சூர்யகுமார் யாதவ்வை டிவில்லியர்ஸோடு ஒப்பிடுவதா? ரிக்கி பாண்டிங்குக்கு பாகிஸ்தான் வீரர் பதில்

சூர்யகுமார் யாதவ்வை டிவில்லியர்ஸோடு ஒப்பிடுவதா? ரிக்கி பாண்டிங்குக்கு பாகிஸ்தான் வீரர் பதில்

சமீபத்தில் இந்திய அணியின் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ்வை டிவில்லியர்ஸோடு ஒப்பிட்டு பேசி இருந்தார் ரிக்கி பாண்டிங்.

சமீபகாலமாக டி 20 கிரிக்கெட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அசுர பார்மில் இருக்கிறார் சூர்யகுமார் யாதவ். இதனால் தரவரிசையில் தொடர்ந்து முன்னேற்றம் கண்ட அவர், இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக தனக்கான இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்நிலையில் ஆஸி அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் “சூர்யா  மைதானத்தைச் சுற்றி 360 டிகிரி ஸ்கோர் செய்கிறார், அவர் ஏபி டி வில்லியர்ஸ் செய்ததைப் போல ஷாட்களை ஆடி வருகிறார்” என்று கூறி இருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் “ஏபி டி வில்லியர்ஸ் விளையாடிய அளவுக்கு சமீபத்திய வரலாற்றில் கூட அவரைப் போல் யாரும் விளையாடியதில்லை என்று நினைக்கிறேன். அவர் ஏற்படுத்திய தாக்கம், அவரை அவுட் ஆக்க முடியாவிட்டால், போட்டியில் வெற்றி பெற முடியாது என்பது எதிர் அணிகளுக்குத் தெரியும், ”என்று கூறியுள்ளார்.

மேலும் “சூர்யகுமார் யாதவ் இப்போதுதான் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட ஆரம்பித்துள்ளார். அவர் திறமையானர். சிறப்பாக விளையாடியுள்ளார். ஆனால் அவரை நேரடியாக ஏபி டி வில்லியர்ஸுடன் ஒப்பிடுகிறீர்களா?. பாண்டிங் இன்னும் கொஞ்சம் காத்திருந்திருக்க வேண்டும். அவர் இன்னும் பெரிய போட்டிகளில் விளையாடவில்லை. ஏபி டி வில்லியர்ஸ் போன்ற ஒரு வீரர் இதுவரை இருந்ததில்லை என்பதுதான் உண்மை. நீங்கள் அவரை விவ் ரிச்சர்ட்ஸுடன் ஒப்பிடலாம்,” என்று பட் மேலும் கூறினார்.