சமீபத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு ,வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, உள்ளிட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் ஆளும் கட்சியான திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றது இதனால் அந்த கட்சியை சார்ந்தவர்கள் மாநிலம் முழுவதும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டார்கள். கடந்த 2019ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற சமயத்தில் வார்டு வரையறை சரியாக இல்லை என்று தெரிவித்து திமுக ஆட்செபம் தெரிவித்ததன் அடிப்படையில், அப்போது இந்த ஒன்பது மாவட்டங்களுக்கும் தேர்தல் நடத்தப்படவில்லை. ஆகவே உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தற்சமயம் கடந்த 6 மற்றும் 9 உள்ளிட்ட தேதிகளில் இந்த மாவட்டங்களுக்கான தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த தேர்தலில் திருநெல்வேலி மாவட்டத்தில் தொண்ணூறு வயது மூதாட்டி ஒருவர் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது மற்றும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி ஒருவர் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டது என பல ஆச்சரியமான விஷயங்களும் நடைபெற்று இருக்கின்றன.
இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் அடுத்த நெடுங்குன்றம் ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் சூர்யா பிரபல ரவுடியான இவர் மீது ஓட்டேரி, கூடுவாஞ்சேரி உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்த சூழ்நிலையில், சமீபத்தில் நடந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் நெடுங்குன்றம் ஒன்பதாவது வார்டு ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு அவருடைய மனைவி விஜயலட்சுமி மனுத் தாக்கல் செய்து இருந்தார்.
அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாத படியால் விஜயலட்சுமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார், இதனையடுத்து கடந்த 20ஆம் தேதி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் விஜயலட்சுமி ஊராட்சி மன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார்.
அந்த சமயத்தில் அந்த பகுதிக்கு வருகை தந்த ஓட்டேரி காவல்துறையினர் சூர்யாவின் மனைவி விஜயலட்சுமியை கஞ்சா வழக்கில் கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். நீதிபதி அவரை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார், இந்த சூழ்நிலையில், நேற்றைய தினம் நெடுங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் நடந்திருக்கிறது.
விஜயலட்சுமி நெடுங்குன்றம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவிக்கு தன்னுடைய வழக்கறிஞர் மூலமாக வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். விஜயலட்சுமியை எதிர்த்து அதிமுக, திமுக உள்ளிட்ட எந்த கட்சி சார்பாகவும் மனு தாக்கல் செய்யப்படாததால் அவர் போட்டியின்றி ஒருமனதாக ஊராட்சி மன்ற துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக உதவி தேர்தல் அலுவலர் அறிவித்திருக்கிறார்.
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கின்ற ஒரு பெண் சிறையில் இருந்தவாறே ஊராட்சி மன்ற துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்டு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. மறைமுக துணைத் தலைவர் தேர்தலை முன்னிட்டு நெடுங்குன்றம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பலத்த காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.