ADMK TVK: அடுத்த வருடம் நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. மிகப்பெரிய திராவிட கட்சிகளான அதிமுகவும், திமுகவும் தங்களது கூட்டணியை பலப்படுத்தி வரும் நிலையில், பாமக, தேமுதிக, தவெக போன்ற கட்சிகளின் கூட்டணி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. பாமக மெல்ல மெல்ல அதிமுக பக்கம் சாய்வதாக தெரிகிறது. தேமுதிக இரு கட்சிகள் பக்கமும் கதவை திறந்து வைத்துள்ளது. நாதக வழக்கம் போல தனித்து களம் காண இருக்கிறது. தற்போது புதிதாக உருவெடுத்த தவெக யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற கேள்வி தான் அனைத்து ஊடகங்களிலும் அனல் பறக்க தொடங்கியுள்ளன.
இந்நிலையில் கரூர் சம்பவத்தில் விஜய்யின் குரலாக ஒலித்து, தவெகவை கூட்டணியில் சேர்த்து விடலாம் என்று திட்டம் தீட்டிய அதிமுக-பாஜகவிற்கு விஜய் ஏமாற்றத்தை பரிசளித்தார். அப்போதும் கூட தவெக உடனான கூட்டணி பேச்சு வார்த்தையை இவ்விரண்டு கட்சிகளும் கைவிடுவதாக தெரியவில்லை. அதிமுகவை சேர்ந்த அமைச்சர்கள் சிலர் தவெகவை நேரடியாகவே கூட்டணிக்கு அழைத்தனர். இதனை மறைமுகமாக விமர்சித்து பேசிய தவெகவின் இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்த கருத்து, அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக- தவெக கூட்டணி குறித்து வரும் தகவல் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், அதிமுக- தவெக கூட்டணி குறித்து பேசுபவர்கள் திமுகவின் பி என்று கூறியுள்ளார். அதிமுக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், விஜய் அதிமுக கூட்டணிக்கு வந்து விட்டால் அவரது எதிர்காலத்துக்கு நல்லது என்று வெளிப்படையாக கூறியதும், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திமுகவை வீழ்த்த விஜய் என்னும் அஸ்திரத்தை பயன்படுத்துவோம் என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நிர்மல் குமாரின் இந்த கருத்து இவர்கள் இருவரை தான் குறிக்கிறது என்ற வாதம் வலுப்பெறுகிறது. மேலும் இவர்கள் திமுகவின் பி டீம் என்று நிர்மல் குமார் கூறியது அதிமுகவின் உள்வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

