டி டி வி யின் கோபத்தால் பரபரப்பான ட்விட்டர் வலைதளம்!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சமூகவலைதளத்தில் ஒரு பதிவை இட்டிருக்கிறார். அதில் அவர் தெரிவிப்பது என்னவென்றால் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் தற்போது நிகழ்ந்து வரும் துன்பங்கள் தொடர்பாக மருத்துவர் ஒருவரின் காணொளி பதிவு வேதனை தரும் விதமாக இருக்கிறது. நோய் தொற்று காரணமாக, ஏற்படும் துயரத்தை விட அதற்கு போதுமான சிகிச்சை கிடைக்காமல் பொதுமக்கள் அலைக்கழிக்க படுவது மிகுந்த வேதனையை உண்டாக்குகிறது என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது, தற்போது ஆட்சி மாறி இருந்தாலும் கூட காட்சிகள் எதுவும் மாறவில்லை என்ற எண்ணம் பொதுமக்களின் மனதில் ஆரம்பிக்க தொடங்கியிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். ஆகவே அரசு மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இல்லாமலும் மின்சாரம் இல்லாத காரணத்தால் வெண்டிலேட்டர் இயங்காமல் நோயாளிகள் உயிர் பிரிவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு துரித கதியில் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

முதலமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்டோர் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் நோய்த்தொற்று பாதித்தவர்களுக்கு போதுமான சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என அவர் தெரிவித்திருக்கிறார்.

கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் தமிழகம் முழுவதிலும் சுமார் 8 மணி நேரம் மின்வெட்டு இருந்தது. அப்போது பொதுமக்கள் எல்லோரும் மிகுந்த துயரத்திற்கு உள்ளானார்கள். இன்னும் சொல்லப்போனால் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றியை பதிவு செய்ததற்கு திமுகவின் இதுபோன்ற அலட்சியப் போக்கும் காரணம் என்று சொல்லலாம்.

அப்போது சரியாக மின்சாரம் கிடைக்கவில்லை அதனால் பராமரிப்பு பணி நடந்தது அதன் காரணமாக மின் தடை ஏற்பட்டது என்று 2006 ஆம் ஆண்டு ஆட்சிக்கு பின்னர் அந்த கட்சியின் சார்பாக பல விதங்களாக சமாதானம் சொல்லப்பட்டாலும் இப்போது இருக்கும் சூழ்நிலையில், நாட்டில் நிச்சயமாக மின்வெட்டு என்பது நிகழ்ந்தால் அது பொதுமக்களின் உயிரை குடிக்கும் ஒரு செயலாகவே பார்க்கப்படும்.ஏனென்றால் தற்போது நாடு அறிவிக்கப்படாத சுகாதார நெருக்கடி நிலையில் இருந்து வருகிறது.. தற்போது மின்வெட்டு ஏற்படுமானால் அது பொதுமக்களின் உயிரை குடிப்பதற்கு சமமாகும்.

ஆகவே தமிழகம் முழுவதிலும் அனைத்து துறைகளிலும் எந்த ஒரு குறைபாடும் நிகழாத வண்ணம் அனைத்து துறைகளிலும் நேரடியாக தன்னுடைய கவனத்தை செலுத்தி ஸ்டாலின் ஆட்சி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருந்து வருகிறது. ஒருவேளை அவர் கண்டுகொள்ளாமல் விட்டாரே ஆனால் நிச்சயமாக கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை தமிழகத்தின் நிலை என்னவாக இருந்ததோ அதே நிலை தற்போதும் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று ஒரு சிலர் கருதுகிறார்கள்.

அதேபோல திமுக ஆட்சி என்றாலே கட்டப்பஞ்சாயத்து போன்ற சம்பவங்கள் தமிழகம் முழுவதிலும் நடக்கிறது என்பதுதான் திமுக மீது வைக்கப்படும் மிகப் பெரிய குற்றச்சாட்டு. அதுபோன்ற எந்த ஒரு சம்பவங்களும் நடைபெறாமல் தன்னுடைய கட்சியை சார்ந்த பிரமுகர்களை தன் கட்டுக்குள் முதலமைச்சர் ஸ்டாலின் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தமிழகம் முழுவதும் எழுந்து வருகிறது.