சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்த சுதர்சன்! குறைந்த இன்னிங்சில் 1000 ரன்கள் எடுத்து சாதனை!
ஐபிஎல் வரலாற்றில் குறைந்த இன்னிங்சில் 1000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சச்சின் தெண்டுல்கர் அவர்களின் சாதனையை முறியடித்து தற்பொழுது தமிழக வீரர் சாய் சுதர்சன் அவர்கள் குறைந்த போட்டிகளில் 1000 ரன்களை கடந்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்.
நேற்று(மே10) நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து களமிறிங்கிய குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சாய் சுதர்சன் மற்றும் கேப்டன் சுப்மான் கில் இருவரும் சேர்ந்து அதிரடியாக விளையாடி சென்னை அணியின் பந்துவீச்சாளர்களை பதறச் செய்தனர். சாய் சுதர்சன் 51 பந்துகளில் சதம் அடித்து 103 ரன்கள் சேர்த்தார். அதே போல கேப்டன் சுப்மான் கில் 55 பந்துகளில் சதமடித்து 104 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழந்து 231 ரன்களை சேர்த்தது.
232 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்கத்தில் இருந்தே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருந்தும் மொயின் அலி மற்றும் டேரி மிட்செல் இருவரும் சற்று அதிரடியாக விளையாடி சென்னை அணிக்காக ரன்களை சேர்க்கத் தொடங்கினர். இருப்பினும் 20 ஓவர்களின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் மட்டுமே சேர்க்க இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியில் சாய் சுதர்சன் சிறப்பாக விளையாடி ஐபிஎல் தொடரில் தன்னுடைய முதல் சதத்தை பதிவு செய்தார். மேலும் ஐபிஎல் தொடரில் குறைந்த இன்னிங்சில் 1000 ரன்களை கடந்த முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும் சாய் சுதர்சன் அவர்கள் இதன்மூலம் சச்சின் டெண்டுல்கர் அவர்களின் சாதனையை முறியடித்துள்ளார்.
சச்சின் தெண்டுல்கர் அவர்கள் 31 இன்னிங்சில் விளையாடி 1000 ரன்களை கடந்தார். இதுவே நேற்று(மே10) ஐபிஎல் தொடரில் ஒரு இந்திய வீரர் குறைந்த இன்னிங்சில் 1000 ரன்களை அடித்தார் என்ற சாதனையாக இருந்தது.சாய் சுதர்சன் அவர்கள் 25 இன்னிங்சில் விளையாடி 1000 ரன்களை கடந்துள்ளார்.