அதிமுக எப்பொழுதும் கொள்கைப்படியே செயல்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கின்றார்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அதிமுக சார்பாக கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தமிழக துணை முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரும், மற்றும் அமைச்சர்கள் அதிமுக நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றார்கள்.
அந்த சமயத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, எந்த மதத்தையும் சார்ந்தவர்களாக இருக்கலாம் நாம் அனைவரும் தமிழர்கள் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வாழ்வது தமிழகத்தின் பெருமை என்று தெரிவித்திருக்கின்றார்.
தமிழ்நாட்டில் வேறு எந்த கட்சியிலும் இல்லாத அளவிற்கு, கிறிஸ்துவ சமுதாயத்தைச் சார்ந்த பலர் அதிமுகவில் பல பொறுப்புகளில் இருந்து வருகிறார்கள் என்று தெரிவித்த அவர், கிறிஸ்தவர்கள் புனித யாத்திரைக்கு தமிழக அரசின் சார்பாக அளிக்கப்பட்டு வரும் உதவி தொகை 20 ஆயிரத்தில் இருந்து 37 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று தெரிவித்தார்.
பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்து இருக்கின்ற காரணத்தால், மக்களவைத் தேர்தலில் கிறிஸ்தவர்கள், மற்றும் இஸ்லாமியர்களின், வாக்குகளை அதிமுகவால் பெற இயலவில்லை. என்று அந்தக் கட்சியின் தலைவர்களே மிக வெளிப்படையாக தெரிவித்தார்கள்.
எனவே கிறிஸ்துமஸ் விழாவில் உரையாற்றிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கின்றது. அந்தக் கொள்கையின் அடிப்படையில்தான் நாங்கள் செயல்படுவோம். கூட்டணி என்பது வேறு கொள்கை என்பது வேறு கொள்கை தான் எப்பொழுதும் நிலைத்து நிற்கும் அந்த கொள்கையின்படியே எங்களுடைய கட்சியானது நடக்கும். சிறுபான்மை மக்கள் யாரும் பயப்படத் தேவையில்லை. அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக அதிமுக எப்போதும் இருக்கும் என்று நம்பிக்கை அளிக்கும் விதமாக பேசி இருக்கின்றார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.