நள்ளிரவில் நண்பர்களிடையே கார் பந்தயம்! தாறுமாறாக ஓடிய கார் மரத்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு!

0
53

திருச்சி மாவட்டம் லால்குடி அருகிலுள்ள புள்ளம்பாடி பகுதியில் ஜெயதேவ் என்ற 22 வயது இளைஞரும், அவருடைய நண்பர் வினோமேத்திவ் என்பவரும் நேற்று இரவு தனித்தனி காரில் சமயபுரத்திலிருந்து லால்குடி நோக்கி சென்று கொண்டிருந்தார்கள்.

நள்ளிரவு நேரம் என்ற காரணத்தால், சாலைப்போக்குவரத்தின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதன்காரணமாக, நண்பர்கள் இருவருக்குமிடையே காரில் யார் முன்னே செல்வது என்று போட்டி உண்டானதாக சொல்லப்படுகிறது. அப்போது 2 பேரும் சாலையில் அதிவேகமாக சென்று கொண்டிருந்தார்கள்.

இதில் 2 கார்களும் சாலையில் சமமாக வந்தபோது திடீரென்று இரு கார்களும் ஒன்றை ஒன்று உரசிக் கொண்டதால் ஜெயதேவ் ஓட்டி சென்ற கார் சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் வேகமாக மோதி விபத்தில் சிக்கியது.

இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கிப்போனது. இதில் ஜெயதேவ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். வினோமேத்திவ் சென்ற கார் எதிரே வந்த சரக்கு வேன் மீது மோதி சிறிது தூரம் சென்று சாலையோரத்தில் நின்றது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதுதொடர்பாக தகவலறிந்த கொள்ளிடம் காவல் துறையை சார்ந்தவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கி பலியான ஜெயதேவ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

அதோடு விபத்தில் காயமடைந்த வினோமேத்திவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தார்கள். இந்த விபத்து தொடர்பாக கொள்ளிடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.