலைவர்களாலும் பூரண சுயராஜ்யம் என்பதே நம்முடைய நாட்டின் உடனடியான லட்சியம் என்று தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.
அதன்பிறகு காந்தியடிகளால் இந்தியத் தன்னாட்சி காண பிரகடனம் ஏற்படுத்தப்பட்டது, அதனடிப்படையில் 1930 ஆம் வருடம் ஜனவரி மாதம் 26ஆம் தேதி முதல்கட்டமாக சுதந்திர நாளாக கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
அத்தோடு 1946 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 9ம் தேதி காங்கிரஸ் கட்சியால் இந்திய அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டு அதன் தற்காலிகத் தலைவராக சச்சிதானந்த சின்ஹா என்பவரை நியமனம் செய்தது. ஆகஸ்ட் மாதம் 15 தேதி 1947ம் வருடம் இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்திய அரசியல் நிர்ணய சபையின் தலைவராக ராஜேந்திர பிரசாத் நியமனம் செய்யப்பட்டார். அவரே விடுதலை இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகவும் பொறுப்பேற்றவர்.
அதன் பின்னரே இந்திய அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டு அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் அமைப்பு சாசனம் எழுதப்பட்டது. மிக நீண்ட ஆவணமாக எழுதப்பட்ட இந்த சாசனம் இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு மக்களாட்சியை குறிக்கோளாக வைத்து நிறைவேற்றப்பட்டதால் 1930 ஆம் வருடம் ஜனவரி மாதம் 26 ஆம் நாளை நினைவுகூரும் விதத்தில் 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் 26ஆம் தேதி இந்திய தேசிய குடியரசு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.