ADMK: மிக பெரிய திராவிட கட்சியாக அறியப்பட்டு வந்த அதிமுகவில் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பல முன்னணி தலைவர்கள் விலகுவதும், நீக்கப்படுவதுமான நிலை நீடித்தது. அப்போது ஓ.பன்னீர்செல்வமும் நீக்கப்பட்டார். அதன் பிறகு அவர் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒன்றை தொடங்கினார். இதனையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணியிலும் இணைந்தார்.
ஆனால் கடந்த 1 மாதத்திற்கு முன்பு NDA கூட்டணியிலிருந்து விலகிய ஓபிஎஸ் கூட்டணியில் தனக்கு மரியாதை அளிக்கப்படவில்லை என்றும், அமிதாஷ்வையும், நரேந்திர மோடியையும் சந்திக்க அனுமதி கேட்டும் நயினார் நாகேந்திரன் அதற்கு செவிசாய்க்கவில்லை என்றும் கூறினார். இவரை தொடர்ந்து டிடிவி தினகரனும் விலகினார்.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் செங்கோட்டையனை சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு செங்கோட்டையன் அண்ணன் விரும்பினால் நிச்சயம் அவரை சந்தித்து பேசுவேன் என்று கூறினார். இபிஎஸ்யை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என்ற டிடிவி தினகரனின் கருத்துக்கு ஆதரவும் தெரிவித்துள்ளார். பாஜக தான் அதிமுகவை இயக்குகிறதா என்ற கேள்விக்கு அதிமுகவை யார் இயக்குகிறார்கள் என்பதை எடப்பாடி பழனிசாமியிடம் தான் கேட்க வேண்டும் என்றும் கூறினார்.
விஜய் குறித்து கேட்ட போது, அவருக்கு மிகப் பெரிய கூட்டம் வருகிறது அதை மறுக்க முடியாது என்றும், தவெக பிரச்சாரத்திற்கு விதிக்கப்படும் நிபந்தனைகள் தேவையில்லாத கட்டுப்பாடுகள் என்றும் கூறினார். ஏற்கனவே தினகரன், செங்கோட்டையன் சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படும் நிலையில் இவர்களின் சந்திப்பும் நிகழ்ந்தால் இவர்கள் மூவரும் கூட்டணி அமைத்து இபிஎஸ்யை எதிர்ப்பார்கள் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது. இந்த பரபரப்பான அரசியல் சூழலில் அடுத்ததாக செங்கோட்டையன்-ஓபிஎஸ் சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.