தமிழகத்தில் ரேஷன் அட்டை என்பது மிக முக்கிய ஆதாரமாக உள்ளது. ரேஷன் அட்டையின் மூலம் மட்டுமே அரசு வழங்கக்கூடிய நலத்திட்டங்களை பெற முடியும். மேலும் ரேஷன் கடைகளின் மூலம் மக்களுக்கு மலிவு விலையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைகளில் பொருட்கள் விநியோகம் செய்யும் பொழுது மத்திய அரசு திட்ட அரிசிக்கு ஒரு முறையும், மாநில அரசு திட்ட பொருட்களுக்கு ஒரு முறையும் என மொத்தம் இரண்டு முறைகள் ரேஷன் அட்டைதாரர்கள் கைவிரல் ரேகை பதிவு செய்து பொருட்களை பெற்று வந்தனர்.
ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்குவதற்கு அட்டைதாரர்கள் அதிக நேரம் காத்திருப்பதை கருத்தில் கொண்டு அதனை சுலபமாகும் வகையில் தமிழக அரசின் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அதில் ரேஷன் அட்டைகள் மற்றும் முன்னுரிமை ரேஷன் அட்டைகள் அந்தியோதயா அன்னை யோஜனா ஆகிய ரேஷன் அட்டைகளுக்கு இனி பொருட்களை வழங்க ஒருமுறை மட்டுமே கைவிரல் ரேகை அல்லது கண் கருவிழி பதிவு செய்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்வதன் மூலம் பொருட்கள் குறைந்த நேரத்தில் மக்களுக்கு விநியோகிக்கப்படும். ரேஷன் அட்டைதாரர்கள் காத்திருக்கும் சூழல் ஏற்படாது. ரேஷன் அட்டை பயனாளிகள் ஒருமுறை கைரேகை பதிவு செய்தால் மத்திய அரசு மற்றும் மாநில அரசு திட்டப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.