PMK: சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் சமயத்தில் தமிழக கட்சிகள் அனைத்தும் தனது தனி பெரும்பான்மையை இழந்து வருகின்றன. அந்த வரிசையில் பாமக முதலிடத்தை பிடித்துள்ளது என்றே கூறலாம். அதிமுக, திமுகவில் உட்கட்சி பிரச்சனை நிலவினாலும், அந்த கட்சிக்கு யார் தலைமை என்பதில் ஒரு தெளிவு உள்ளது. ஆனால் பாமகவில் அதுவும் கேள்வி குறியாகவே உள்ளது. தந்தைக்கும், மகனுக்கும் ஏற்பட்ட தலைமை போட்டியால் பாமக இரண்டாக பிரிந்துள்ளது. கட்சியின் மூத்த நிர்வாகிகள் ராமதாஸ் பக்கமும், இளைஞர்கள் அன்புமணி பக்கமும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
நடுநிலையில் உள்ள தொண்டர்கள் யார் பக்கம் நிற்ப்பதென்று தெரியாமல் திணறுகின்றனர். இந்த சண்டை உச்சத்தை எட்டிய நிலையில், இருவரும் மாறி மாறி அவர்களை எதிர்ப்பவர்களை கட்சியிலிருந்து நீக்கி வந்தனர். இந்நிலையிலும் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இனி அன்புமணிக்கு கட்சியில் இடமில்லை, வேண்டுமென்றால் தனிக்கட்சி ஆரம்பித்து கொள்ளட்டும் என்று கூறி பரபரப்பை கிளப்பினார். இதனால் அன்புமணி தனிக்கட்சி ஆரம்பிப்பார் என்ற சந்தேகம் எழுந்த நிலையில், தற்போது அது ராமதாஸுக்கே யூடர்ன் அடித்துள்ளது.
கட்சியின் தலைவர் மற்றும் சின்னத்திற்கு உரியவர் அன்புமணி தான் என்று தேர்தல் ஆணையம் கூறியதை ஏற்காத ராமதாஸ் இதனை சட்டரீதியாக எதிர் கொள்வதாக கூறியிருந்தார். இந்த பிரச்சனை பெரிதாகி கொண்டே போவதால், தேர்தல் சமயத்தில் கட்சியை, தேர்தல் ஆணையம் முடக்கி விட்டால் சிரமம் என்றுணர்ந்த ராமதாஸ் ஐயா பாமக என்ற பெயரில் தனி கட்சி துவங்க போகிறார் என்ற தகவல் பரவி வருகிறது. இதற்காக 100 பேரிடம் பிரமாண பத்திரத்தில் கையெழுத்து வாங்கும் பணியும் நடந்து வருகிறதாம். ராமதாஸின் இந்த அதிரடி முடிவு, அன்புமணிக்கு பாதகத்தை தான் ஏற்படுத்துமென்று ராமதாஸின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

