TVK: இன்னும் 5, 6 மாதத்தில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் தேர்தல் களம் புதிய வேகமெடுத்துள்ளது. கூட்டணி வியூகங்களும், தொகுதி பங்கீடும் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. மேலும் மாற்று கட்சியினரை தங்களது கட்சியில் சேர்க்கும் விழாவும் மாவட்ட வாரியாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில், முக்கிய அமைச்சர்களும் சரி, தொண்டர்களும் சரி திமுகவில் இணைந்து அதற்கு வலு சேர்த்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுகவை சேர்ந்த மருது அழகுராஜ், மைத்ரேயன், அன்வர் ராஜா, போன்ற முக்கிய தலைவர்களும் திமுகவில் இணைந்து முக்கிய பொறுப்பை வகித்து வருகின்றனர்.
இந்நிலையில் திமுகவை பின்னுக்கு தள்ளும் வகையில் தவெகவும் அரசியல் அனுபவமுள்ள முக்கிய முகங்களை சேர்ப்பதற்கான பணியை செய்து வருகிறது. அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெகவில் இணைந்த கையுடன், இன்னும் சில முக்கிய நிர்வாகிகளும் தவெகவில் சேர உள்ளனர். அவர்களை பற்றி அறிவிக்க முடியாது என்று கூறி சஸ்பென்ஸ் வைத்தார். இவ்வாறான சூழலில் கன்னியாகுமரி அதிமுக முன்னாள் எம்எல்ஏ முத்துகிருஷ்ணன் இன்று தவெகவில் இணைந்தார். இவரை தொடர்ந்து, தூத்துக்குடியின் மா.செயலாளராக இருந்த செல்லப்பாண்டியன் உடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
மேலும், திமுகவின் தலைமை கழக பேச்சாளராக இருந்த நாஞ்சில் சம்பத் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார். இவ்வாறு அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகள் பலரும் தவெகவில் இணைந்து வர, அவர்களை இணைப்பது மட்டும் என்னுடைய நோக்கம் அல்ல, நடிகர்களையும் தவெகவில் இணைப்பேன் என்ற தோரணையில் செங்கோட்டையன் ஒருவரை கட்சியில் சேர்த்துள்ளார். திரைப்படங்கள் மற்றும் நாடகங்களில் நடித்த பிரபல நடிகர் ஜீவா ரவி, இன்று செங்கோட்டையனை சந்தித்த நிலையில், அவர் தவெகவில் இணைந்துள்ளதாக செங்கோட்டையன் கூறியுள்ளார். இவரின் இந்த இணைவு தவெகவில் எந்த மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

