லோகேஷ் யூனிவர்சலில் ஒரு அங்கமாக இருக்க ஆசை… பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்

லோகேஷ் யூனிவர்சலில் ஒரு அங்கமாக இருக்க ஆசை… பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்

லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்துக்குப் பிறகு தற்போது விஜய் நடிக்க உள்ள படத்தை இயக்க உள்ளார்.

சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. இந்த படத்தில் அவர் கைதி திரைப்படத்தில் இடம்பெற்ற சில கதாபாத்திரங்களை சேர்த்து சுவாரஸ்யப்படுத்தி இருந்தார். இந்த கிராஸ் ஓவர் உத்தியை லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் என்று திரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதையடுத்து இப்போது அவர் தனது அடுத்த படத்துக்காக விஜய்யுடன் இணைய உள்ளார். இந்த திரைப்படத்தையும் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரான லலித்குமாரே தயாரிக்க உள்ளார். விரைவில் இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. இந்த படத்துக்கான திரைக்கதை பணிகளில் இயக்குனர் லோகேஷ் தற்போது ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் பாலிவுட் இயக்குனரான அனுராக் காஷ்யப் லோகேஷின் கைதி மற்றும் விக்ரம் ஆகிய படங்களைப் பார்த்து பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் “இரு படங்களும் எனக்குப் பிடித்திருந்தது.லோகேஷின் யூனிவர்ஸில் அங்கமாக இருக்க ஆசைப்படுகிறேன்” எனக் கூறியுள்ளார்.

அனுராக் காஷ்யப் தொடர்ந்து படங்களில் நடித்தும் வருவதால் அடுத்து லோகேஷ் இயக்கும் படத்தில் நடிப்பாரா என்ற கேள்வியும் இதன் மூலம் எழுந்துள்ளது. அனுராக் காஷ்யப் தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.