வரலாற்றைத் திரித்து பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்கியதாக வழக்கு! நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வரலாற்றைத் திரித்து பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்கியதாக வழக்கு! நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வரலாற்றைத் திரித்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தை உருவாக்கியுள்ளதாகக் கூறி, இயக்குனர் மணிரத்னம் மீதான புகாரில் நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை அண்ணா நகரை சேர்ந்த வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவி, அதே பெயரில் இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள படத்தில், வரலாற்றை திரித்து இயக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய கதாப்பாத்திரமான வந்தியத்தேவன் பெயரை தவறாக பயன்படுத்தியதுடன், போர் தந்திரங்களில் சிறந்து விளங்கிய சோழர்களை அவமதிக்கும் வகையில் மணிரத்னம் வரலாற்றை திரித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசு மற்றும் இந்திய தொல்லியல் ஆய்வு துறையிடம் அளித்த புகார்களில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொன்னியின் செல்வன் நாவலை படித்திருக்கிறீர்களா என மனுதாரருக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், இல்லை எனத் தெரிவித்தார். நாவலை படிக்காத நிலையில், வரலாற்றை திரித்துள்ளதாக எப்படி கூற முடியும் எனவும், பொன்னியின் செல்வன் படம் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளதே தவிர, வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படவில்லை எனவும் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.