அதிபர் படுகொலையில் மீண்டும் ஒரு திருப்பம்! மேலும் ஒருவர் கைது!
கரீபியன் தீவில் அமைந்துள்ள மிகவும் ஏழ்மையான நாடு ஹைதி. அந்த நாட்டின் அதிபராக கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இருந்து வந்தவர் ஜோவனல் மோயிஸ். 53 வயதான இவர் கடந்த 7ஆம் தேதி தலைநகர் போர்ட் பிரின்ஸ்ல் உள்ள தனது வீட்டில் இருந்தபோது மர்ம கும்பலால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இதில் அவரது மனைவியும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறார்.
அதிபர் உயிரிழந்ததை தொடர்ந்து அந்நாட்டில் சர்ச்சைகள் பலர் நடந்தேறிக் கொண்டே இருக்கின்றன. இதற்காக அமெரிக்க மற்றும் ஓமன் நாட்டில் இருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இதனிடையே அவரை படுகொலை செய்த, 28 பேரை கொண்ட கூலிப்படையை போலீசார் கண்டுபிடித்து அவர்களில், 26 பேர் கொலம்பியாவில் சேர்ந்தவர்கள் என்றும், இரண்டு பேர் அமெரிக்கர்கள் என்பதும் தெரிந்து கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து அதிரடி தேடுதல் வேட்டையின்போது கூலிப்படையைச் சேர்ந்த மூன்று பேரை கண்டதும் சுட்டுக் கொன்றனர். மேலும் 17 பேரை கைது செய்தனர். அதேவேளையில் 8 பேர் தப்பி ஓடிவிட்டனர். தற்போது அங்கு அசாதாரண சூழ்நிலை நிலவினாலும் 8 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலைக்கு மத்தியில் இந்த படுகொலைக்கு மூளையாக செயல்பட்ட அமெரிக்க டாக்டர் ஒருவர் தற்போது போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து போலிஸ் தலைமை அதிகாரி லியோன் சார்லஸ் கூறும்போது, அதிபர் கொலையில் தொடர்புடைய முக்கிய நபராக அறியப்படும் 63 வயதான கிறிஸ்டியன் இமானுவேல் சனோன் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஹைதியில் பிறந்தவர். அதன் பின் அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் குடியேறியவர் என்றும், இவர் டாக்டராக இருக்கிறார் என்றும் தெரிவித்தார்.
இவர் அரசியல் நோக்கங்களுடன் தனி விமானம் மூலம் ஹைதி வந்துள்ளார். இவர் கொடுத்த வாக்கு மூலத்தின் மூலம் முதலில் ஜோவனல் மோயிஸ் கைது செய்வதே தங்களின் முதல் திட்டமாக இருந்ததாகவும், பின்னர் அது கைவிடப்பட்டு, மாற்றப்பட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இது குறித்து விரிவான தகவல்களை அவர் வழங்கவில்லை என்றும் கூறியுள்ளார். இதனிடையே ஹைதியின் பாதுகாப்பு நிலையை மதிப்பீடு செய்வதற்காக அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் நீதித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் பலர் நேற்று முன்தினம் ஹைதி சென்று வந்தனர்.
ஹைதியின் ஆட்சித் தலைவர் என தற்போது தாங்களாகவே கூறிக்கொள்ளும் மூன்று நபர்களையும் தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். இதற்கு முன்பே அதிபரின் படுகொலையை தொடர்ந்து நாட்டில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதாகவும், அதனை சமாளிக்க படையை அனுப்பி உதவுமாறு அமெரிக்காவிடம் கோரிக்கை வைத்தது ஹைதி. உறுதுணையாக இருப்போம் என்று அறிக்கை வெளியிட்ட அமெரிக்கா தற்போது அதனை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.