ஒரே மாதத்தில் 9 பேர் பலி.. வெள்ளியங்கிரி மலையில் அடுத்தடுத்து நிகழும் உயிரிழப்பு..!!

Photo of author

By Vijay

ஒரே மாதத்தில் 9 பேர் பலி.. வெள்ளியங்கிரி மலையில் அடுத்தடுத்து நிகழும் உயிரிழப்பு..!!

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி கோவிலில் 7 மலைகளை தாண்டி சுயம்பு வடிவில் அமைந்துள்ள சிவபெருமானை தரிசிக்க ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர். அதுவும் மகா சிவராத்திரி சமயங்களில் திரளான பக்தர்கள் சிரமங்களை தாண்டி வந்து சிவபெருமானை தரிசனம் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே வெள்ளியங்கிரி மலை ஏறும் பக்தர்கள் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து காணப்படுகிறது. ஏற்கனவே கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 8 பக்தர்கள் வெள்ளியங்கிரி மலை ஏறும்போது ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்த நிலையில் நேற்று ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சுமார் 10 பேர் நேற்று வெள்ளியங்கிரி மலை ஏறியுள்ளனர். அதில் ஒன்றாவது மலை ஏறும்போதே புண்ணியகொடி என்பவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவரின் நண்பர்கள் கீழே இறங்கி வந்து புண்ணியகொடியை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், அவர் பாதி வழியிலேயே உயிரிழ்ந்துள்ளார்.

இதுகுறித்து அங்கு வரும் பக்தர்கள் கூறுவது என்னவென்றால், மலையேறும் பக்தர்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டால், முதலுதவி செய்வதற்கு கூட இங்கு வசதி கிடையாது. பெரும்பாலும் 5 மற்றும் 6வது மலை ஏறும்போது தான் உடல்நல பாதிப்பு ஏற்படுகிறது. ஆனால் அந்த பகுதிகளில் மொபைல் நெட்வொர்க் கிடையாது. அவசரத்திற்கு யாரையும் தொடர்பு கொள்ள முடியாது.

அதேபோல பாதிக்கப்பட்ட நபர்களை டோலி உதவியுடன் தான் கீழே இறக்கி கொண்டு வர முடியும் என அடுக்கடுக்காக பல புகார்களை கூறி வருகிறார்கள். எனவே கோவில் நிர்வாகம் மலையேறும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.