
பாமக உட்கட்சி பிரச்சனை குறித்து இதற்கு முன் செய்தியாளர்கள் கேட்டதற்கு மருத்துவர் ராமதாஸ் ஆலோசனையின் படி நடக்கலாம் என ஏற்கனவே விசிக தலைவர் கருத்து தெரிவித்திருந்தார். இதனையடுத்து திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் தைலாபுரம் சென்று மருத்துவர் ராமதாஸ் அவர்களை சந்தித்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இது குறித்து கடந்த சனிக்கிழமை நடந்த பாட்டாளி சமூக ஊடகப்பேரவை கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ் விசிக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு திடீர் பாசம் ஏன் என கேள்வி எழுப்பியிருந்தார். ஏற்கனவே மருத்துவர் ராமதாஸ் திமுக B சொல்வதை கேட்கிறார் என விமர்சித்திருந்த நிலையில் இவர்களின் சந்திப்பு தொண்டர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவனிடம் அன்புமணியின் பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,பாசம் என்பது ஒரு வலிமையான வார்த்தை, நாங்கள் குறிப்பிட்டது அந்த அடிப்படையில் அல்ல தந்தை மகனுக்கிடையே ஒரு விரிசல் உருவாகியுள்ளது, அது மேலும் பெரியதாகி விடக்கூடாது என்ற அடிப்படையில் கூறப்பட்ட பொறுப்பான வார்த்தை. தந்தைக்கு இருக்கும் அனுபவத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என எண்ணத்தில் கூறப்பட்ட பொறுப்பான வார்த்தை.
அந்த கட்சி எப்படியோ போகட்டும் என விட்டு விட முடியாது ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியதால் அக்கட்சிக்கு பெரும்பங்கு உண்டு. இந்த சூழலை தனக்கு சாதகமாக சனாதன சக்திகள் பயன்படுத்தி விடக் கூடாது. பாசிச சக்திகள் உள்ளே வந்து விடக் கூடாது என்ற அடிப்படையில் கூறியது.
மேலும் எச்சரிக்கையாக இருங்கள். யாரோ சொல்வதை கேட்பதை விட அப்பா சொல்வதை கேளுங்கள் என ஒரு பொறுப்பான வார்த்தையாக தான் கூறினேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.