TVK: காரைக்கால் வழக்கறிஞர்கள் தவெக கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினர் அட்டையை கிழித்து கட்சியை விட்டு விலகியுள்ளனர்.
விஜய் கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கையானது கிட்டத்தட்ட ஒரு கோடியை நெருங்கி உள்ளது. இவர் உறுப்பினர் சேர்க்கையை டிஜிட்டல் முறையில் அறிமுகப்படுத்தி உள்ளார். இதனால் எண்ணற்ற இளைஞர்கள் இதன் மூலம் தங்களை இணைத்துக் கொண்டனர். அதேபோல தனது சினிமா பயணத்தை முழுமையாக முடித்துக் கொண்டு அரசியலில் இறங்குவதாக தெரிவித்துள்ளார். இவ்வாறு இருக்கையில் பாஜக மற்றும் திமுகவிற்கு எதிராக தொடர் கண்டனம் தெரிவித்தும் வருகிறார்.
மேற்கொண்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் அதன் பொறுப்பாளர்கள் முறையாக மதிப்பு தருவதில்லை எனக் கூறி நிர்வாகிகள் வெளிநடப்பு செய்வது சமீபத்தில் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதியை சேர்ந்த தவெக மகளிர் அணி நிர்வாகி தனக்கு முறையான மதிப்பு அளிப்பதில்லை என்று கூறி, தான் ஏற்றிய கட்சி கொடியை மறுநாள் அவரே இறக்கினார்.
அதே போல தான், தற்பொழுது காரைக்கால் வழக்கறிஞர்கள் ஒன்று சேர்ந்து தங்களது உறுப்பினர் அட்டையை கிழித்து கட்சியிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். அந்தந்த மாவட்டத்தில் உள்ள பொறுப்பாளர்கள் தங்களுக்குரிய செயல் திட்டத்தில் முன்னுரிமை அளிப்பதில்லை. நாங்கள் தளபதி விஜய்க்காக தான் கட்சியில் இணைந்தோம்.
ஆனால் இங்குள்ள பொறுப்பாளர்கள் சரி இல்லை என்று குற்றம் சுமத்தியுள்ளனர். தொடர்ந்து மாவட்ட ரீதியான தலைமை நிர்வாகிகள் மீது புகார் வருவதை அடுத்து இதனை விஜய் கண்டுகொள்வாரா இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதெல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.