திருப்பதியில் இன்று தொடங்குகிறது பிரமோற்சவ விழா!

0
89

திருப்பதி ஏழுமலையான் சன்னதியில் இன்றைய தினம் பிரம்மோற்சவ விழா ஆரம்பமாகி வரும் 5ம் தேதி வரையிலும் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு கோவில் ஊர்கள் மற்றும் வெளிப்புறங்களில் பல வண்ண மலர்களாலும், விளக்குகளாலும் அலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது. வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதால் திருமலை முழுவதும் வண்ணமயமாக ஜொலிக்கிறது.

பிரம்மோற்சவ விழா நடைபெறுவதை முன்னிட்டு நேற்று மாலை அங்குரார்பணம் நடைபெற்றது. பிரமோற்சவத்திற்கு முந்தைய நாள் அங்குரார் பணம் நடைபெறுவது வழக்கம்.

நேற்று மாலை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் விஸ்வேஸ்வரர் மாடவீதியில் திருவீதி உலா வந்து ஏற்பாடுகளை பார்வையிட்டார். பின்னர் வசந்த மண்டபத்தில் விசுவகேஸ்வரருக்கு அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகள் செய்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு புதிய பானைகளில் நவதானியங்கள் விதைக்கப்பட்டது.

இந்த நிலையில் நாளைய தினம் திருப்பதி திருமலை கோவிலுக்கு வருகை தரும் ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆஞ்சநேயர் சாமி கோவிலில் இருந்து பட்டு வஸ்திரங்களை ஊர்வலமாக எடுத்துச் சென்று ஏழுமலையானுக்கு சமர்ப்பணம் செய்கிறார்.

இதனை எடுத்து இரவு 7 மணியளவில் தங்க கொடி மரத்தில் கருடக் கொடி ஏற்றப்படுகிறது. அதன் பிறகு ஏழுமலையான் சேஷ வாகனத்தில்ஸ்ரீதேவி, பூதேவியுடன் மாட வீதிகளில் உலா வருகிறார்

2வது நாள் காலை சின்ன சேஷ வாகனத்திலும், மாலை பெரிய சேஷ வாகனத்திலும், 3வது நாள் காலை சிம்ம லாகனத்திலும், மாலை முத்து பல்லாக்கு வாகனத்திலும்,4வது நாள் கல்பவிருட்ச வாகனத்திலும், மாலை சர்வ பூபால வாகனத்திலும், 5வது நாள் மோகினி வாகனத்திலும் மாலை தங்க கருட வாகன ஊர்வலம் நடைபெறுகிறது.

6வது நாள் அனுமந்த வாகனமும் மாலை தங்கத்தேர் வாகன சேவை நடைபெறுகிறது. 7வது நாள் காலை சூரிய பிரபை வாகனமும், மாலை சந்திர பிரபை வாகன வீதி உலாவும் நடைபெறுகிறது. 8வது நாள் காலை தேர் வீதி உலாவும், மாலை குதிரை வாகன வீதி ஊர்வலமும் நடைபெறுகிறது.

9வது நாள் காலை அங்குள்ள தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறுகிறது. மாலை கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.