TVK NTK: 2026 யில் நடைபெற போகும் சட்டசபை தேர்தலுக்காக அரசியல் அரங்கு புதிய வேகமெடுத்துள்ளது. அதிமுக, திமுக என இருந்த தமிழக அரசியல் தற்போது அதிமுக, திமுக, நாதக, தவெக என மாறியுள்ளது. திராவிட கட்சிகளும், தவெகவும் கூட்டணி குறித்து பேசி வரும் நிலையில், நாதக மட்டும் எப்போதும் தனித்து நின்று தான் தேர்தலை சந்திப்பேன் என உறுதியாக கூறி வந்தது. ஆனால் விஜய்யின் வருகையால் அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
விஜய் கட்சி துவங்கியதிலிருந்தே சீமானும் அவரது கட்சியை சேர்ந்தவர்களும், தவெகவை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், சமீப காலமாகவே சீமான் விஜய்க்கு ஆதரவு அளித்து வருவதை பார்க்க முடிகிறது. இதனால் நாதக விஜய்யுடன் கூட்டணி அமைக்கும் என்று கூறப்பட்டது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், நேற்று புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடத்திய விஜய், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். மேலும் திமுகவையும், பாஜகவை ஒன்றிய அரசு என்றும் கூறி விமர்சித்திருந்தார். இந்நிலையில் விஜய்யின் புதுவை கூட்டம் குறித்து சீமானிடம் கேள்வி எழுப்பிய போது, புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து என்ற கோரிக்கையை முதன் முதலில் முன்வைத்தது நான் தான்.
அதன் பிறகு தான் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மனு கொடுத்தார். நான் முன்வைத்த கோரிக்கை வலுப்பெறுவதில் மகிழ்ச்சி. அதிலும் தம்பி விஜய், அதே கருத்தை வலியுறுத்துவதில் மிக்க மகிழ்ச்சி என்று கூறியுள்ளார். மேலும் இந்த கோரிக்கையை நாங்கள் தொடர்ந்து முன்னெடுப்போம் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இவரின் இந்த கருத்து முழுக்க முழுக்க விஜய்க்கு சாதகமாக உள்ளதாக பார்க்கப்படுகிறது. இதனால் நாதக, தவெக உடன் மறைமுக உறவு வைத்திருக்கிறது என்று பலரும் கூறுகின்றனர்.

