சேலம் அருகே ரேஷன் அரிசியை கடத்திய இருவர் கைது

சேலம் அருகே ரேஷன் அரிசியை கடத்திய இருவர் கைது

சேலம் பகுதியில் ரேஷன் அரிசியை கடத்தியை இருவர் மினி லாரியுடன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் ரெட்டிப்பட்டி, மாமாங்கம், கருப்பூர் ஆகிய பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக சேலம் உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறைக்கு பொதுமக்களிடமிருந்து புகார் வந்துள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் ரெட்டிப்பட்டி பகுதியில் வாகனச் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த இரண்டு மினி லாரிகளை மடக்கி பிடித்து காவல் துறையினர் சோதனை செய்தனர்.

இந்தச் சோதனையில், ஒரு மினி லாரியில் 2.80 டன் ரேஷன் அரிசியும், மற்றொரு மினி லாரியில் 1.80 டன் ரேஷன் அரிசியும் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த வாகனங்களை ஓட்டி வந்த ஓட்டுநர்களைப் பிடித்து காவல் துறையினர் விசாரித்தனர். இதில் ஒருவர் , சேலம் சோளம்பள்ளத்தைச் சேர்ந்த விஜய் (34) என்பதும், மற்றொருவர் பழைய சூரமங்கலத்தைச் சேர்ந்த ஜாபர்(21) என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர். அவர்கள் கடத்திச் சென்ற 4.60 டன் ரேஷன் அரிசியும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து அவர்களிடம் மேலும் விசாரணை செய்ததில் ஓமலூர் அருகே உள்ள பூசாரிப்பட்டியைச் சேர்ந்த குமார் என்பவர் இதற்கு மூல காரணமாக இருந்து செயல்பட்டுள்ளார். அவர் சுற்றுவட்டார கிராம மக்களிடமிருந்து ஒரு கிலோ ரேஷன் அரிசியை தலா 5 ரூபாய்க்கு வாங்கி, அதை வெளிமாநிலங்களுக்கு கடத்திச் சென்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவது தெரிய வந்துள்ளது.

தற்போது கைது செய்யப்பட்ட இந்த வாகன ஓட்டுநர்களை ரேஷன் அரிசி கடத்தல் தொழிலுக்கு அவர் பக்கபலமாக வைத்துக் கொண்டதும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் பிடிபட்டவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பூசாரிப்பட்டி குமாரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.