“அந்த இளம் வீரரையே தொடர்ந்து நான்காவதாக களமிறக்க வேண்டும் ” – அனில் கும்ப்ளே கருத்து
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவரும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி வென்று உள்ளூரில் தனது ஆதிக்கத்தை மேலும் ஒருமுறை பறைசாற்றியுள்ளது. இருப்பினும் அனைவரின் கவனமும் ஒரு நாள் தொடர்மீது திரும்பியுள்ளது . குறிப்பாக இந்த தொடரில் நான்காவது வீரராக களம்காணப்போவது யார் என்ற கேள்வி மீண்டும் ஒருமுறை எழுந்துள்ளது.
கடந்த சிலவருடங்களாகவே இந்தியாவிற்கு பலவகையிலும் நெருக்கடியை ஏற்படுத்திவருவது இந்த நான்காம் வரிசை வீரரின் தேர்வுதான். கடந்த தொடர்களில் நான்காம் வீரராக களம்கண்ட மும்பை வீரர் ஷ்ரேயஸ் ஐயர் தனது பணியை சிறப்பாக செய்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சுழற்பந்து வீச்சாளரும், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே ….. ” ஷிகர் தவான் இல்லாத நிலையில் அவரது இடத்தை கே. எல். ராகுல் சிறப்பாக தக்கவைத்துக்கொண்டதாகவும் , அதேபோல் ஷ்ரேயஸ் ஐயர் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்திவருவதாகவும் தொடர்ந்து நான்காவது வீரராக அவர் களம் காண வேண்டும்” என்று தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் மேற்கிந்திய தொடர் குறித்து குறிப்பிடுகையில் ” மேற்கிந்திய வீரர்கள் அதிரடியாக ஆடக்கூடியவர்கள் என்பதால் அவர்களுக்கு எதிராக இந்திய அணியின் பந்துவீச்சு சிறப்பாக அமைய வேண்டியது அவசியமானது என்றும் அப்படி அமையும் பட்சத்தில் இந்திய அணி தொடரை கைப்பற்றுவது எளிதானது ” என்றும் அவர் குறிப்பிட்டார்.