எதிர்வரும் சட்டசபை தேர்தலில் தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தன்னுடைய சொந்த தொகுதியான போடிநாயக்கனூர் சட்டசபைத் தொகுதியில் மூன்றாவது முறையாக களம் இறங்க இருக்கிறார்.கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் முதல்முறையாக போடிநாயக்கனூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தற்போதைய துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்து வந்த 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து தற்போது நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலிலும் இதே போடிநாயக்கனூர் தொகுதியில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் போட்டியிட இருக்கிறார்.
கடந்த இரு தேர்தல்களிலும் இந்த தொகுதியில் சுலபமாக வெற்றி பெற்ற துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்திற்கு இந்த முறை சற்று கடினமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. காரணம் திமுகவைச் சார்ந்த தங்கதமிழ்செல்வன் கட்சி தாவல் தடை சட்டத்தின் மூலமாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் அதிமுகவிலிருந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு சென்ற காரணத்தால், கட்சி தாவல் தடைச் சட்டத்தின் மூலமாக அவருடைய சட்டசபை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது.இதனைத்தொடர்ந்து டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, அவர் திமுகவிற்கு போய் சேர்ந்தார். அங்கே தற்போது தேனி மாவட்ட செயலாளர் என்ற பொறுப்பில் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பில் நியமிக்கப்பட்டிருந்த அவர் தற்சமயம் மாவட்ட செயலாளர் அளவிற்கு உயர்ந்து இருக்கிறார்.
அதே வேகத்தில் தற்பொழுது அந்த கட்சியின் சார்பாக தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்களை எதிர்த்து போடிநாயக்கனூர் தொகுதியில் சட்டசபை தேர்தலில் நிறுத்தப்பட்டு இருக்கிறார்.இதனால் அந்த தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மிக சுலபமாக வெற்றி பெற்ற தேர்தல் போய் தற்பொழுது சில கடுமையான பாதைகளை கடந்துதான் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வெற்றி பெறுவார் என்று சொல்லப்படுகிறது.அதோடு தேனி மாவட்டத்தில் இருக்கக்கூடிய பல்வேறு சமூகத்தினர் ஓபிஎஸ் மீது கடுமையான கோபத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், நேற்றைய தினம் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தேனி மாவட்டத்தில் தேனி ஒன்றியத்திற்கு உட்பட்ட உப்பார்பட்டி, பாலகுருநாதபுரம் போன்ற இடங்களில் திறந்தவெளி காரில் இருந்தபடி அவர் பிரசாரத்தை மேற்கொண்டார்.
அப்போது அதிமுக அரசின் சார்பாக மேற்கொள்ளப்பட்ட மக்கள் நலப் பணிகள் போன்றவற்றை துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பட்டியலிட தொடங்கினார்.
அப்போது துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கலகலப்பாகப் பேசி வாக்கு சேகரித்தார். அந்த சமயத்தில் முன்பெல்லாம் அண்ணன்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டும்போது தங்கைகள் அவர்கள் பின்னால் அமர்ந்து செல்வதை நாம் பார்த்தோம். ஆனால் தற்சமயம் அதிமுகவின் மானிய விலை இருசக்கர வாகன திட்டத்தால் தங்கைகள் வாகனத்தை ஓட்ட அண்ணன்கள் பின்னால் அமர்ந்து செல்வதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என தெரிவித்தார்.
அதேபோல ஜல்லிக்கட்டு போட்டிக்கு காங்கிரஸ் மற்றும் திமுக ஆட்சிக் காலங்களில் தடைவிதிக்கப்பட்டிருந்தது என்றும் நான் முதலமைச்சராக இருந்த சமயத்தில் பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசி ஒரே நாளில் 4 அரசாணைகள் வெளியிடப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது என்று குறிப்பிட்டு பேசியிருக்கிறார் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம்.
அப்பொழுது அந்தக் கூட்டத்தில் இருந்த மாணவர்கள் அனைவரும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களை தேர்ச்சி பெற செய்யுங்கள் என்று குரல் எழுப்பினார்கள். அவர்கள் எழுப்பிய குரல் துணை முதல்வர் காதில் விழ அவர்களைப் பார்த்து புன்னகைத்த துணை முதல்வர் உடனடியாக உங்களுடைய கோரிக்கை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அதன்மீதான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கின்றார்.
அதோடு நம்முடைய ஊரில் ஒரு விளையாட்டு மைதானம் தேவைப்படுகிறது ஐயா என்ற கோரிக்கையையும் அந்த மாணவர்கள் வைத்திருக்கிறார்கள். இதனை கேட்ட துணை முதலமைச்சர் ஏற்பாடு செய்கிறேன் என்று தெரிவித்துவிட்டு டைம் பாத்து அடிக்கிறீர்களேப்பா என்று புன்னகையுடன் தெரிவித்திருக்கிறார்.அவர் இவ்வாறு தெரிவித்தார் உடன் அங்கு கூடியிருந்த கூட்டத்தின் நடுவில் சிரிப்பலை தொடங்கியது.