TVK: தமிழக அரசியலில் சமீபகாலமாக உருவாகி வரும் புதிய சக்தி நடிகர் விஜய்யின் தவெக. இவரை சுற்றி தான் அரசியல் களமே சுழன்று கொண்டிருக்கிறது. கட்சி தொடங்கிய நாள் முதல் இன்று வரை அவருக்கான ஆதரவு பெருகி கொண்டே இருக்கிறது. கரூர் சம்பவம் நடந்தும் கூட அவருக்கான ஆதரவு குறையவில்லை. இதுவரை திமுக, அதிமுக என இரு முனைகளில் சிக்கியிருந்த திராவிட வாக்காளர்களில் ஒரு பகுதி, இப்போது மாற்றத்தை விரும்புவர்களாக மாறியுள்ளனர்.
அவர்கள் விஜய் பக்கம் திரும்பி வருவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த பிரிவினர், திராவிட சித்தாந்தத்தை நேரடியாக எதிர்க்காதவர்களாக இருந்தாலும், தற்போது அதன் செயல்முறையிலும், அரசியல் நடைமுறையிலும் ஏற்பட்ட அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள். இவர்களுக்கு விஜய் ஒரு மாற்று சக்தியாக மாறி வருகிறார். விஜய் தனது உரைகளில் மாற்றம் தேவை என்ற கோஷத்தை முன்னிறுத்தி, பழைய அரசியல் கலாச்சாரத்திலிருந்து விலகிய ஒரு புதிய அரசியலை வலியுறுத்தி வருகிறார்.
இதுவே மாற்றத்தை நாடும் திராவிட வட்டாரத்தினரிடையே புதிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. விஜய்யின் இந்த வருகை திமுகவிற்கு மட்டுமல்லாது அதிமுகவிற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கில் அமைந்துள்ளது. ஆனால் அரசியல் வல்லுநர்கள் இது ஒரு நீண்ட பயணம் என்றும், திராவிட சிந்தனையைப் பின்பற்றிய வாக்காளர்களை முற்றிலும் மாற்றுவது எளிதல்ல என்றும் கூறுகின்றனர். இருப்பினும், விஜய்யின் அரசியல் எழுச்சி தமிழகத்தின் அடுத்த கட்ட அரசியலை நிர்ணயிக்கக் கூடிய முக்கியக் காரணியாக மாறும் என கூறப்படுகிறது.

