திருவள்ளூர்-திருப்பதி : வெறும் 90 நிமிட பயணம், எப்படி தெரியுமா ?

0
180
#image_title

திருவள்ளூர்-திருப்பதி : வெறும் 90 நிமிட பயணம், எப்படி தெரியுமா ?

ஆந்திரா மாநிலத்தில் அமைந்துள்ளது உலக பிரசித்திப்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில். இந்த கோவிலுக்கு உலகம் முழுவதுமிருந்து பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். வருடம் முழுவதுமே இந்த கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்படும். புரட்டாசி மாதத்தில் கூட்டம் அலைமோதும். திருப்பதி கோவிலுக்கு செல்ல அந்தந்த மாநில அரசுகள் தேவையான வசதிகளை பக்தர்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு மாநிலம், திருவள்ளூர் பகுதியில் இருந்து சாலை மார்க்கமாக திருப்பதி சென்றடைய சுமார் 2 மணிநேரத்திற்கு மேல் ஆகிறது.இந்த பயண நேரத்தினை குறைக்கும் விதமாக, திருவள்ளூர்-திருப்பதி சாலை மார்க்கமாக செல்ல ரூ.985 கோடி செலவில் நான்கு வழி சாலை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாகவும், இதற்கான பணிகள் வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் துவங்க உள்ளது என்றும் அண்மையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

இந்த நான்கு வழிச்சாலை அமைப்பதன் மூலம் திருவள்ளூரில் இருந்து திருப்பதிக்கு செல்லும் பயண நேரம் வெறும் 90 நிமிடங்களாக குறையுமாம். இந்த சாலை அமைக்கும் பணிக்கான டெண்டர் அறிவிக்கப்பட்டு, அதற்கான ஒப்பந்தமும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஓரியண்டல் ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனம் இந்த டெண்டரை எடுத்துள்ளது என்று கூறப்படுகிறது.

குறிப்பாக 44 கி.மீ.நீளமுள்ள இந்த சாலைக்குள் உள்ளூர் மக்கள் கார் அல்லது பைக்குகளில் சாலையை இடையில் கடக்க வாய்ப்பில்லையாம். இப்பாதையில் அணுகு சாலைகள் கட்டுப்படுத்தப்பட்டு, இதற்கிடையே அமைக்கப்படவுள்ள 2 சுங்கச்சாவடிகள் அருகே மட்டுமே 2 அணுகு சாலைகள் அமைக்கப்படவுள்ளதாம். இந்த புதிய சாலைக்கு இடையூறு அளிக்காத வண்ணம் முக்கிய சாலை சந்திப்புகளில் இருந்து வரும் மக்கள் கடந்துசெல்ல 20 கீழ்மட்ட சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

அதிருப்தியில் பொதுமக்கள்

இந்த சாலை அமைக்கும் பணிகள் துவங்கியதும் போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. இந்நிலையில், இந்த சாலை அமைக்கும் பணிகள் குறித்து அப்பகுதி மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியதாவது, ‘இந்த திட்டம் துவங்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்பகுதியில் தற்போது வாகன நெரிசல் காரணமாக 6 வழிச்சாலை தேவைப்படுகிறது. ஆனால் இப்பொது தான் 4 வழிச்சாலையே அமைக்கப்படுகிறது’ என்று கூறியுள்ளனர். பாடி-திருநின்றவூர் இடையே பாதை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணியில் ஏற்பட்ட தாமதமும் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டதற்கு ஓர் காரணம் என்று கூறப்படுகிறது.

Previous articleஇன்று கூடுகிறது புதிய தேர்தல் ஆணையர்கள் பங்கேற்கும் ஆலோசனை குழு கூட்டம்!
Next articleதேர்தல் ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு – நாளை வெளியாகிறது நாடாளுமன்ற தேர்தல் தேதி விவரங்கள்!!