தமிழக அரசு வெளியிட்ட எச்சரிக்கை! வடமாநில தொழிலாளர்களுக்கு எந்த ஒரு பயமும் இல்லை வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை!
தமிழகத்தில் தற்போது அதிக அளவில் வடமாநில தொழிலாளர்கள் தான் பணியாற்றி வருகின்றார்கள். அதிலும் பீகார்,அசாம்,மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக உள்ளனர். முதன் முதலில் கட்டிட பணிக்காக வந்தவர்கள் தற்போது ஹோட்டல்கள்,மளிகை கடை வரை பணியாற்ற தொடங்கி விட்டனர்.
பனியன் நகரமான திருப்பூரில் அதிக அளவில் வட மாநிலத்தவர்கள் பணியாற்றுகிறார்கள். இது மட்டுமின்றி சென்னை,கோவை போன்ற பெருநகரங்களில் அரசு மற்றும் தனியார் கட்டிட பணிகள், சாலை பணிகளை வட மாநிலத்தவரே ஆக்கிரமித்து வருகின்றனர். அதிக அளவில் குவிந்து வரும் வடமாநிலத்தவரை கண்காணிக்க வேண்டும் என்று ஒரு சில அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக அண்மைக்காலமாக வதந்தி பரவி வருகின்றது.மேலும் இது தொடர்பாக பல போலி வீடியோக்களும் பரவியது. இந்த விவகாரம் பீகார் சட்டசபை வரை தற்போது சென்று விட்டது. நேற்று அம்மாநில சட்டசபையில் இந்த விவாகாரம் எதிரொலித்தது.
தமிழகத்துக்கு அனைத்து கட்சி குழுவை அனுப்ப வேண்டும் என்று எதிர் கட்சிகள் விடுத்த கோரிக்கையை அம்மாநில முதல் மந்திரி நிதீஷ்குமாரும் ஏற்றுக் கொண்டுள்ளார். மேலும் வட மாநில தொழிலாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
வட மாநிலத்தில் இருந்து இங்கு பணிபுரிய வரும் தொழிலாளர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் விதமாக ஹிந்தியில் அறிவிப்புகளை தமிழக காவல்துறை தனது இணையதளத்தில் வெளியிட்டு உள்ளது.வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கூறப்படுவது வதந்தி. அதை நம்ப வேண்டாம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோக்களும் போலி என்று தமிழக காவல்துறை கூறியுள்ளது.
இந்நிலையில் அமைச்சர் சி.வி கணேசன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சிவி கணேசன் கூறுகையில் பெருந்தொழில் மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் பல ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் பெருமளவில் முதலீடு செய்து வருகின்றது. அதில் பல மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் வந்து அமைதியான சூழ்நிலையில் பணியாற்றி மாநிலத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகின்றனர்.
அதுபோலவே தான் கட்டுமானம் மெட்ரோ ரயில் உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளிலும் வட மாநில தொழிலாளர்கள் பெருமளவில் ஈடுபட்டு அந்த துறைகளின் வளர்ச்சிக்கு தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றனர். அந்த தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அந்தந்த நிறுவனங்கள் வழங்கி வருகின்றது. அனைத்து நிறுவனங்களிலும் தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நல சட்டங்கள் கடைப்பிடிக்கப்படுவதை துறை மூலமாக உறுதி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டுக்கு வருபவர்களை நேசகரம் கொண்டு வரவேற்பது தான் தமிழ் மக்களின் பண்பாடு மற்றும் நடைமுறை எனக் கூறினார்.
விருந்தோம்பலுக்கு பெயர் போன தமிழ்நாட்டு மக்கள் தொழிலாளர் நலன் காக்கும் தமிழ்நாடு அரசும் இந்த உடல் உழைப்பு தொழிலாளர்களின் பங்களிப்பை நன்கு உணர்ந்து இருப்பதால் இணக்கமான அமைதியான சூழ்நிலையில் இங்கு அனைவரும் வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த சூழ்நிலையில் சில சமூக வலைதளங்களில் உண்மைக்கு மிகவும் மாறான தவறான உள்நோக்கத்தோடு வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் சில இடங்களில் தாக்கப்படுவதாக பரவி வரும் தகவல் முற்றிலும் வதந்தி இதில் எந்தவிதமான உண்மையையும் இல்லை என்பதை தமிழ்நாட்டில் இருக்கும் வடமாநிலத்தவர் உள்ளிட்ட அனைவரும் அறிவார்கள். தொழில் அமைதிக்கும் சமூக அமைதிக்கும் எப்போதும் பெயர் பெற்று விரும்பும் தமிழ்நாட்டில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றதாக செய்தி பரப்புவார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் மட்டுமல்லாமல் அனைத்து மாநில தொழிலாளர்களும் எந்த வித அச்சமும் இல்லாமல் அமைதியாக பணியாற்றி வருகிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.