பழிவாங்க நினைத்து மகன்களுக்கு பதில் தந்தையை வெட்டிய கும்பல்! வசமாக போலீசாரிடம் சிக்கிய சம்பவம்!
புதுச்சேரி மாநிலத்தில் கோரிமேடு காமராஜர் நகரில் கட்டபொம்மன் வீதியை சேர்ந்தவர் மணிவண்ணன். 55 வயதான இவர் விழுப்புரம் மாவட்டத்தில் வானூர் அடுத்த பட்டானூர் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 14 ம் தேதி ஆயுத பூஜையை முன்னிட்டு நீர்த்தேக்கத் தொட்டியின் மோட்டாருக்கு படையல் வைப்பதற்காக தனது வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிள் மூலம் அந்த இடத்திற்குச் சென்றார்.
அப்போது திருநகர் பகுதியில் அவருக்காக, ஏற்கனவே இருந்த ஒரு கும்பல் அவரை திடீரென வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிச் சென்றனர். இந்த தகவலை அறிந்த ஆரோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையின் போது அந்த படுகாயமடைந்த மணிவண்ணனின் மகன்களான சுந்தர் மற்றும் வினோத் இருவரும் சேர்ந்து கடந்த வருடம் செப்டம்பர் 30 ம் தேதி இதே போல் முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த மாந்தோப்பு சுந்தர் என்பவரை கொலை செய்துள்ளனர் என்ற தகவல் கிடைத்தது.
அதன் காரணமாக அந்த கொலைக்கு பழிவாங்கும் விதமாக தற்போது சுந்தர் தரப்பிலிருந்து மணிவண்ணனின் மகன்களை பழி தீர்க்க திட்டம் தீட்டியுள்ளனர். அதனை அறிந்த மணிவண்ணனின் மகன்கள் தலைமறைவாகிவிட்டனர். மேலும் போலீசாரின் உத்தரவினால் அவர்கள் இருந்த இடத்தை விட்டு வெளியே வர முடியவில்லை. அந்த ஆத்திரத்தின் காரணமாக தற்போது இந்த வெறிச் செயல் அரங்கேறி இருக்கலாம் என்று தெரிவித்து உள்ளனர்.
அதனைத் தொடர்ந்து மணிவண்ணனின் மனைவி வள்ளி ஆரோவில் போலீஸ் நிலையத்தில் இது தொடர்பாக ஒரு புகார் மனுவை கொடுத்தார். மாந்தோப்பு சுந்தரின் மனைவி செல்வி. 40 வயதான இவரும், அவரது மகன் ஜோஷ்வா என்ற 20 வயதான பையன் ஆகியோரது தூண்டுதலின் பேரில் செய்திருக்கலாம் என்றும் கூறியிருந்தார். அதன் காரணமாக போலீசார் மாந்தோப்பு சுந்தரின் மனைவி மற்றும் மகன் உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடினர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக புதுச்சேரி கோரிமேட்டை சேர்ந்த பூபாலன் மகன் கரண் (21), விஜயன் மகன் அஜய்குமார் (22), ரமேஷ் மகன் டிராவிட் (21), புதுச்சேரி சாரம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் மகன் நரேஷ் (25), வில்லியனூரை சேர்ந்த கோபு மகன் கோகுல்நாதன் (24) இவர்களை கைது செய்த போலீசார் வானூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையிலும் அடைத்துள்ளனர்.