Monday, July 14, 2025
Home Blog Page 36

முகுந்தனுடன் கைகோர்த்த அன்புமணி… அதிர்ச்சியில் ராமதாஸ் – அடுத்தடுத்து நடப்பது என்ன?

பாமகவில் அப்பா-மகன் இடையேயான அதிகாரப்பகிர்வு சார்ந்த பிரச்சனை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இப்போது முன்னாள் இளைஞரணி தலைவர் முகுந்தனுடன் அன்புமணி ராமதாஸ் சமரசம் செய்திருப்பது போல தகவல்கள் வெளியாகி, ராமதாஸ் தரப்புக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

பொதுக்குழு மேடையில் வெடித்த விவகாரம்

கடந்த டிசம்பர் மாத பொதுக்குழு கூட்டத்தில், முகுந்தனுக்கு இளைஞர் அணி தலைவர் பதவி வழங்கப்படுவது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் அதே மேடையில் அன்புமணி வெளிப்படையாக அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். “புதிதாக வந்தவர்களுக்கு பதவியில்லை… அனுபவம் வாய்ந்தவர்களை பதவிக்கு தேர்வு செய்ய வேண்டும்” என அவர் கூறியதும், கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

முகுந்தனின் ராஜினாமா… பின்னணியில் அழுத்தம்?

இதனையடுத்து, முகுந்தன் பரசுராமன், பாமக இளைஞரணி தலைவர் பதவியில் இருந்து விலகினார். பொதுமக்களுக்கு சொல்வது போல, அவர் “தனிப்பட்ட காரணங்களுக்காக” விலகினாலும், குடும்ப அழுத்தம் காரணமாகவே பதவியை விட்டதாக கூறப்படுகிறது. அதிலும் “தலைவர் அன்புமணி” என அவர் குறிப்பிடுவதும் கவனிக்கத்தக்கது.

அன்புமணியின் டீல்?

சமீபத்தில் அன்புமணி ராமதாஸ் நேரடியாக முகுந்தனை அழைத்து, இங்கதான் எதிர்காலம் இருக்கு. அங்க இருந்தா வளர்ச்சி கிடையாது. இப்போ திடீர்னு விலகினாலும் சட்டமன்றத் தேர்தலில் எம்எல்ஏ சீட் தருகிறேன். வெற்றி பெற்று முன்னேறு” என்ற டீல் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாவட்ட கணக்குகளில் அன்புமணிக்கு பலம்

மாநில அளவில் அன்புமணியின் ஆதரவாளர்களே பெரும்பான்மை என்பதை அறிந்த முகுந்தன், ஆரம்பத்தில் கண்டிப்பாக இருந்தாலும், தன்னை சுற்றியுள்ள குடும்ப அழுத்தத்தையும், அன்புமணியின் வாக்குறுதியையும் கணக்கில் கொண்டு, அதை ஒப்புக்கொள்ள முன்வந்ததாக கூறப்படுகிறது.

ராமதாஸ் அதிர்ச்சி – சட்ட ஆலோசனையில் தீவிரம்

இந்த திடீர் முடிவுகள் அனைத்தும் நிறுவனரும் தலைவருமான ராமதாஸ் தரப்பில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதனால், தற்போது அவர் கட்சி கட்டுப்பாட்டை சட்ட ரீதியில் எவ்வாறு நிலைநாட்டலாம் என்பதை ஆராய முன்னணி சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது.

தேர்தலுக்கு முன்னர் பாமகவில் வெடிக்கும் பூகம்பம்?

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், பாமகவின் உட்கட்சியில் இந்த அப்பா-மகன் குழப்பம், கட்சியின் ஒருமைப்பாட்டை சிதைக்கும் அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது. இதில் பரிதவிக்கும் கட்சி நிர்வாகிகள், “கட்சி தலைமை யாரிடம்?”, “அதிகாரம் யாரிடம்?” என குழப்பத்தில் இருக்கின்றனர்.

பாஜக-காங்கிரஸ் மறைமுக கூட்டணி என்ற பரபரப்பு குற்றச்சாட்டு! ‘இந்தியா’ கூட்டணியை விட்டு வெளியேறியது ஆம்ஆத்மி!

தேசிய அரசியல் தளத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தும் வகையில், ஆம்ஆத்மி கட்சி (‘AAP’), ‘இந்தியா’ கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதோடு, இனி அனைத்து மாநிலங்களிலும் தனித்து போட்டியிடும் என்ற முடிவையும் எடுத்துள்ளது.

பாஜக-காங்கிரஸ் இரண்டும் ஒரு பக்கம்?

ஆம்ஆத்மியின் அரசியல் விவகாரக் குழுவில் எடுத்த முடிவை விளக்கும் அறிக்கையில்mகூறியுள்ளதாவது:

பாஜகவும் காங்கிரசும் மறைமுக கூட்டணி வைத்துள்ளன. மக்களவை தேர்தலுக்காக உருவான INDIA கூட்டணி, இப்போது தனது நோக்கத்தை இழந்துவிட்டது. அதனால், நாம் இனி தனித்துப் போட்டியிட முடிவு செய்கிறோம்.”

மோடிக்கு காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஆதரவு

பஹல்காம் தாக்குதல் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு விசாரணைக்கான சிறப்பு கூட்டத்தை கோரி INDIA கூட்டணியில் உள்ள 16 எதிர்க்கட்சிகள் இணைந்து கடிதம் எழுதியன. ஆனால் ஆம்ஆத்மி மட்டும் கையெழுத்திடாமலேயே விலகியது, இது பெரிய அரசியல் மாற்றத்திற்கு அடையாளமாக விளங்கியது.

“ராகுல் பேசுவது மோடிக்கு ஆதாயம்!” – ஆம்ஆத்மி குற்றச்சாட்டு

ராகுல் காந்தி பேசுவது பிரதமர் மோடிக்கு அரசியல் ரீதியாக ஆதாயமாகவே இருக்கிறது. அதற்குப் பதிலாக, மோடி, சோனியா குடும்பத்தை சிறைவாசத்திலிருந்து காப்பாற்றுகிறார். இரு கட்சிகளும் பள்ளி, மருத்துவம், குடிநீர், மின்சாரம் போன்ற மக்களின் அடிப்படை பிரச்சனைகளில் முழுமையாக அக்கறை காட்டவில்லை.” என ஆம்ஆத்மியின் மூத்த தலைவர் அனுராக் தண்டா தெரிவித்துள்ளார்:

அனைத்து மாநிலத் தேர்தல்களிலும் தனித்து போட்டி 

ஆம்ஆத்மி கட்சி தெரிவித்துள்ளதாவது:

  • இனி வரும் அனைத்து மாநில தேர்தல்களிலும் தனித்து போட்டியிடும்.

  • 2025 இறுதியில் நடைபெறும் பீகார் சட்டமன்ற தேர்தலில், அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும்.

  • தேசிய நலனுக்கேற்ப எதிர்க்கட்சிகளின் சிறந்த முயற்சிகளை ஆதரிக்க தயாராக உள்ளது.

“விஜய்க்கு செல்வாக்கு! தவெகவில் இணைகிறாரா காளியம்மாள்” – வெளியான பரபரப்பு தகவல்!

நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள், தற்போது தவெகவில் இணையப்போகிறார் என்ற தகவல்கள் பரவிய நிலையில், அது உண்மை அல்ல எனத் தெளிவாக மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

“விஜய் இளைஞர்களை ஈர்க்கக்கூடியவர்!”

தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த காளியம்மாள், “விஜயின் அரசியல் வருகை இளைஞர்கள் மற்றும் பெண்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அவருக்கு அந்தளவுக்கு செல்வாக்கு இருக்கிறது. ஆனால் நான் எந்தக் கட்சியிலும் தற்போது இணையவில்லை. இணைய விரும்பினால் அதை முறைப்படி, முழு காரணங்களுடன் அறிவிப்பேன்” என்று தெரிவித்தார்.

“கணிக்க முடியாத அரசியல் சூழல்”

காளியம்மாள் மேலும் கூறுகையில், “இப்போதுள்ள அரசியல் சூழல் மிகக் குழப்பமானது. மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். யார் எப்போது என்ன முடிவெடுப்பார்கள் என்பதை சொல்ல முடியாத நிலைதான் உள்ளது” என்றார்.

தவெகவில் இணைய திட்டம் இல்லை

அண்மையில் சமூக வலைதளங்களில் பரவிய “காளியம்மாள் தவெகவில் சேர்ந்துவிடுவார்” என்ற செய்தியை முற்றிலும் மறுத்த அவர், “அந்த தகவலில் எந்த உண்மையும் இல்லை” எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.

எதிர்கால அரசியல் திட்டம்

“நான் மக்கள் பிரச்சனைகளுக்காக குரலெழுப்ப விரும்புகிறேன். எனது அடுத்த நிலைப்பாடு எது என்றாலும் அது முழுமையாக மக்களுக்கானதாயிருக்கும். கட்சியில் இணையும் நேரம் வந்தால் ஏன் இணைகிறேன் என்பது உட்பட அனைத்து தகவல்களையும் முறைப்படி வெளிப்படுத்துவேன்” என்று உறுதியுடன் தெரிவித்தார்.

“தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” – கமலுக்கு ஆதரவாக களமிறங்கிய அமைச்சர் நேரு! பரபரக்கும் அரசியல்களம் 

கர்நாடகா மாநிலத்தில் கன்னட மொழி குறித்து கமல் தெரிவித்த கருத்தே தற்போது பரபரப்பான விவகாரமாக பேசப்பட்டு வருகிறது. நடிகர் கமல்ஹாசனின் கன்னட மொழியின் பிறப்பு குறித்து தெரிவித்த கருத்து அடிப்படையில் கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு அமைச்சர் கே.என்.நேரு கமலுக்கு ஆதரவு தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆரம்பம் முதல் கமல் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் கமல் கூட்டணி வகிக்கும் திமுக தலைவர்கள் பெரும்பாலோனோர் அமைதி காத்து வந்தனர்.

தக் லைஃப் திரைப்பட விழாவில் வெடித்த சர்ச்சை

சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற தக் லைஃப் திரைப்பட இசைவெளியீட்டு விழாவில், நடிகர் கமல்தமிழிலிருந்துதான் கன்னடம் உருவானது” என கன்னட நடிகர் சிவராஜ்குமார் முன்னிலையில் கூறினார். இது கர்நாடகாவில் தீவிர எதிர்ப்பை கிளப்பியது. பல கன்னட அமைப்புகள் கமலை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டன. தக் லைஃப் திரைப்படம் வெளியாவதை தடுக்க பல விதங்களில் மிரட்டல்கள் வந்தன.

மன்னிப்பு கேட்க வேண்டும் என அழுத்தம் – கமல் மறுப்பு

இந்த சர்ச்சைக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கமலிடம் அழுத்தம் வந்தபோதும், கமல் தன்னிடம் தவறு இல்லை என மறுத்தார். இதையடுத்து ராஜ்கமல் பிலிம்ஸ், திரைப்படத்திற்கு போலீஸ் பாதுகாப்பு கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர, இது ஜூன் 10ம் தேதி விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அமைச்சர் கே.என்.நேரு பாராட்டு – “கமல் தவறாக பேசவில்லை”

இந்நிலையில், திருச்சியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்த அமைச்சர் கே.என்.நேரு, செய்தியாளர்களிடம் கூறுகையில்:

தமிழிலிருந்துதான் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகள் வந்தன. கமல் கூறியதில் எந்த தவறும் இல்லை. அவரது கருத்து வரலாற்று அடிப்படையிலான உண்மை,” என தெரிவித்தார். கமலுக்கு ஆதரவாக கூட்டணி கட்சியின் மூத்த தலைவரும் ஆளும் கட்சி அமைச்சருமான கே.என்.நேரு கருத்து தெரிவித்துள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்ற தடையை மீறி வசூலித்த சுங்கச்சாவடி! வழியை மறித்து போராட்டத்தில் லாரி உரிமையாளர்கள்

தூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் தரம் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையிலும் சுங்கக் கட்டணம் வசூலிப்பது நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக இருப்பதாக கூறி, லாரி உரிமையாளர்கள் சுங்கச்சாவடிக்கு முன் லாரிகளை நிறுத்தி போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

நெடுஞ்சாலை ஒப்பந்தமும் முறையில்லா வசூலும்!

2011ம் ஆண்டு சாலையை கட்டும் ஒப்பந்தத்தின் படி, மரம் நடும் பணிகள், சென்டர் மீடியன், பராமரிப்பு போன்ற அடிப்படை வசதிகள் தரப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதற்கேற்ற பணிகள் செய்யப்படவில்லை என்பது வாகன ஓட்டிகளின் குற்றச்சாட்டு.

இதனிடையே, 2023ல் அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டும், சுங்கக் கட்டண வசூல் தொடர்ந்து நடைமுறையில் இருந்தது. மாதம் ரூ.11 கோடி வசூலித்தும், பராமரிப்புக்காக வெறும் ரூ.30 லட்சமே செலவழிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீதிமன்ற தடையை மீறி தொடரும் வசூல்!

இதை எதிர்த்து தூத்துக்குடியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர, நீதிபதிகள் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தனர். தரமான சாலை வசதி இல்லையெனில் சுங்கக் கட்டணம் வசூலிக்க முடியாது என்று நீதிமன்றம் வலியுறுத்தியது.

போராட்டம் வெடித்தது – சுங்கச்சாவடிக்கு முன் லாரி நிறுத்தம்!

தடை உத்தரவை மீறி இன்று (ஜூன் 4) புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்பட்டதால், லாரி உரிமையாளர்கள் சாலையை மறித்து வாகனங்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போலீஸ் சமாதானம் 

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பரபரப்பை சமாளிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இது சம்பந்தமாக நீதிமன்றத்தின் அடுத்த விசாரணை ஜூன் 18-ஆம் தேதி நடைபெற இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாணவ மாணவிகள் ஒரே கழிவறையை பயன்படுத்தும் அவலம்! போராட்டத்தில் இறங்கிய ஆளும்கட்சி கவுன்சிலர் 

நெல்லை பாளையங்கோட்டை மாநகராட்சி எல்லைக்குள் கீழ் உள்ள மணகாவலம் பிள்ளை நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் நீண்ட காலமாக கட்டட வசதிகள் இல்லாமை, கழிவறை பயன்பாட்டில் பெரும் கோளாறு மற்றும் நிர்வாகத்தின் அலட்சியம் போன்ற அவல நிலைகள் தொடர்ந்தவாறு உள்ளதாக பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கழிவறை இல்லாமல் அவலம்!

8-ஆம் வகுப்பு வரை மாணவர்கள் கல்வி பயிலும் இந்த அரசு பள்ளியில், ஆண் மற்றும் பெண் மாணவ, மாணவிகள் ஒரே கழிவறையை பயன்படுத்த வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளதாக பெற்றோர் வேதனையுடன் கூறுகின்றனர். குறிப்பாக வயதுக்கு வந்த மாணவிகளுக்கு இது மிகவும் சங்கடம் மற்றும் சிரமமான சூழ்நிலை. எனவே, பள்ளி நிர்வாகம் மற்றும் மாநகராட்சியின் மேல் அவர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

நிரந்தர கட்டுமானம் இல்லை – போராட்டத்துக்கு வழக்குப்பதிவு?

பள்ளிக்கான கட்டிட பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நிர்வாக மெத்தனத்தால் நிறைவடையாமல் இருப்பது மட்டுமல்லாமல், அதை வலியுறுத்தி போராட்டம் நடத்திய பெற்றோர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

திமுக கவுன்சிலர் வீதியில் – லட்டு கொடுத்து எதிர்ப்பு!

இந்தத் துயர நிலையை கண்டித்து, திமுக கவுன்சிலர் எம்.இந்திரா மற்றும் அவரது கணவர், பொதுமக்களுடன் இணைந்து வீதியில் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, “லட்டு கொடுத்து” நிர்வாகத்துக்கு எதிராக எதிர்ப்பு பதிவு செய்தது மிகுந்த கவனம் பெற்றுள்ளது. ஆளும் கட்சி கவுன்சிலரே வீதியில் இறங்கி அரசு செயல்பாட்டை எதிர்த்திருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெயர்ந்து விழும் நிலையில் மேற்கூரை! வைரல் வீடியோ

பள்ளியின் மேற்கூரை தொடுதோறும் பெயர்ந்து விழும் அபாயகரமான நிலையில் இருக்கிறது. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சீரான கட்டுமானமே இல்லாத நிலையில், வார்டு 7இல் உள்ள இந்த அரசு பள்ளியின் தரம் உயர்த்த பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்து வருகிறது.

மக்களே இனி 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது? ரிசர்வ் வங்கி கொடுத்த விளக்கம்!!

மத்திய அரசு புதிதாக 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்தது.அதனால் மக்கள் மிகவும் அவதி அடைந்தனர். அதன் பிறகு தற்போது 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இல்லாததால் 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் இருக்கின்றது.

இந்நிலையில் 500 ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசு விரைவில் 500 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற இருப்பதாகவும் கூறப்படுகின்றது. டிஜிட்டல் முறையில் பணப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளனர்.

இது தொடர்பாக அனைத்து வங்கிகளின் ஏடிஎம்களில் மாற்றம் செய்ய உத்தரவிட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது. ரிசர்வ் வங்கி பிறப்பித்த ஒரு உத்தரவாக உள்ள நிலையில் மக்களிடம் 100 ரூபாய் 200 ரூபாய் பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டும். அதனால் ஏடிஎம்களில் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் இருப்பை அதிகரிக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் ரிசர்வ் வங்கி இது குறித்து விளக்கம் அளித்துள்ளது. 500 ரூபாய் நோட்டுக்கான டெண்டர் இன்னும் சட்டபூர்வமாகவில்லை. டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கவும், குறைந்த மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை அதிகரிக்கவும் 500 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவது தொடர்பாக பேசப்பட்டு வரும் நிலையில் அதிகாரபூர்வ தகவல் தற்போது வரை வெளியாகவில்லை. 

அதனால் தொடர்ந்து 500 ரூபாய் நோட்டுகள் நடைமுறையில் இருக்கும். அதனை மக்கள் அனைவரும் பயன்படுத்தலாம் எனவும் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆயிரம் மற்றும் 500 நோட்டுகள் செல்லாது என அறிவிப்பு வெளியான நிலையில் மக்கள் அதிலிருந்து தற்போது தான் மீண்டு புதிய நோட்டுக்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர் தற்போது மீண்டும் இந்த தகவல் வெளியாகி அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவிகளுக்கு அரசு அறிவித்த அசத்தல் அப்டேட்; மாதம் தோறும் 1000 பெறுவது எப்படி தெரியுமா!!

தமிழக அரசு பல்வேறு நிதி சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இந்நிலையில் புதுமைப்பெண் திட்டம் முக்கிய ஒன்றாக பார்க்கப்படுகின்றது. தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய பெண் மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக தொடங்கப்பட்டது.

மேலும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கின்றது. அரசு பள்ளிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளின் சேர்க்கை மற்றும் இடைநீற்றலை குறைப்பதற்காகவும் அவர்களுடைய திறனை உணரவும் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. பொருளாதார சூழ்நிலையில் பின்தங்கியுள்ள குடும்பத்தைச் சேர்ந்த பெண் குழந்தைகள் மற்றும் இளம் மாணவிகளுக்கு இத்திட்டம் நிதி உதவி வழங்கி வருகின்றது. இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க தமிழ்நாட்டில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்.

ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு பள்ளிகள் அல்லது கல்லூரிகளில் பயின்று கொண்டிருக்க வேண்டும் என்பது அவசியம். இத்திட்டத்தின் மூலம் மாதம் தோறும் உதவித் தொகையாக மாணவிகளின் வங்கி கணக்கில் நேரடியாக 1000 ரூபாய் செலுத்தப்படும். மேலும் இளங்கலை பட்டம், டிப்ளமோ, ஐடிஐ ,தகுதி அல்லது அங்கீகரிக்கப்பட்ட பிற படிப்புகள் என பெண் தனது உயர்கல்வியை படித்து முடிக்கும் வரை உதவித்தொகை தொடர்ந்து வழங்கப்படும். இந்தத் திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ 698 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க மாணவர்கள் தங்கள் பள்ளிகள் அல்லது கல்வி நிறுவனங்களின் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டையில் இத உடனே பண்ணுங்க; ஜூன் 14 வரை மட்டுமே டைம்!!

ஆதார் அட்டை என்பது முக்கிய ஆவணமாக மாறி உள்ளது. இந்நிலையில் ஆதார் அட்டையில் உள்ள முகவரி உள்ளிட்டவற்றை ஆன்லைன் மூலமாக இலவசமாக புதுப்பிப்பதற்காக ஜூன் 14ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு எந்த ஒரு புதுப்பிப்புகள் செய்தாலும் 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர். இது குறித்து யூனிட் ஐடென்டிபிகேஷன் அத்தாரிட்டி ஆப் இந்தியா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் ஆதார் பதிவு செய்த நாளில் இருந்து சுமார் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அடையாள ஆவணங்கள் மற்றும் முகவரி ஆகியவற்றை புதுப்பிக்க வேண்டும்.

இதன் மூலம் ஆதார் விவரங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு துல்லியமாக இருக்கும் என்பதால் இந்த புதுப்பிப்பை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால் ஜூன் 14ஆம் தேதி வரை எந்த தகவல் மாற்றத்தையும் செய்து கொள்ளலாம். அதற்கு அருகே உள்ள ஆதார் மையத்திற்கு சென்று 50 ரூபாய் கட்டணத்துடன் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. மேலும் ஆதார் அட்டையில் விரல் ரேகை , கண் நார் ஸ்கேன் மற்றும் புகைப்படம் ஆன்லைனில் புதுப்பிக்க முடியாது இதற்கு ஆதாரம் மையத்திற்கே செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.

ஆதாரில் புதுப்பிப்பு செய்ய விரும்புபவர்கள் ஜூன் 14ஆம் தேதிக்குள் அதனை செய்து முடிக்க வேண்டும் இல்லையெனில் கட்டணம் செலுத்தி ஆதார் மையத்திற்கு நேரில் சென்று புதுப்பிக்க வேண்டும் என்பது அவசியம் எனவும் தெரிவித்துள்ளனர். அனைத்து இடங்களிலும் ஆதார் அட்டை முக்கிய ஒன்றாக உள்ள நிலையில் உடனே அப்டேட் செய்வது அவசியம்.

பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்; உடனே விண்ணப்பியுங்கள்!!

தமிழகத்தில் அண்மையில் 10 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியானது. 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு மட்டும் பொது தேர்வுகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது 11 வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்தி வருகின்றனர்.

மேலும் முன்பு 1200 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதிய மாணவர்கள் தற்போது 11 ஆம் வகுப்பில் 600 மதிப்பெண்களுக்கும் 12-ம் வகுப்பில் 600 மதிப்பெண்களுக்கும் தேர்வு எழுதுகின்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பொது தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வு நடத்தப்படும். அதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 10 ,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மறு கூட்டல் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஜூன் 5ஆம் தேதி முதல் மாணவர்கள் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அரசு தேர்வு துறை சார்பாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மறு கூட்டல் அல்லது மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விருப்பம் தெரிவிக்கும் மாணவர்கள் https://dge.tn.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்வதற்கான விண்ணப்ப படிவத்தை ஜூன் ஐந்தாம் தேதி முதல் ஜூன் ஏழாம் தேதி வரை மட்டுமே மாவட்ட தேர்வுகள் அலுவலகத்தில் சமர்ப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தேர்வுத்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மாணவர்களின்விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு அவர்களுடைய மதிப்பெண் மறு கூட்டல் அல்லது மறு மதிப்பீடு செய்து தரப்படும்.